25.3.1989க்கு முன்பு திருமணம் ஆனவரா? உங்களுக்கான சேதி இதோ…
1956 இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி பரம்பரை சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரிமை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2005-ம் ஆண்டில்தான் இதில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, தந்தை வழி பரம்பரை சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு எனக் கொண்டுவரப்பட்டது.
ஆனால், இந்தச் சட்டத்திலேயே பல குழப்பங்கள் இருந்தன. தந்தை உயிரோடிருந்தால்தான் பெண் வாரிசுகள் பங்கு கோர முடியும் என்றிருந்தது. முன்பே பாகப்பிரிவினை செய்தாகிவிட்டது என்று வாய்மொழியாகச் சொல்லி ஏமாற்றுவது போன்ற சிக்கல்கள் முட்டுக்கட்டையாக இருந்தது. பின்னர் பல வழக்குகள், அதில் வந்த தீர்ப்புகள் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்தன. பெண் வாரிசுகள் சொத்தில் பங்கு வேண்டாம் என்று கூறுகிறபட்சத்தில் அதை எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்துவிட்டு, அந்த சொத்துகளை ஆண் வாரிசுகள் பிரித்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் 1989-ல் முதல்வராக இருந்த கருணாநிதி கொண்டுவந்த சட்டத் திருத்தத்தின்படி, பெண்கள் அனைவருமே பரம்பரை சொத்தில் உரிமை கோரலாம் என்ற நிலை வந்தது. ஆனால், இதில் 25.3.1989-க்குமுன் திருமணம் ஆன பெண்கள் பரம்பரைச் சொத்தில் உரிமை கோர முடியாது. அதே போல, அதே தேதிக்கு முன்னர் பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்திலும் பெண்கள் உரிமை கோர முடியாது.