கிரெடிட் கார்டு வாங்கப் போறீங்களா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ..!
கிரெடிட் கார்டு வேண்டுமா என பல்வேறு வங்கிகளிடமிருந்தும் அழைப்பு வரும். இது போன்று வரும் அழைப்புகளைத் தொடர்ந்து கிரெடிட் கார்டு வாங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் வரும். காரணம் கிரெடிட் கார்டு வாங்கி அவஸ்தைபடுபவர்களின் கதைகளை பலரும் கேட்டிருக்கலாம். இதுவே குழப்பத்திற்கான காரணம்.
பொதுவாக கிரெடிட் கார்டினை பயன்படுத்தி பலன் அடைந்தவர்களை விட, அதனால் பிரச்சனையை சந்தித்திவர்கள் தான் அதிகம். ஆனால் அவற்றை சரியாக பயன்படுத்தினால், இது ஒரு அருமையான வாய்ப்பு என்பதை பலரும் புரிந்து கொள்வதே இல்லை. அதிலும் புதியதாக ஏதோ ஒரு ஆர்வத்தில் கார்டினை வாங்கி விட்டு பின் அவஸ்தைபடுபவர்கள் மிக அதிகம். ஆக கிரெடிட் கார்டினை முதல் முறையாக பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்.
அறிய வேண்டிய கட்டண விபரம் :
குறைந்த வருடாந்திர கட்டணம் இன்றைய காகுறைந்த வருடாந்திர கட்டணத்தில் பல்வேறு வங்கிகள் கிரெடிட் கார்டினை வழங்கி வருகின்றன. வருடாந்திர கட்டணம் எவ்வளவு? புதியதாக கிரெடிட் கார்டு வாங்கும் போது ஆண்டு கட்டணம் உள்ளதா? அப்படி இருந்தால் அது எவ்வளவு என்பதை தெளிவாக பார்க்க வேண்டும்.
நீங்கள் இதுவரை கிரெடிட் உபயோகிக்கவில்லை எனில், குறைந்த வருடாந்திர கட்டணம் உள்ள கார்டுகளை வாங்கி பயன்படுத்தலாம். கிரெடிட் கார்டு வரம்புகள் உங்களின் வருமானத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும்.
வருடாந்திர கட்டணம் எவ்வளவு?
பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் வசூலிக்கின்றன. குறிப்பாக சில வங்கிகள் கார்டுகளை வாங்க வைக்கும் பொருட்டு, முதல் ஆண்டுக்கு மட்டும் எந்த கட்டணமும் வசூலிப்பது இல்லை. ஆனால் இரண்டாம் ஆண்டில் இருந்து கட்டணம் வசூலிக்கும்.
கிரெடிட் கார்டில் பணம் எடுக்காதீங்க :
கிரெடிட் கார்டில் பணம் எடுக்கும் வசதியும் உண்டு. ஆனால் அதனை பயன்படுத்தி பணம் எடுப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அதற்கு அதிகளவிலான கட்டணம் வசூலிக்கப்படும். அதோடு கடனை கட்டாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டால், பின்னர் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.
கூடுதல் கட்டணம் :
கூடுதல் கட்டணமுள்ள புதிய கிரெடிட் கார்டினை வாங்க நீங்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், பழைய கார்டில் உள்ள நிலுவைத் தொகையை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியுமா என்பதைப் பாருங்கள். இப்படி டிரான்ஸ்ஃபர் செய்துகொள்ளும் வசதிக்கு கூடுதலாகக் கட்டணம் உள்ளதா என்பதையும் கவனிப்பது முக்கியம்.
சில வங்கிகள் பேலன்ஸ் டிரான்ஸ்பர் செய்து கொள்வதற்கு 30 முதல் 90 நாட்களுக்கு வட்டி வசூலிப்பதில்லை. ஆனால் சில வங்கிகள் கணிசமான வட்டியை வசூலிக்கின்றன. இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். ஆக இதனை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.
வட்டி அதிகம் : கடன் தொகை முழுவதையும் செலுத்த முடியாத நேரங்களில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது வழக்கம். மீதமுள்ள தொகைக்கு கிரெடிட் கார்டு நிறுவனம் வட்டிக்கு வட்டி போட்டு வசூலிக்கும். இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். சில வங்கிகள் வருடத்துக்கு 30 முதல் 40 சதவீதம் வரை வசூலிக்கின்றன. ஆக புதிய கார்டு வாங்கும் போது கடனுக்கான வட்டி எவ்வளவு என தெரிந்து கொள்ள வேண்டும்.
கிரேஸ் பீரியட் எவ்வளவு? எப்போது? : கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வட்டி இல்லாத காலத்தை கிரேஸ் பீரியட் என்பார்கள். இந்த காலகட்டத்தில், பொதுவாக பில்லிங் தேதியிலிருந்து ஆரம்பித்து, பில்லிங் தேதி முடிவடைந்த பிறகும் 15 முதல் 25 நாட்களுக்கு கிரேஸ் பீரியட் தருவார்கள். பில்லிங் காலகட்டம் ஆரம்பிக்கும் தேதிக்கு அருகாமையில் செய்யப்படும் செலவுகளுக்கு அதிக நாட்கள் கிரெடிட் இருக்கும். அதுவே பில்லிங் முடியும் தருவாய்க்கான தேதிக்கு அருகில் இருக்கும் போது கிரெடிட் காலம் குறைவாக இருக்கும். எனவே, புதிய கிரெடிட் கார்டினை பயன்படுத்தும் போது இதனை தெரிந்து கொண்டு செய்ய வேண்டும்.
இரு பிராண்டில் வாங்கலாம் : ஒரே பிராண்டட் கார்டினை வாங்குவதைவிட, நீங்கள் வாங்கும் புதிய கார்டு இன்னொரு பிராண்டினாலும் அங்கீகரிக்கப்பட்டதாக இருப்பது நல்லது. ஏனெனில் நீங்கள் வெளியில் செல்லும் போது இதன் மூலம் அதிகம் ஷாப்பிங் செய்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள் பல்வேறு நிறுவனங்களிலிருந்து கிடைக்கும், வட்டி இல்லாத காலத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். இது தவிர ரிவார்ட் பாயிண்ட் மற்றும் கேஷ் பேக் ஆஃபர் போன்றவற்றைக் கொண்டு இனிமேல் செய்யவிருக்கும் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப உங்கள் கிரெடிட் கார்டு கோ பிராண்டட் கார்டாக இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்.