தர்மத்தை அனுஷ்டிக்க நினைப்பவனுக்கே தர்ம சங்கடம் எழும். அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று கருதுபவனுக்கே அறச்சிக்கல்கள் எழும். அறம் செய்ய விரும்பு என்கிறாள் மூதாட்டி. அறம் செய் என்று கட்டளையிடவில்லை. அறம் செய்ய விரும்பு என்று கோருகிறாள். அறம் செய்வது அவரவர் விருப்பம். விரும்பாமல் வேறு செய்தாலும் குற்றம் இல்லை. ஆனால், அது அறத்திற்குப் புறம்பான செயல்.
ஒரு தொழில் செய்வதில் அறம் பேண வேண்டுமா? என்ற கேள்விக்கு, அவசியம் பேணப்பட வேண்டும், அவசியமில்லை என இரண்டு பதில்களே உள்ளன.
ஒரு ஜனநாயக நாட்டின் சட்டதிட்டங்கள்படி இன்ன தொழிலைச் செய்வதே குற்றம் என்று இருந்தால் அத்தொழிலை அந்நாட்டில் செய்ய முடியாது. மீறிச் செய்தால் தண்டனைக்குரிய குற்றம். இங்கு கவனிக்க வேண்டியது சட்டத்திற்குப் புறம்பான என்பதை; அறத்திற்குப் புறம்பான என்று சொல்லவில்லை.
சட்டத்திற்குப் புறம்பில்லாத, சட்டதிட்டங்கள்படி குற்றம் என்று கருத முடியாதவையே தழைக்கும் தொழில்கள். பிழைப்பிற்கு என ஒரு ஜனநாயக நாட்டின் குடிமகன் அவை யாவற்றையும் செய்யலாம், பங்குபெறலாம், பொருளீட்டலாம், வாழ்வாதாரம் பெறலாம். ஆனால் அத்தொழில்கள் யாவற்றிலும் அறத்திற்குப் புறம்பான கூறுகள் இல்லை என்று சொல்வதற்கில்லை.
உதாரணமாக, சிகரெட் பிடிப்பது குற்றமில்லை. எச்சரிக்கைகளும் அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றே அறிவிக்கின்றன. இன்று(ம்) பலரும் சிகரெட் பிடிக்கிறோம். அது நம்மைப் பிடித்துக்கொள்ளும்வரை பிடிக்கிறோம். தொழிலாக அந்த சிகரெட்டைச் செய்வது அறம் சார்ந்த சிக்கலைச் சிலரிடத்தே எழுப்பலாம். இப்படி ஒரு தீய பழக்கத்தை வளர்தெடுப்பதற்குத் துணைபோகிறேனே என்று. இதுவே அறச்சிக்கல்.
செய்யும் தொழிலில் பாவம் என்பதை நோக்க வேண்டும். சட்டப்படி குற்றமில்லை என்பதால் தானே ஒரு நாட்டில் ஒருவகை வேலை புழக்கத்தில் உள்ளது. ஆனால் அத்தொழில் அறம் சார்ந்ததா என்றால் அது தனிமனித மனத்தைச் சார்ந்தது.
அறச்சிக்கலை தீர்க்க வழி
தொழிலில் தனி மனிதனுக்கான அறச்சிக்கலை தீர்க்க வழி அவனது அகவளர்ச்சியே. பிழைப்பிற்காகவே ஒரு பணியைச் செய்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும். மனத்தின் அழைப்பிற்காக அல்ல. நம் மனம் விரும்பும் அழைப்பு எனும் செயலைத் தொழிலாய்ச் செய்வதில் என்றுமே நமக்கு அறச்சிக்கல்கள் எழாது, யோசித்துப்பாருங்கள்.
அதனால் வாழ்க்கையின் ஏதோ நிலையில் நாம் செய்யும் தொழில் பிழைப்பிற்காகவே என்றும் அதில் இவ்வகை அறச்சிக்கல்கள் உள்ளன என்றுமாகிவிட்டால் நமக்கு அழைப்பு எனும் வகையில் விருப்பமான தொழில் எது என்பதையும் யோசித்துக்கொள்ள வேண்டும். இந்தப் புரிதலுக்குப் பின்னர் எத்தனை இயலுமோ அத்தனை அழைப்பு சார்ந்த அந்தத் தொழிலை அல்லது அத்தொழில்துறையில் பிழைப்பைத் தொடர்வதற்கான வழிவகைகளையே மேற்கொள்ள வேண்டும்.
அக/மன வளர்ச்சியே அறத்தை கற்றுக்கொடுக்கும். அக வளர்ச்சியே புரிதல்களைக் கூட்டும் குழப்பங்கள் சில நீங்கித் தெளிவுகள் பிறக்கும்.
சாராயக் கடையில் வேலை செய்பவர் அது தவறோ என்கிற அறச்சிக்கலுக்குள் விழுந்துவிட்டார் என்று கருதுவதைவிட அந்த அறச்சிக்கலை தன்னுள் எழுப்பிக்கொள்ளும் அகவளர்ச்சி நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்டுவிட்டார் எனலாம். பார்க்கப்போனால் அவரே சாராயக் கடையில் வேலை செய்யத் தகுதியானவர் எனலாம்.
குடிக்க வருபவர்களை அறச்சிக்கலினூடே நோக்கி அவர்கள் சிறுவர்களாய் இருப்பின் கடிந்து துரத்தி விடுவார். பெண்களாய் இருப்பின் பேசித் திருப்பி அனுப்பலாம், மொடா குடியர்களையும் குறைவாகக் குடிக்க வழி செய்யலாம்.