எந்த ஒரு பறவையும் மரக்கிளையில் அமரும்போது அந்தக்கிளை உடைந்துவிடுமோ எனப்பயப்படுவது இல்லை. காரணம் அது நம்பி அமர்ந்து இருப்பது கிளையை அல்ல அதன் சிறகை. அதே வேளையில் அந்தப் பறவையின் கூடு அமைவதற்கு கிளை துணையாகிறது. அந்தக்கிளை பலமாக நிற்க வேர் உரமாகிறது. வேர்களாய் நின்று பலம் தருபவர்களையே வரலாறு தங்கள் பக்கங்களில் குறித்துக் கொள்கிறது. இளைஞர்களுக்குள் நம்பிக்கையையும், தெம்மையும் தருகிற அந்தப்பணியை அதிர்வின்றி ஆக்கப்பூர்வமாக செய்து கொண்டு இருக்கிறது திருச்சி துரைசாமிபுரத்தில் இயங்கும் வேர்கள் அறக்கட்டளை.
வேர்கள் அறக்கட்டளை சார்பாக இந்திய தேசத்தின் சுதந்திர தின பவளவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. அறக்கட்டளையின் நிறுவனர் அடைக்கலராஜா கலந்துகொண்டு சிஎஸ்சி டிஜிட்டல் கோர்ஸ் அகாடமியில் கணினிப் பயிற்சிபெற்று வெற்றி பெற்றுள்ள இளைஞர், இளம் பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
முத்தாய்ப்பாக, கிளேர்ஸ் சட்ட உதவி மையத்தின் அருள்தந்தை யோவான், தூய வளனார் கல்லூரி ஷெப்பர்டு விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் சி.ஜெயசந்திரன், வாய்ஸ் டிரஸ்ட் நிறுவனர் கிரோஹரி ஆகியோரின் முன்னிலையில் துரைசாமிபுரப் பகுதியில் மக்கள் பணியில் முன்னிலை வகிக்கிற அந்தோணி, தாய்வீடு தொண்டு நிறுவனர் சிவகுமார், பாக்கியராஜ், அந்தோணிராஜ் சித்ரா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான வேர்கள் விருது 2021 வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை சைபர் தமிழ் சேவை மைய பணியாளர்கள் மெர்லின், பிரவீனா, தெய்வானை ஆகியோர் மேற்கொண்டனர். இதுபோல நம்பிக்கை தரும் பணிகளால் இளையதலைமுறை உயிர்ப்புடன் நிற்கிறது என்பதை உரத்துச் சொல்கிறது இந்த வேர்களின் செயல்பாடுகள்.
ஜா.சலேத்