குழந்தைகளின் கல்வி, திருமணத்துக்கு கைகொடுக்குமா வங்கி ஆர்.டி..?
வங்கி தொடர் வைப்புத் திட்டம் என்பது வங்கி டெபாசிட் திட்டங்களில் ஒரு வகை. இதில் மாதம் தோறும் குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும். இந்த முதலீட்டில் வங்கி சேமிப்புக் கணக்கைவிட ஓரிரு சதவிகிதம் கூடுதலாக வட்டி கிடைக்கும். ஆறு மாதங்கள் தொடங்கி, 10 ஆண்டுகள் வரை ஆர்.டி திட்டங்கள் உள்ளன.
ரூ.5 லட்சம் வரை உத்தரவாதம்…
வங்கியில் ஆர்.டி-யில் ஒருவர் சேர்க்கும் அதிகபட்ச முதலீட்டுத் தொகை மற்றும் வட்டி சேர்ந்து ரூ.5 லட்சம் வரைதான் டெபாசிட் இன்ஷூரன்ஸ் திட்டத்தின்கீழ் உத்தரவாதம் இருக்கிறது. இதன்மூலம் கிடைக்கும் வட்டியானது கிட்டத்தட்ட பணவீக்க விகிதம் அளவுக்குத்தான் இருக்கும். சில நேரங்களில் அதைவிட குறைவாகக்கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. வங்கி அல்லது ஆர்.டி போடுவதன் நோக்கம், வங்கி சேமிப்புக் கணக்கைவிட சிறிது அதிக வட்டி பெறுவதாகும். இது ரிஸ்க் எடுக்காதவர்களுக்கான திட்டமாக இருக்கிறது.
வட்டி விகித மாற்றம் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பை உருவாக்கக்கூடும். ஏற்கெனவே குறைவான வட்டியில் ஆர்.டி-யை ஆரம்பித்து ஒருவர் முதலீடு செய்துகொண்டிருக்கும்போது புதிதாகப் போடுபவர்களுக்கு வட்டி விகித அதிகரிப்பு காரணமாக அதிக வட்டி நிர்ணயிக்கும் சூழ்நிலை உருவாகும். அப்போது ஏற்கெனவே தொடங்கிய ஆர்.டி-யை ரத்து செய்துவிட்டு, புதிதாக ஆர்.டி தொடங்குவது என்றாலும் கொஞ்சம் சிக்கல்தான். இடையில் ஆர்.டி-யை ரத்து செய்யும்போது அபராதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். வங்கிகளைப் பொறுத்தவரை, ஆர்.டி கணக்கை முன்கூட்டியே முடிக்கும் வசதியைத் தருகின்றன. அதாவது, ஏற்கெனவே சேர்ந்துள்ள ஆர்.டி-க்கு அதிக வட்டி நிர்ணயிக்கப் பட்டிருக்கும் நிலையில், தொடர்ந்து வட்டி விகிதம் குறைந்தால், பழைய ஆர்.டி-களை நிறுத்தும் அதிகாரம் வங்கிகளுக்கு உண்டு.
யாருக்கு ஏற்றது?
முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாத கன்சர் வேட்டிவ் முதலீட்டாளர்களுக்கு ஆர்.டி ஏற்றது. மேலும், தொடர்ந்து வருமானம் ஈட்டும் நபர்களுக்கு முக்கிய சேமிப்புத் திட்டமாக இது இருக்கிறது.
குறுகிய காலம் முதல் நடுத்தரக் காலம் அதாவது, ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆர்.டி-யில் சேர்வது நல்லது. அதற்கு மேற்பட்ட காலத்துக்கு ஆர்.டி திட்டத்தைத் தேர்வு செய்வது இழப்பையே ஏற்படுத்தும். அதாவது, நீண்ட காலத்தில், இதன் வருமானம் பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக இருக்காது.
யாருக்குப் பொருந்தாது?
நீண்ட காலத்தில் பிள்ளைகளின் கல்வி, கல்யாணம், தங்களின் ஓய்வுக்காலம் ஆகியவற்றுக்குத் திட்டமிடுபவர்கள் ஆர்.டி-யை தவிர்ப்பது நல்லது. காரணம், இதன் மூலமான வருமானம் நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டியதாக இருக்காது. தவிர, இதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி கட்ட வேண்டும்.
ஆர்.டி-யில் முதிர்வுக் காலம் வரை பணம் கட்டும்பட்சத்தில், ஏற்கெனவே சொன்ன அந்த வட்டி கிடைக்கும். ஆர்.டி முதலீட்டுக்கு லாக் இன் காலம் இருக்கிறது. அதாவது, நீங்கள் எத்தனை மாதங்களுக்கு ஆர்.டி-யை தொடங்கி யிருக்கிறீர்களோ, அத்தனை மாதம் அதன் ‘லாக்கின் பீரியட்’-ஆக இருக்கும். இடையில் பணம் தேவை என்று எடுத்தால், அபராதம் கட்டிவிட்டு எடுத்துக்கொள்ளலாம்.