இந்தியாவில் குறிப்பாக தமிழக மக்களின் சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் பொருள் பெருங்காயம். வாசனை பயிரான ஃபெருலா அசஃபோடிடா என்று அழைக்கப்படும் பெருங்காயத் தாவர வகையானது இந்தியாவில் போதிய அளவு கிடைக்காததால் சுமார் 1200 டன் பெருங்காயம் ஆண்டுதோறும் ஈரான், ஆப்கானிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இறக்குமதி செய்யப்படுகிறது.
குளிர்ந்த மற்றும் வறண்ட நிலங்கள் பெருங்காய விளைச்சலுக்கு உகந்ததாக இருப்பதால் இந்தியாவில், இமாலய பகுதிகளில் பெருங்காயம் பயிரிடும் திட்டத்துடன் ஐ.ஹெச்.பி.டி. என்ற இமாலய உயிரித்தொழில்நுட்ப நிறுவனமானது, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்ற (சி.எஸ்.ஐ.ஆர்.) ஆய்வகத்தின் உதவியுடன் இமாலயாவின் லாஹ§ல் சமவெளியில் உள்ள விவசாயிகளுடன் இணைந்து பெருங்காயத்தைப் பயிர் செய்யவிருக்கிறது.
ஈரானில் இருந்து 6 வகையான பெருங்காய விதைகள் தருவித்த இந்நிறுவனமானது இமாச்சலப் பிரதேச மாநில வேளாண்துறையுடன் இணைந்து லாகூர் சமவெளியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு பெருங்காயத்தைப் பயிரிடுவது குறித்த பயிற்சி முகாம்களை நடத்தியது.
கடந்த மாதம் 15ஆம் தேதி சிஎஸ்ஐஆர்-ஐஹெச்பிடி இயக்குனர் டாக்டர் சஞ்சய்குமார், லாஹ§ல் சமவெளியில் உள்ள க்வாரிங் கிராமத்தில் முதல் விதையை பயிரிட்டு தொடங்கி வைத்தார். இந்தியாவில் பெருங்காயம் பெருமளவு விளைவித்தால் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மிச்சம் தானே..!