ஆயில் தயாரிப்பில் அதிக வருமானம்!
ஆயில் தயாரிப்பில் அதிக வருமானம்!
தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என எண்ணெய் இல்லாத சமையலை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நம் சமையல் முறையில் அசைக்கமுடியாத இடம் பிடித்திருக்கிறது எண்ணெய். சமையலுக்கு மட்டுமின்றி மருத்துவம், அழகு துறையில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.
நம் வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாக விளங்கும் எண்ணெய் தயாரித்து முறையான சந்தைப்படுத்துதலில் ஈடுப்பட்டால் நிச்சயம் நல்ல வருமானம் பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை.
நிலக்கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள் தான் இத்தொழிலுக்கான முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம். ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும் பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் மூலம் தயார் செய்யலாம்.
எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டிடமும், இயந்திரமும் தான். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தவாறு கட்டிடமும் தேர்வு செய்து கொள்ளலாம். எக்ஸ்பெல்லர், வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். முதலீடாக 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.
இயந்திரங்கள் இயக்க சரியான வேலையாட்கள் அமர்த்தி வியாபாரத்தை துவங்கலாம். தினசரி தயாரிக்கும் எண்ணெய்களை லிட்டர் கணக்கில் பேக்கிங் செய்து அருகில் இருக்கும் மளிகை கடைகள், சந்தைகளில் விற்பனையை தொங்கலாம். தொடர்ந்து முறையான சந்தைப்படுத்துதலில் ஈடுப்பட்டால் பல்வேறு பகுதிகளுக்கும் டெலிவரி செய்து விற்பனையை பெருக்கலாம்.