படிப்பு தேவையில்லை, யாரிடமும் கை கட்ட தேவையில்லை…
ஆண்டுக்கு உங்க பாக்கெட்ல ரூ.1 கோடி
வாத்தியார்கள படிக்கும் போது சொல்லுவார்கள், நீ எல்லாம் ஆடு மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று.. அவர்கள் சொன்ன வார்த்தைகள் இன்று 100 சதவீதம் பொருந்தும்.
படித்து முடித்துவிட்டு வேலை இல்லை என்று வருத்தப்படுபவர்கள், ஆடு வளர்ப்பில் தாராளமாக ஈடுபடலாம். சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்கும் வகையில் பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையை பின்பற்றலாம். படித்தவர்கள் படிக்காதவர்கள் என பலரும் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் சம்பாதித்து வருகிறர்கள்.
சரி, பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு என்றால் என்ன என்பதை இப்போது பார்ப்போம். வெள்ளாடுகளை தரையில் வளர்க்காமல் தரையிலிருந்து 4 அடி உயரத்தில் கிடைமட்டமாக மரச்சட்டங்களை 2 க்கு 1.5அடி இஞ்ச் அளவில் 1 விரல் இடைவெளியில் வரிசையாக அடுக்கி கட்டி அமைப்பது தான் பரண் அமைப்பு. இதன் இடைவெளி அதிகமாகவோ அல்லது குறைக்கவோ கூடாது. ஏனெனில் ஆடுகள் நடப்பதில் சிரமம் ஏற்படும்.
கால்களில் காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த பரண் மேல் அமைப்பு முறையில் 100 ஆடுகள் வளர்க்க 50 அடிநீளம், 45 அடி அகலம் உடைய ஒரு கொட்டகை அமைக்க வேண்டும். இந்த கொட்டகையில் ஆடு ஈனும் இளங்குட்டிகளை அடைக்கவும் அதனில் ஒரு பகுதி 22 க்கு 15 இஞ்ச் அளவில் அமைக்க வேண்டும். குட்டிகள் 3 மாதங்கள் வரை தாயிடம் பால்குடிப்பதால் அவை தாயின் பார்வைக்கு அப்பால் இருக்க கொட்டில் முழுவதும் அடைத்து இருக்க வேண்டும்.
500 ஆடு வளர்த்தால்…
பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு முறை வெற்றிகரமாக இருக்க, பசுந்தீவனம் முக்கிய பங்களிப்பாக இருக்கும்.. தீவனப்பற்றாக்குறை நிவர்த்தி செய்ய உங்களிடம் 4 ஏக்கர் நிலம் இருந்தால் போதும். அதில் 100 வெள்ளாட்டுக்கு தேவையான பசுந்தீவனத்தை வளர்க்க முடியும். . வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சக்கூடிய விவசாய நிலமாக இருப்பது அவசியம் ஆகும். தென்னை தோப்பாக இருந்தால் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க அதன் இடைவெளிக்கு ஏற்ப 6 முதல் 8 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். நீங்கள் 500 ஆடு வளர்க்க வேண்டும் என்றால் உங்களிடம் ஏழு ஏக்கர் நிலம் அவசியம் இருக்க வேண்டும். 500 ஆடுகள் வளர்த்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வரை வருவாய் ஈட்ட முடியும்.
கோ-3, கோ-4, வேலிமசால், குதிரை மசால் வகைகள், தீவன சோள புல்வகைகள், அகத்தி, சித்தகத்தி, சவுண்டல் ரகங்களை வளர்க்கலாம். இதனை 50 சென்ட் நிலத்தில் ஒவ்வொன்றையும் வளர்க்கலாம். பசுந்தீவனங்களை பண்ணை அமைப்பதற்கு முன் பயிரிட்டு விட வேண்டும். ஏனென்றால், முதல் அறுவடை 60 முதல் 70 நாட்கள் குறைந்த பட்சமும், 80 முதல் 90 நாட்கள் அதிகபட்சமாகவும் தேவைப்படும். இந்த இடைவெளியில் கொட்டகை அமைத்தல் வேண்டும். இதற்கு பின்பே ஆடுகளை வாங்கி கொண்டு வர வேண்டும்.
