கூடுதல் வட்டி வேண்டுமா..? இதை செய்யுங்க முதல்ல..!
உங்கள் சேமிப்பு கணக்கு மூலம் வழக்கமாக கிடைக்கும் வட்டியை விட கூடுதலான வட்டிக் கிடைக்கும் ஒரு வழி இருக்கிறது. அது தான் ஃபிளெக்ஸி டெபாசிட். அது என்ன ஃபிளெக்ஸி டெபாசிட்..? பெரும்பாலான வங்கிகளில் சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகை ரூ.1,000ஆக இருக்கிறது. ஒருவரின் சேமிப்புக் கணக்கில் ரூ.25,000 இருக்கிறது எனில், குறைந்தபட்ச பராமரிப்புத் தொகைக்கு அதிகமாக உள்ள ரூ.24,000 ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குக்கு தானே மாறிவிடும். இதை தான் ஃபிளெக்ஸி டெபாசிட் என்பார்கள்.
பெரும்பாலான வங்கிகளில் சேமிப்புக் கணக்குடன் இணைந்த ஃபிளெக்ஸி டெபாசிட்டுகள் இருக்கின்றன. அதே நேரத்தில், நீங்கள் உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து எந்த நேரத்திலும் 24,000 ரூபாயை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் சேமிப்புக் கணக்கில் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும்பட்சத்தில் உங்கள் சேமிப்புக் கணக்கு மூலமான வழக்கமான வட்டியைவிடக் கூடுதல் தொகை கிடைக்கும். இதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரிச் சலுகையும் இருக்கிறது.