பங்குச்சந்தையில் கால்பதிக்கும் எல்ஐசி – யாருக்கு லாபம்!
எல்.ஐ.சி. உலகின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனம் மட்டுமின்றி இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமாகவும் உள்ளது. எல்ஐசியில் நாம் ஒரு பாலிசி போட்டால் அது முதிர்ச்சியடைந்த உடன் நமக்கு திருப்பித் தருவார்கள். அல்லது இறந்து போனால் குடும்பத்திற்கு பாலிசி தொகையை வழங்கிவிடுவார்கள். இத்துடன் எல்ஐசியின் பணி முடிந்துவிடுவதாக நாம் நினைத்தால் அது தவறு. இந்திய பொருளாதார சரியும் போதெல்லாம் அதை தாங்கி மீட்டெடுப்பதில் எல்ஐசி முக்கிய பங்காற்றி வருகிறது என்பது தான் சரி.!
பங்குச் சந்தை வீழ்ச்சியின் போதும் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்றுப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இப்படியாக பொருளாதாரத்தில் யானை பலம் கொண்ட எல்ஐசியின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு மேற்கொண்டிருப்பது நாடு முழுக்க பெரும் சலசலப்பை உண்டாக்கி வருகிறது.
எல்ஐசி 66 ஆண்டுகால சரித்திரம் கொண்டது. இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேருவால் கடந்த 1956 செப்டம்பர் 01ல் உருவாக்கப் பட்டது தான் எல்ஐசி. ரூ.5 கோடி மூலதனத்தில் உருவாக்கப்பட்ட இந்த எல்ஐசி நிறுவனம் கடந்த 2020-&21 நிதியாண்டில் மட்டும் மொத்த வருமானமாக ரூ.6,82,205 கோடியை ஈட்டியுள்ளது. இதில் பிரிமியம் வருவாயாக ரூ.4,02,844.81 கோடியைப் பெற்றுள்ளது. எல்.ஐ.சி.யின் இன்றைய மொத்த சொத்து ரூ.38,04,610 கோடி.
40.62 கோடி காப்பீடுகளை (தனிநபர் காப்பீடு பெற்றிருப்பவர்கள் 28.62 கோடி. குழுக் காப்பீடு பெற்றிருப்பவர்கள் 12 கோடி) விற்பனை செய்து, உலகிலேயே மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக விளங்கும் இந்நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 8 மண்டல அலுவலகங்கள், 113 கோட்ட அலுவலகங்கள், 2,048 கிளை அலுவலகங்கள், 1,546 துணை அலுவலகங்கள், 1,08,987 ஊழியர்கள், 13,53,808 முகவர்கள் என விரிந்த, பரந்த கட்டமைப்பைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஆயுள் காப்பீட்டுச் சந்தை வணிகத்தில், புது வணிக பாலிசி விற்பதில் 78.58% பங்கையும், முதல் பிரிமிய வருவாயில் 66.18% பங்கையும் பெற்று முன்னணி நிறுவனமாக எல்ஐசி தனியார் நிறுவனங்களுக்கு எதிராக தலைநிமிர்ந்து நிற்கிறது எல்ஐசி. காரணம் அதன் நம்பகத்தன்மை. காப்பீட்டு வணிகத்தின் அடித்தளமே அதன் நம்பகத்தன்மைதான். மக்களின் பணம் மக்களுக்கே என்ற நோக்கத்தில் செயல்படும் எல்ஐசி மக்களிடமிருந்து திரட்டும் சேமிப்புகளை மத்திய, மாநில அரசு, மற்றும் பல்வேறு நலப்பணித் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்துவருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வரும் உபரிநிதியில் 5% மத்திய அரசுக்கு லாப ஈவுத் தொகையாகவும், 95% பாலிசிதாரர்களுக்கு போனஸாகவும் எல்ஐசி வழங்குகிறது. கடந்த நிதியாண்டில் கிடைத்த உபரியில் ரூ.2,698 கோடியை லாப ஈவுத் தொகையாக மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது எல்ஐசி. 2015ல் ஓஎன்ஜிசியின் (ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்) பங்குகளை பங்குசந்தையில் விற்ற போது எல்.ஐ.சி அந்த நிறுவனத்தில் 1.4 பில்லியன் டாலர் முதலீடு செய்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐடிபிஐ வங்கி வாராக்கடன்களில் மூழ்கியபோது எல்.ஐ.சி மீண்டும் வந்து காப்பாற்றியது.