வெள்ளாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு அதன் வயதிற்கேற்ப அடர்தீவனம் அளித்தல் அவசியம். ஒரு மாதம் முதல் 6 மாத குட்டிகளுக்கு 25 கிராம் முதல் 35 கிராம் தீவனமும், 6 மாதம் முதல் 12 மாதம் வரையில் 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலும், சினைப்பருவத்தில் 175 கிராம், ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம், கிடாக்களுக்கு 300 கிராம் என்ற அளவிலும் அளிப்பது சிறப்பாக இருக்கும். அடர்தீவனம் என்ற தீவனத்தின் கலவை (100 கிலோவிற்கு) விகிதம் கீழ்கண்ட அளவில் இருத்தல் வேண்டும்.
மக்காச்சோளம் மற்றும் கம்பு 35 முதல் 40 கிலோ, ராகி மற்றும் இதர தானியங்கள் 10 கிலோ, கடலைப்புண்ணாக்கு 20 கிலோ, கோதுமை தவிடு மற்றும் அரிசி தவிடு 10 கிலோ, துவரம் பொட்டு மற்றும் பாசிப் பொட்டு 17 கிலோ, தாதுஉப்பு 2 கிலோ, சாதாரண உப்பு 1கிலோ என்ற அளவில் 100 கிலோ அடர்தீவனத்தின் பகுதிகளாக இருக்க வேண்டும்.
ஆட்டுக்கு 10 ஆயிரம்
வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு ஆகும்.. இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கும். குறைந்தபட்சம் 100 ஆடுகள் வளர்த்தால், ஆடு ஒன்றிலிருந்து ஆண்டுக்கு இப்போதைக்கு 10 ஆயிரம் தாராளமாக வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் 500 ஆடுகள் வளர்த்தால் ஒரு கோடி வருவாய் ஈட்டலாம்.
பராமரிப்பு செலவு போக
இதுபற்றி ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும் போதும், தற்போதைய நிலையில் ஆடு மொத்த விலையில் கிலோ ரூ.250 தாராளமாக போகிறது இதனால் ஓரு ஆட்டை ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனை செய்ய முடியும்.. அப்படியென்றால் 500 ஆடுகள் மூலம் குறைந்தபட்சம் ஓராண்டில் 3 ஆயிரம் ஆடுகள் கிடைக்கும். இவற்றை குறைந்தபட்சமாக ஆடொன்றுக்கு ரூ.4 ஆயிரம் என விற்பனை செய்தால்கூட ஆண்டுக்கு ரூ. 1 கோடி முதல் ஓன்றகால் கோடி வரை சம்பாதிக்கலாம்.
இதில், தொழிலாளர்களின் கூலி, ஆடுகளின் தீவனம் மற்றும் பராமரிப்புச் செலவு என அனைத்தயும் கழித்துவிட்டுப் பார்த்தால் கூட குறைந்தபட்சம் ரூ.75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை தாராளமாக சம்பாதிக்க முடியும் என்கிறார்கள்.
குறைந்த பட்சம் 40 முதல் 50 ஆடு வளர்த்தாலே ஆண்டுக்கு 8 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். செலவுபோக கட்டாயம் ஐந்து லட்சம் லாபம் கிடைக்கும் என்றும் கூறினார்கள். ஆடு வளர்ப்பு குறித்து பயிற்சி
பெற விரும்பினால், திருச்சியில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றம் ஆராய்ச்சி மையத்தை அணுகலாம். இதேபோல் காரைக்குடி அருகே செட்டிநாட்டில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையை அணுகலாம்