பணத்தை சேமிக்கும் விஷயத்தில் நடக்கும் தவறுகள்
செலவுகளை கண்காணிப்பது இல்லை
உங்கள் செலவுகளை நீங்கள் கண்காணிக்காவிட்டால், தேவையற்ற விஷயங்களுக்கு பணத்தை செலவழிக்க நேரிடும். தேவைகளுக்கான செலவினங்களைத் தவிர்க்கவோ அல்லது ஒத்திவைக்கவோ முடியாது என்பதால், கூடுதலாக செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். எனவே பணத்தைச் சேமிக்க வேண்டும் என நினைத்தால், உங்கள் இலக்கு வரம்பிற்குள் உங்கள் செலவுகளைக் கண்காணிக்க வேண்டும்.
அவசர நிதிக்கு திட்டமிடுவதில்லை
அவசர கால தேவைகளுக்கு கைகொடுக்கும் வகையில் வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்வதால் அவசர காலத்தில் நீங்கள் கூடுதலாக செலவழிக்க மாட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். அவசர காலத்தின் போது ஒரு மாதம் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேல் பணத்தைச் சேமிக்கத் தவறினால் உங்கள் வழக்கமான முதலீடுகள் தடம் புரளலாம். அதேபோல் அவசர காலத்திலும் செலவுகளை கடந்து குறிப்பிட்ட சேமிப்பை தொடர என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடலும் உங்களிடம் இருக்க வேண்டும்.
புதிதாக வந்த கேஜெட்களை உடனடியாக வாங்குதல்
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் விலையுயர்ந்த கேஜெட்களை உடனடியாக அதிக பணம் செலவழித்து வாங்குவது சேமிப்பிற்கு பாதகமாய் அமையும். ஏனெனில் லேட்டஸ்ட் அப்டேட் கொண்ட எலக்ட்ரானிக் கேஜெட்கள் இல்லாமல் கூட சிறப்பாக வாழ முடியும், ஆனால் சேமிப்பு இல்லாமல் இருப்பது எதிர்காலத்தில் பெரும் சிக்கலை கொடுக்கும். எனவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கேஜெட்டுகள் அதிக விலை கொண்டவையாக இருப்பதால், குறைந்த விலையில் அவற்றை வாங்க நீங்கள் சிறிது காலம் காத்திருப்பதன் மூலம் அதற்கான செலவை ஒத்திவைக்கலாம்.
பேரம் பேசாமல் பொருட்களை வாங்குவது
அதிகமாகச் சேமிக்க, நன்றாக பேரம் பேசி அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆர்பி) விட குறைவான விலையில் பொருட்களைப் வாங்க வேண்டும். சிறப்பு விற்பனைகள் அல்லது ஆன்லைன் டீல்களைப் பயன்படுத்தி நீங்கள் அதிகச் சேமிப்பைப் பெறலாம்.
தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த தவறுதல்
சேமிப்பை அதிகரிக்க, சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் ஆன்லைன் சேவைகளுக்காக கூடுதலாக செலவழிப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு சேவையை பெறுவதற்கு அல்லது சப்ஸ்கிரைப் செய்வதற்கு முன்பு அது உங்களுக்கு உண்மையாகவே தேவையா?, அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் நீங்கள் பயன்படுத்துவீர்களா? போன்ற அம்சங்களை சரி பார்க்க வேண்டும்.