இப்படியான சூழலில் பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்து, அதன் மூலம் 2021&-22-ம் நிதி ஆண்டில் ரூ.1.72 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. இதன் ஒரு பகுதியாக கடன் இல்லாமல், அதிக சொத்து மதிப்புடன் இயங்கி வரும் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தை மூலம் விற்பனை செய்யவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. எல்.ஐ.சி பங்கு வெளியீட்டின் மூலம் மட்டும் 90,000 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த மதிப்பில் இந்தியாவில் எந்தவொரு ஐ.பி.ஓ-வும்
(INITIAL PUBLIC OFFER) இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இவ்வாறு கடந்தகால பேச்சுக்கள் நிலவிக் கொண்டிருந்த நிலையில். இதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சரவை எல்.ஐ.சியின் ஐபிஓ வெளியிடுவதற்கு ஒப்புதல் வழங்கியது.
இதைத்தொடர்ந்து தற்போது எல்ஐசி தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்திய அரசு லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் சட்டம் 1956 செய்துள்ள திருத்தம் மூலம் பாலிசிதாரர்களுக்கு ஆதரவாக முன்மொழியப்பட்டுள்ள முதல் பொது பங்கு வழங்குதலில் ஐபிஓ-வை போட்டி அடிப்படையில் பங்குகளை ஒதுக்கீடு செய்ய எல்ஐசிக்கு அனுமதி அளித்துள்ளது.
இதற்காக காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் ஒரு விதியின் கீழ் செயல்பட்டாலும். எல்.ஐ.சி.-க்கு உள்ள சிறப்புப் பிரிவின் 1956-ம் ஆண்டு எல்.ஐ.சி. சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதனால், இந்த விதிகள் தற்போது ஐபிஓ-வுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
மும்பை கமிஷனர் ஹேமந்த் கார்கரே, உயிரிழந்த 24 மணிநேரத்திற்குள் அவருக்கான எல்ஐசி பாலிசி தொகை ரூ.20 லட்சம் அவர் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. அதே குடும்பம் தனியாரிடம் செய்யப்பட்ட காப்பீட்டு தொகையை பெற நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் நிலை ஏற்பட்டது.
பொன்.வேலுச்சாமி
மேலும் இதன் மூலம் விற்பனை செய்யப்படும் பங்குகளில் பாலிசிதாரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு இதற்காக பாலிசிதாரர்கள் இரண்டு முக்கிய விஷயங்களை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தற்போது எல்.ஐ.சி. நிர்வாகம் விளம்பர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் பங்குசந்தையில் முதலீடு செய்வதற்கு DEMAT கணக்கு அவசியம் என்பதால் பங்கு வாங்க விரும்பும் பாலிசிதாரர்கள் உடனடியாக DEMAT கணக்கு தொடங்க வேண்டும் என்றும் எல்.ஐ.சி. அறிவித்துள்ளது. DEMAT கணக்கு தொடங்க மற்றும் பராமரிப்பு செலவுகளை பாலிசிதாரர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விவரங்களுக்கு முகவர்களை அணுகலாம் என்றும் எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது.
மேலும் பாலிசிதாரர்கள் தங்களது PAN கார்ட் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் PAN கார்ட் இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற வேண்டும் என்றும் எல்.ஐ.சி. வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் எல்ஐசியில் சுயவிபரங்களை அதாவது www.licindia.in என்ற இணைய முகவரியில் உங்களது வருமான வரி நிரந்தர கணக்கு எண், பிறந்த தேதி, பாலினம், மின்னஞ்சல் அடையாளம், தொலைபேசி எண், போன்ற முழு விவரங்களை மேலும் எல்ஐசி பாலிசி நம்பர் உள்ளிட்டவற்றையும் பதிவு செய்ய கூறப்பட்டிருக்கிறது. மேலும் டீமேட் கணக்கு துவக்க மற்றும் பதிவு செய்ய வைப்புத்தொகை பங்கேற்பவர்களின் விவரங்களை எல்ஐசியின் இணைய முகவரியில் உரிய ஆவணங்களுடன் இணைத்தால் போதுமானது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் எல்.ஐ.சி.யை பங்குசந்தையியல் பட்டியலிடுவதை ஏற்க முடியாது என்று ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அகில இந்திய LIC முகவர்கள் சங்கம் (LICA01) தென்மண்டல குழு (தமிழகம் கேரளா புதுவை) உறுப்பினர் பொன்.வேலுச்சாமி நம்மிடம் கூறுகையில், எந்த நோக்கத்திற்காக தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்டதோ அந்த நோக்கம் சிதைக்கப்பட்டிருக்கிறது.
நாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றது. INSURANCE REGULATED GOVERNMENT AUTHORITYஎன்ற அமைப்பை உருவாக்கி படிப்படியாக எல்ஐசியின் உரிமைகளை கட்டுப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் ரூ.100 கோடி வைப்பத் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கை உருவாக்கப்பட்டது. ஆனால் எல்ஐசிக்கு ரூ.100 கோடி என்பது ஒரு பொருட்டல்ல.
2008ல் உலகத்திலேயே மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமாக இருந்து ஏஐசி தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை. அது போன்ற பிரச்சனைகளை எல்ஐசி சந்திப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. எல்ஐசி நிறுவனத்தில் இதுவரை 99.76 டெத் கிளைம் கொடுத்திருக்கிறார்கள். 97 சதவீதம் மெச் சூரிட்டி கொடுத்திருக்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் அதிகபட்சமாக இது வரை 33 சதவீதம் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.
கேரளா பெருவெள்ளம், ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்கள் தமிழகத்தில் நடைபெற்ற புயல் தாக்குதல்கள் போன்ற இடங்களில் இறந்தவர்களுக்கு பாலிசி பாண்டோ, சான்றோ கேட்காமல் உடனுக்குடன் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
மும்பை தாஜ்கோரமண்டல் தாக்குதலில் காவல்துறை ஆணையர் ஹேமந்த் கார்கரே, உயிரிழந்த 24 மணிநேரத்திற்குள் அவருக்கான எல்ஐசி பாலிசி தொகை ரூ.20 லட்சம் அவர் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. அதே குடும்பம் தனியாரிடம் செய்யப்பட்ட காப்பீட்டு தொகையை பெற நீதிமன்றத்தில் வழக்குதொடுக்கும் நிலை ஏற்பட்டது. அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரிக்கே இந்நிலை என்றால் கடைகோடி ஏழை மக்கள் தனியார் நிறுவனங்களில் காப்பீடு செய்தால் அவர்களால் அத்தொகையை எப்படி பெற முடியும்” என்றார்.
2020-&21-ம் நிதி ஆண்டின் பட்ஜெட்டில் நிதியமைச்சர், “பிரிவு 37 (Sovereign Guarantee Section 37 in The Life Insurance Corporation Act,1956) அளிக்கும் மத்திய அரசின் `Sovereign Guarantee’என்ற உத்தரவாதம் எல்.ஐ.சி பாலிசிகளுக்கு தொடரும்” என்று அறிவித்திருக்கிறார்.
மேலும், எல்.ஐ.சி-க்கு கடன் எதுவும் இல்லை என்பது மிகப் பெரிய பாசிட்டிவ் அம்சம். ஒருவேளை எல்ஐசி நஷ்டம் அடைந்தால் நாம் கட்டிய பணத்திற்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறது ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். இந்திய மக்களுடனான எல்ஐசியின் பிணைப்பு நிரந்தரமானது.
பங்கு சந்தையில் தடம் பதிக்கும் எல்ஐசியின் பங்குகள் சரிவை சந்தித்தாலோ வரும் காலத்தில் பங்குகள் முழுமையாக தனியாருக்கு வழங்குவதன் முலம் எல்ஐசி தனியார்மயமாக்கப்பட்டோலோ அது கண்டிப்பாக பாலிசிதாரர்கள் மட்டுமே பாதிப்பதில்லை. இந்தியாவின் வளர்ச்சியையும் சேர்த்தே பாதிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-இப்ராகிம்