திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்து திண்டுக்கல் செல்லும் சாலையில், துவரங்குறிச்சி அருகே உள்ளது வெங்கட்நாயக்கம்பட்டி. இங்கு கடவுள் விக்ரஹங்கள் முதல் தலைவர்கள் சிலை வரை கற்சிலைகளாக வடிவமைத்து தருகின்றனர். நாம் விரும்புவோரின் படத்தினை கொடுத்தாலும் அவர்களின் உருவங்களையும் தத்ரூபமாக சிலையாக வடித்து தருகின்றனர். 6 இன்ச் சிலை முதல் 40 அடி உயரம் வரை சிலை செய்து தருகின்றனர். இங்கு செய்யப்படும் சிலைகள் அனைத்தும் ஒரே கல்லினால் மட்டுமே செய்வது குறிப்பிடத்தக்கது.
இங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிலை வடிவமைத்து வரும் கார்த்திக் என்பவரிடம் பேசினோம். அப்போது அவர் கூறுகையில், “கோவில் சிலைகளுக்கு தேவையான கடினமான கற்களை சேலம், ராசிபுரத்திலிருந்தும், கடவுள் விக்ரகங்களை வடிக்க ஈரோட்டில் உள்ள ஊத்துக்குளியிலிருந்தும் கற்களை வரவழைக்கிறோம்.
கற்களில் நீரோட்டம் இல்லாத, கறுப்பு கற்கள் எனில் அவற்றில் வெள்ளை புள்ளிகள் இன்றி, தட்டினால் தெளிவான மணி போன்ற சத்தம் வரும். அது போன்ற கற்களை தேர்வு செய்தே சிலை வடிக்கிறோம்.
கடவுள் விக்ரகங்களை செய்யத் தொடங்கும் முன்பு முறையான ஆகம விதியை பின்பற்றி மிகவும் பொறுமையாகவும் கவனமாகவும் செய்ய வேண்டியிருக்கும். 5 அடி சிலை செய்வதற்கு நான்கு வார காலம் பிடிக்கும். சிலையில் ஆபரணங்களை வடிவமைக்கும் இறுதிக் கட்டத்திற்கு தான் மிகவும் பொறுமை தேவைப்படும்.
பெரும்பாலான சிலைகளை வரையாமலேயே வடிவமைத்து விடுவோம். விக்ரகங்களில் சக்கரத்தாழ்வார், நடராஜர் சிலைகள் செய்வதில் தான் பெரும் கவனம் தேவையாக இருக்கும். அவற்றை வரைந்த பின்னரே சிலையாக வடிப்போம்.
ஒரே கல்லில் முன்பக்கம் சக்கரத்தாழ்வாரும் பின் பக்கம் நரசிம்மரையும் செதுக்க வேண்டும். நடராஜர் சிலையில் அதிக கைகள் உண்டு. ஒவ்வொரு கைகளின் நளினத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. அதை கணித்தே நடராஜர் சிலையை வடிமைக்கிறோம்.
11 அடி உயரம் கொண்ட காளி சிலையினை விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள நரிக்குடி என்ற கிராமத்திற்கு செய்து கொடுத்திருக்கிறோம்.
கடவுள் விக்ரகங்களில் விநாயகர் சிலைகள் செய்வதற்கே நிறைய ஆர்டர் வரும். விநாயகர் சதுர்த்தியின் போது கொஞ்சம் அதிகமாக ஆர்டர் வரும். ஆனால் வருடம் முழுக்க விநாயகர் சிலைகள் செய்யும் ஆர்டர் வந்து கொண்டே இருக்கும். வீடுகளில் பூஜை அறையில் வைத்து பூஜிப்பதற்கும் சிலைகள் ஆர்டர் தருவார்கள். தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் எங்களிடம் சிலை வாங்க வருகின்றனர்.
தற்போது கற்சிலைகளுக்கு மாறாக, பிளாஸ்டிக் சிலைகள், அலுமினியம் போன்ற பல்வேறு வகையான சிலைகள் எல்லாம் வந்துவிட்டது. இதனால் கற்சிலைக்கான தேவை குறைந்திருந்துள்ளது. மேலும் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதால் கற்களின் விலையும் அதிகமாகியுள்ளது. இதனால் கற்சிலை செய்யும் தொழில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இங்கு நாங்கள் 10க்கும் மேற்பட்டோர் குடும்பமாக இருந்து இந்த தொழிலை செய்து வருகிறோம். கொரோனா காலகட்டத்தில் சிலைகளின் தேவை குறைந்து போனதால் எங்கள் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எங்களைப் போன்ற சிற்பக்கலைஞர்கள் வங்கிகளில் மானியத்துடன் கடன் உதவி வழங்கியும், நலவாரியம் அமைத்து உதவவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது” என்றார்.
– இப்ராகிம்