உயிர்களைக் காக்கும் ‘உயிர்த்துளி’..!
திருச்சியின் இரத்த தேவைகளுக்கான உடனடி தீர்வாக விளங்கி வரும் ‘உயிர்த்துளி’ இரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி மையமானது, 2018ல் தொடங்கப்பட்டு, 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது.
திருச்சி, தில்லைநகர் 8வது கிராஸ் (மேற்கு), என்ற விலாசத்திலிருந்து செயல்படும் ‘உயிர்த்துளி’ ரத்த வங்கியின் 3 ஆண்டு காலப் பயணத்தில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு மேல் இங்கு இரத்ததானம் செய்திருக்கின்றனர். இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பது ‘உயிர்த்துளி’யின் தொடர் பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
இரத்தங்களைப் பாதுகாப்பதற்கான உயர்தொழில்நுட்ப வசதிகள், தட்டணுக்கள் மற்றும் ஸ்டெம்செல்களை இரத்தத்திலிருந்து பிரிப்பதற்கான நவீன இயந்திரம் உள்ளிட்ட உயர்தர மருத்துவமனையின் கட்டமைப்பிற்கு இணையாக, அனைத்து வகை உயர்தர இயந்திரங்களையும் கொண்டுள்ள ‘உயிர்த்துளி’ ரத்த வங்கியில் எடுக்கப்பட்ட ஸ்டெம்செல் வழியாக ஏழு நபர்கள் சிகிச்சை பெற்று உடல் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.பி.எஸ். முடித்து, இரத்தத்திற்கான சிறப்பு மருத்துவ பிரிவை படித்துள்ள ‘உயிர்த்துளி’ நிறுவனர் மருத்துவர் பிரபாகரன், இரத்ததானம் குறித்து நம்மிடம் கூறுகையில்,
“உயிர்த்துளி’ தொடங்கியதன் நோக்கம் ரத்தம் இல்லை என்று கூறி இனி எந்த ஒரு உயிரும் இறக்கக்கூடாது என்பதே. இந்திய மக்கள் தொகை 130 கோடியை தாண்டி விட்டது, அதில் 1 சதவீத மக்கள் இரத்தத்தை கொடையாக வழங்கினாலே போதும், நாட்டில் இரத்தத் தேவைக்கான தட்டுப்பாடு என்பதே இருக்காது. ஆனால் 1 சதவீத மக்கள் கூட இரத்த தானம் செய்வதில்லை என்பதே உண்மை. இரத்ததானம் செய்வதில் பலருக்கும் பல தயக்கம் இருக்கிறது.
ஒருவர் ரத்ததானம் செய்வதன் மூலம் அவருக்கு ஞாபகத்திறன் அதிகரிக்கும். ஹாட் அட்டாக் ஏற்பட வாய்ப்பு குறைவு. உடலில் புது இரத்தம் சுரக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்ததானம் என்பது உடல் வலிமை காண ஒரு உந்துசக்தியாக விளங்குகிறது.
ஒருவர் ரத்ததானம் செய்தால் அதை உடனுக்குடன் மற்றவர்க்கு செலுத்த முடியும் என்பதெல்லாம் தவறானது. திரைப்படங்களில் இது போன்று காட்டப்படும் காட்சிகள் சாத்தியம் இல்லாதவை.
ஒருவருடைய உடம்பில் இருந்து எடுக்கப்படும் ரத்தமானது எச்ஐவி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இப்பரிசோதனைகளுக்கு குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் கால அவகாசம் ஏற்படும் என்பதே நிஜம். பாதிக்கப்பட்டவருக்கு உடனே ரத்தம் தேவைபடுவதன் காரணமாகவே ரத்த வங்கி முக்கியத்துவம் பெறுகிறது.
18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலாரும் இரத்ததானம் செய்ய தகுதியுடையவர்கள். இரத்த தானம் செலுத்துபவரின் உடல் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் 12 கிராம் இருக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்ததானம் செய்ய முடியும்.
தற்போது அனைவரிடமும் எழக்கூடிய ஒரு கேள்வியாக இருப்பது, கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இரத்ததானம் செய்யலாமா என்பதே. கண்டிப்பாக செய்யலாம். ஊசி போட்டு 14 நாட்களுக்கு பிறகு இரத்ததானம் செய்ய முடியும்.
அலர்ஜிக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், தலைவலி, தைராய்டு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் கூட இரத்ததானம் செய்யலாம், அதே வேளையில் காய்ச்சல் உள்ளவர்கள் குறிப்பிட்ட நாள் கழித்து தான் இரத்ததானம் செய்ய வேண்டும். இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் இரத்ததானம் செய்ய முடியாது.
மக்களிடம் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிப் பருவத்திலிருந்தே மாணாக்கர்களுக்கு இரத்ததானம் அளிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தினால் ரத்தம் இல்லை என்று உயிரிழக்கும் மரணங்களை தடுக்க முடியும். இரத்ததானம் செலுத்த செலவிடும் 20 நிமிட நேரமானது 4 பேர் உயிரை காப்பாற்ற பயன்படுகிறது என்பதை உணர வேண்டும்” என்றார்.
அவசர சிகிச்சைக்கான இரத்த தேவைக்கும், இரத்ததானம் குறித்தும் மேலும் விபரம் அறிய, 0431-4010678, 9360945674 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.