பிசினஸில் பாதுகாப்பானது லெட்டர் ஆப் கிரடிட்…!
எல்சி (LIC) என சுருக்கமாக அழைக்கப்படும் லெட்டர் ஆஃப் கிரடிட் கடிதம் (LETTER OF CREDIT) வணிக நடவடிக் கைகளில் முதன்மையான பங்காற்றுகின்றன. லெட்டர் ஆஃப் கிரடிட் ஒர் ஒளிவு மறைவற்ற, பாதுகாப்பான ஆவணம் ஆகும்.
பொதுவாக பொருட்களை கொள்முதல் செய்பவரிடம் இருந்து, அதற்கான தொகை கிடைப்பதற்கு சில நேரங்களில் அதிக காலம் ஆகிறது. உடனடியாக விற்பனைத் தொகை கிடைக்க இந்த லெட்டர் ஆஃப் கிரடிட் ஏதுவாக அமைகின்றது. அதாவது எல்சி கொள்முதல் செய்பவரின் நம்பகத் தன்மையை உறுதி செய்கிறது.
பொருட்களை வழங்கிய நாளில் இருந்து அதற்கான தொகை விற்பனையாளருக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கான உறுதிமொழியாக இந்த லெட்டர் ஆஃப் கிரடிட் பயன்படுகின்றது. எல்.சி. பெற்று விட்டால் தொகை பற்றிய கவலை இல்லாமல் பொருட்களை அனுப்பலாம்.
எல்சி பெற்றவர் அதன் இறுதி நாள் வரை காத்திருக்காமல், தேவையெனில் வங்கியில் இதனை முன்னரே கொடுத்து தொகையை உரிய கட்டணத்துடன் பெற்றுக் கொள்ளலாம். பொருட்களை அனுப்பி வைத்தவுடன் விற்பனையாளரின் கடமை முடிந்து விடும். வழியில் ஏற்படும் இழப்புகளுக்கு விற்பனையாளர் பொறுப்பு ஆக மாட்டார். அந்த பொருளிற்கான தொகையும் ஏற்கனவே கிடைத்து விட்டது. உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடு களில் கூட இந்த லெட்டர் ஆஃப் கிரடிட் பயன்படுத்த முடியும். நாடு விட்டு நாடு பொருட்களை கொண்டு செல்லும் போது ஏற்படும் இழப்பும் விற்பனையாளரை பாதிப்பது இல்லை.
லெட்டர் ஆஃப் கிரடிட் எப்படி செயல்படுகிறது?
கொள்முதல் செய்பவர், குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்காக லெட்டர் ஆஃப் கிரடிட் ஒன்றினை உருவாக்கி தன் வங்கிக் கிளைக்கு அனுப்பி அதனை ஏற்று உறுதிப்படுத்துமாறு கோருவார்.
அந்த நிறுவனத்தின் கடந்த கால நிதி நடவடிக்கையின் நம்பகத் தன்மையின் அடிப்படையில் அதனை வங்கி ஏற்கும் அல்லது மறுக்கும்.
எல்சி-யில் குறைகள் அல்லது முரண்பாடுகள் ஏதேனும் இருந்தால், அதனை சரி செய்து அனுப்புமாறு அந்த எல்சி-யை திருப்பி அனுப்பும். ஏற்கப்பட்டது எனில் லெட்டர் ஆஃப் கிரடிட் விற்பனையாளருக்கு, கொள்முதல் செய்பவரால் அனுப்பி வைக்கப்படும். விற்பனையாளர் இந்த லெட்டர் ஆஃப் கிரடிட் கடிதத்தை தன் வங்கிக் கிளையில் (எல்சியில் குறிப்பிட்டு உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு) வழங்க வேண்டிய நாளில் வழங்குவார்.
இவ்வாறான நடைமுறைகளில் எல்சி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உள்ளவாறு, குறிப்பிட்ட பொருட்களை அல்லது சேவைகளை எல்சி அடிப்படையில் வழங்கும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு முடிவு பெறும்.