மரக்கடையிலிருந்து பிக்பாஸ் வரை ஜி.பி.முத்து
கடந்த 2016ம் ஆண்டில் டிக்டாக் என்றதொரு சீன செயலி அறிமுகமானது. இந்த செயலி மூலம் நீங்கள் உங்கள் படைப்புகளான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என எதை வேண்டுமானாலும் பதிவேற்றலாம். உங்கள் ‘படைப்புகள்’ அனைத்தும் ஒரு நொடியில் உலகளவில் காணக்கிடைத்துவிடும்.
சாதாரண பாமர மக்களும் பயன்படுத்திய இந்த டிக்டாக் செயலியில் ஆபாச படைப்பாளிகள் தடம் பதித்ததால் பெரும் சர்ச்சையை சந்திக்க நேர்ந்தது. டிக் டாக் செயலியின் மூலமாக வெளியாகும் ஆபாசமான நடன அசைவுகள் சமூகச் சீரழிவிற்கு வழிவகுப்பதாக பலதரப்பில் இருந்தும் எதிர்வினைகள் கிளம்பியது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் டிக்டாக் இந்தியாவில் முழுமையாக தடை செய்யப்பட்டது. ‘டிக் டாக்’, மட்டுமின்றி 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த டிக்டாக் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் ஜி.பி.முத்து.
நாலு காசு சம்பாரிக்கனுமா.. உடனே மஞ்ச பைய தூக்கிட்டு சென்னைக்கு கிளம்பறது தான் அன்றைய சென்னையை தாண்டிய தமிழக மக்களின் வழக்கம். ஆனால் சென்னையிலிருந்து சுமார் 600 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடியில் இருந்து கொண்டு சுமார் 20 மில்லியன் மக்களை தன் வசம் திருப்பியவர் ஜி.பி.முத்து.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்துவின் முழு பெயர் கணேஷ் பிச்சை முத்து. இவர் தனது ஊரில் பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை வாங்கி அதை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.
டிக்டாக் பிரபலமான காலத்தில் பொழுது போக்கிற்காக அதில் பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார் ஜி.பி.முத்து. அப்போது பல்வேறு தமிழ்ப் பாடல்களை இமிடேட் செய்து வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் வைரலானது. மரக்கடையில் வேலை இல்லாத நேரத்தில் பொழுது போக்கிற்காக பேசி வந்த ஜி.பி.முத்துவின் முழு நாள் பொழுதே டிக்டாக்கில் செலவாகத் தொடங்கியது.
ரவுடி பேபி சூர்யா , சாதானா , சிக்கா ஆகியோருடன் இவர் பேசிய வீடியோ பெரும் வைரலானது. வட்டார மொழியில் இவர் அந்த பெண்களுடன் சண்டையிட்டு பேசிய பேச்சுக்களே பெரும் வைரலானது. சாதாரணமாக நடைபெறும் தெருச் சண்டைகளை சுவாரஸ்யத்துடன் பார்க்கும் மக்களின் மன உணர்வே இவரின் பேச்சுக்களை வைரலாக்கியது. நையாண்டியாக கிண்டலாக இவர் பேசிய வார்த்தைகள் சுவாரஸ்யம் ததும்புவதாக இருந்தாலும் மற்றொருபுறம் இவரின் பேச்சு பல்வேறு எதிர்ப்புகளையும் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் இவர் அசரவில்லை. நாள்தோறும் வீடியோக்களை வெளியிட்டு தன்னை பிரபலப்படுத்திக் கொண்டே வந்தார்.
‘நண்பர்களே’ என்ற வாக்கியம், இது ஒன்று தான் இவரது சொத்து. இதை தவிர்த்து தனது டிக்டாக் வீடியோவிற்கென பெரியதாக எதுவும் செய்ய மாட்டார். பேக் க்ரவுண்ட்டில் எந்தவொரு கிராஃபிக்ஸ§ம் கிடையாது. ஒரு நாளைக்கு குறைந்தது 40 வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவிற்கு, இந்திய அரசால் டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடை பேரிடியாக அமைந்தது. தற்கொலை செய்யும் அளவிற்கு அவரது மனநிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் அவர் டிக்டாக்கிலிருந்து யூடியூப் பக்கம் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கினார்.
