புதிதாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரப் போகிறீர்களா..?
பள்ளி, கல்லூரியில் நல்ல மார்க் எடுத்து, வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு, பல கம்பெனிகள் ஏறி இறங்கி, ஒரு வழியாக வேலை கிடைத்து விட்டது. ஆபர் லெட்டரும் கையில் ரெடியாக உள்ளது. சந்தோஷம் தான்.! என்றாலும் சில விஷயங்களை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
- உங்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பின்னர் உயர்த்தி தருகிறோம் என்ற வார்த்தைகளை நம்ப வேண்டாம். கையில் வாங்கும் ஊதியமே உண்மையான வருமானம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
- படிப்பு, இலக்கு ஒன்றாக இருக்க, சம்பந்தமில்லாத வேலை என்றால் அது உங்களுக்கான எதிர்காலத்தை, இலக்கை அடையும் எண்ணத்தை நிறைவேற்ற உதவுமா என்பதை சற்று சிந்தியுங்கள். முழு ஈடுபாட்டுடன் செய்யப்படும் வேலை மட்டுமே ஊதிய உயர்விற்கான வழி வகுக்கும். விருப்பமற்ற வேலையென்றால் வாழ்க்கையில் உங்களின் நாட்களும், நேரமும் வீணாகும் என்பதை உணருங்கள்.
- நீங்கள் வேலைக்கு சேரும் நிறுவனத்தில் உங்கள் வேலை நேரம் என்ன.. கூடுதல் நேரம் வேலை செய்தால் அதற்கான கூடுதல் சம்பளம் (அலவன்ஸ்) தருவார்களா, வாரவிடுப்பு உண்டா என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள். தொழிலாளர் விதிமுறைகளை பொருட்படுத்தாத நிறுவனம் என்றால் வேலைக்கு சேரும் முன்பு யோசியுங்கள்.
- நீங்கள் பிடித்த வேலையில் தான் சேருகிறீர்கள். சரி அங்கு வேலையில் சேர்ந்தால் ஏதேனும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா.? அங்கிருந்து நீங்கள் வெளியேறி வேறு வேலைக்கு செல்லும் போது நீங்கள் அதை விட பெரிய நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். வேலைக்கு சேரும் முன்பு இது குறித்து அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஆட்களை சந்தித்து உரையாடி உங்கள் சந்தேகங்கள் தீர்த்துக் கொள்ளுங்கள்.
- நீங்கள் வேலைக்கு சேர நினைக்கும் நிறுவனம் சமூகத்தில் நல்ல பெயரோடு இருக்கிறதா என்பதையும் பாருங்கள். தவறான காரியங்களில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தில் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்கு இந்த விசாரணை மிக அவசியம். நிறுவனத்திற்கான பிரச்சனை உங்களையும் பாதிக்கும். அந்நிறுவனத்திலிருந்து வெளியேறி வேறு நிறுவனத்திற்கு செல்லும் போதும் அது உங்களை பாதிக்கும். எனவே வேலை கிடைத்துவிட்டது. வருமானத்திற்கு பிரச்சனை இல்லை என தடாலடியாக கிடைத்த வேலையில் சேராமல் மேற்கூறிய விஷயங்களை சீர்தூக்கி பார்த்து வேலைக்கு செல்லலாம்.