கடந்த 2020ம் ஆண்டு மே 21ம் தேதி தனது யூடியூப் சானலை தொடங்கினார் ஜி.பி.முத்து. டிக்டாக்கில் டூயட் பாடியும், பெண்களிடம் சண்டையிட்டும் வைரலான இவரது பேச்சு யூடியூப் சானலில் வேறு தளத்தில் பயணப்பட வைத்தது. பெரிதான எந்த மெனக்கெடலும் இல்லை. தன்னை பற்றி வரும் விமர்சன கடிதத்திற்கு பதில் சொல்வது மட்டுமே இவரது நிகழ்ச்சி.
மாதத்திற்கு சுமார் 1000 விமர்சன கடிதங்கள் வரும். அவற்றை இவரது வட்டார மொழியில் வாசித்து அனைவரையும் மீண்டும் தன் வசமாக்கிக் கொண்டார். இன்ஸ்டாகிராமிலும் தடம் பதித்து வருகிறார். தினமும் எங்கு செல்கிறாரோ அதெல்லாம் இவரது நிகழ்ச்சியின் வீடியோவாகும்.
சமீபத்தில் மும்பை சென்று தாராவி பகுதியை விசிட் செய்ததையும் வீடியோவாக எடுத்துப் போட அதையும் சுமார் 2 லட்சம் மக்கள் பார்த்துள்ளனர். சொகுசு காரான ஆடி கார், பிஎம்டபிள்யு கார்களுக்கு முன்பு நின்று போஸ் கொடுத்த இவரது புகைப்படமும் பெரும் வைரலாகி, முத்து ஆடி கார் வாங்கிவிட்டார். பிஎம்டபிள்யு கார் வாங்கிவிட்டார் என அவரது ரசிகர்களை பேச வைத்துள்ளது. ஆனால் இவரோ தற்போது ஒரு செகண்ட் ஹேண்ட் காரில் தான் வலம் வருகிறார்.
“தான் மட்டும் இதற்கு பணம் போடவில்லை, தனது நண்பரும் கொடுத்த பணத்தின் மூலமாக தான் மிகவும் கஷ்டப்பட்டு இந்த காரை வாங்கியுள்ளதாக கூறும் ஜிபி முத்து, ஆசிரமங்களுக்கு தனது குடும்பத்துடன் சென்று உணவு வழங்குவது உள்ளிட்டவற்றிற்காகத் தான் இந்த கார் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
வில்லேஜ் குக்கிங், மைக் செட், மதன் கௌரி, மெட்ராஸ் சமையல், நக்கால்டிஸ், எருமசாணி போன்ற தமிழ் டாப் 10 யூட்யூப் சானல் லிஸ்டில் ஜி.பி.முத்துவின் சேனலும் ஒன்றானது. தொடங்கிய 16 மாதங்களில் ரூ.9.98 லட்சம் ரசிகர்களை தன்வசப்படுத்திக் கொண்டது ஜி.பி.முத்துவின் சானல். மாதம் ரூ.14 லட்சம் வருவாய் ஈட்டித் தருவதாக கூறுகிறது ‘சோசியல் பிளேடு’ நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம்.
இவரது பப்ளிசிட்டி, தொலைகாட்சிகளிலும் நிகழ்ச்சி நடத்தும் அளவிற்கு உயர்த்திச் சென்றுள்ளது. திரைப்பட நடிகர்களுக்கு விருது வழங்கும் முன்னணி யூட்யூப் சானலான BEHIND HOODS, Black sheep போன்ற நிறுவனங்களும் ஜி.பி.முத்துவிற்கு டிஜிட்டல் விருதுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் டிவியில் வெளியாக இருக்கும் பிக் பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியில் பங்கேற்கவும் ஜி.பி.முத்து ஒப்பந்தமாகியுள்ளதாக பேசப்படுகிறது.
கடைசி நேரத்தில் அது கை நழுவி போனாலும்.. பிக்பாஸ் சீசன் 6 ல் முதல் போட்டியாளராக உள்ளே சென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஜி.பி.முத்துவுக்கு அடுத்தடுத்த சினிமாக்களும் வெளியாக உள்ளது.
அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மதிப்பில் ஒரு செல்போன், ரூ.50 மதிப்பில் ஒரு ஹியர் போன். இது தான் ஜி.பி.முத்துவின் முதலீடு. இன்று உலகளவில் ஜி.பி.முத்துவைத் தெரியாத வலைதள வாசிகள் இல்லை என்ற அளவிற்கு அவரை உயரத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
– -நமது நிருபர்