கரன்ட் கட் மட்டுமில்ல… கரன்ட் பில்லே கட் தான்..
தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் மின் கட்டணங்களை தாறுமாறாக உயர்த்தியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல வர்த்தக நிறுவனங்களுக்கான கட்டணங்களும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது தொழில் நடத்தவே சிரமத்தில் வர்த்தகர்கள் உள்ளனர் இதற்கு மாற்று தான் என்ன????
விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் எந்த செலவுகளையும் குறைக்க முடியவில்லையே என்று பலரும் திணறி வருகின்றனர்.
இதில் முக்கியமானது, மின்சாரம்! குறிப்பாக, மின்சாரத்தை எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்த முடியும் என்று பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம், எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்தினாலும் மின்சாரத்திற்கான செலவு குறையவில்லை! மின்சார செலவு ஒரு பக்கம் இருந்தாலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அடிக்கடி நடக்கும் மின்வெட்டால் பலரும் அவதிப்படுகின்றனர்.
தேசிய அளவில் 5 சதவீதம் மின் தட்டுப்பாடு உள்ளது என்றும், ஒரு சில மாநிலங்களில் தட்டுப்பாடு இன்னும் அதிகமாக உள்ளன என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
இதற்கு என்னதான் தீர்வு என்று பார்க்கும் பொழுது, மொட்டை மாடியில் சோலார் பேனல்கள் பொருத்தி சூரிய ஒளி மூலம் பெறும் மின்சாரத்தைப் பயன்படுத்தி, கணிசமான தொகையை மிச்சம் செய்ய முடியும் என்பதுதான்.
உங்கள் வீட்டிலேயே சோலார் தகடுகள் பொருத்தப் போகிறீர்கள் என்றால், அதனுடைய விலை, அதிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் சோலார் பேனல்கள் எப்படி பொருத்துவது என்பது பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்…
சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் ரேடியேஷனை, சோலார் தகடுகள் உறிஞ்சிக் கொள்ளும். அதுவே மின்சாரமாக கன்வர்ட் ஆகும். சோலார் தகடுகள் மீது சூரிய ஒளிபடும்போது, தகடில் உள்ள ஃபோட்டோ வோல்டாயிக்ஸ் செல்கள், சூரிய ஒளியை உறிஞ்சி மின்சாரத்தை உருவாக்க உதவுகிறது. ரூஃப்டாப் சோலார் பிளாண்ட் என்பது குடியிருப்பு அல்லது வணிக கட்டிடத்தின் மேல் மாடியில் வைப்பதைக் குறிக்கிறது.
இதன் மூலம், அந்த கட்டிடத்தில் உள்ள வீடுகள் ,வணிக அலுவலகங்களின் தேவைகளுக்கு, சூரிய ஒளியில் இருந்து பெறப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தலாம்.
மேல்மாடியில் ரூப்டாப் சோலார் சிஸ்டத்தை அமைப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
மொட்டை மாடிகளில் சூரிய மின்தகடுகள் பொருத்துவது என்பது பொதுமக்களுக்கு மட்டுமல்ல, அரசாங்கத்துக்கும் நன்மை அளிக்கும்.
மின் கட்டணத்தை விட, சோலார் தகடுகள் கட்டணம் மிக மிக குறைவு. அரசாங்கமும், இதற்கு மானியம் அளிக்கிறது.
பராமரிப்புக் கட்டணம் மிகவும் குறைவு. சோலார் தகடுகள் பொருத்தினால் அதற்கு முதலீடாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டுமே தவிர்த்து, மெயின்டனன்ஸ் என்று வேறு எந்த செலவுகளும் பெரும்பாலும் இருக்காது.
ஒரு முறை பொருத்தினால், 25 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். அவ்வபோது, துடைத்து, சின்ன சின்ன பழுது ஏதாவது ஏற்பட்டால் மட்டுமே கவனிக்க வேண்டும்.
பொதுமக்களைப் பொறுத்தவரை, மாதாந்திர மின்சார பயன்பாட்டை கொஞ்சம் குறைக்கலாம், இதனால் மின்சாரக் கட்டணத்தில் கணிசமான தொகையை சேமிக்க முடியும். மின்தட்டுப்பாட்டால் அவதிப்படுவதும் குறையும்.
சோலார் தகடுகள் பொருத்துவதற்கு தனிப்பட்ட இடம் , நிலம் தேவையில்லை. வீட்டின் மொட்டை மாடியில் அல்லது காலியான இடங்களில் பொருத்திக் கொள்ளலாம். சோலார் எனர்ஜி என்பது இயற்கையாக சூரிய ஒளியில் இருந்து கிடைப்பது, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்காது.
பழைய மாடல் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்த முடியாது. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு நடைமுறைப்படி, சோலார் தகடுகள் அமைப்பது பிரச்சனையாக இருக்கும். சோலார் பேனல்கள் ஒரு முறை செய்யக்கூடிய முதலீடு தான், செலவு குறைவு, மின்சாரக் கட்டணம் கணிசமாக மிச்சப்படுத்தலாம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், முதல் முறை கணிசமான தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
மேல் மாடியில் சோலார் சிஸ்டம் அமைக்க, குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை செலவாகும். சோலார் தகடுகள் முதலீடு, மின்சாரத்தை சேமிக்கும் இன்வர்ட்டர் மற்றும் பேட்டரிகள் கொள்முதல், அதற்கான வயரிங், எலக்ட்ரிஷியன் கட்டணம் ஆகியவை இதில் அடங்கும்.
1kW ரூஃப்டாப் சோலார் சிஸ்டம் அமைக்க, குறைந்தபட்சம் 45,000 முதல் 85,000 வரை ஆகும். பேட்டரிகளுக்கு கூடுதல் கட்டணமாக 20,000 ஆகலாம்.
5kW ரூஃப்டாப் சோலார் சிஸ்டம் அமைக்க, குறைந்தபட்சம் 2,25,000 முதல் 3,25,000 வரை ஆகும். பேட்டரிகளுக்கு கூடுதல் கட்டணம்.
முதல் முதலீடு லட்சக்கணக்கில் இருந்தாலும், அதிகபட்சமாக 5 முதல் 6 ஆண்டுகளுக்குள் முதலீட்டின் பலன் தெரியும்.
மத்திய அரசு, ரூஃப்டாப் சோலார் சிஸ்டம் அமைப்பதற்கு, வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு மானியங்கள் வழங்குகிறது. வணிகங்கள் அல்லது வியாபார , உற்பத்தி சார்ந்த கட்டிடங்களுக்கு மானியம் இல்லை.
- 3kW வரை 40% மானியம்
- 4 முதல் 10kW வரை 20% மானியம்
- 10kW மேல் – மானியம் இல்லை
நீங்கள் சூரிய ஒளி மின்சாரம் பயன்படுத்த, மின்தகடுகள் அமைக்க விரும்பினால், பின்வரும் இணையத்தளத்தில் அதற்காக விண்ணப்பிக்கலாம்.
https://solarrooftop.gov.in/grid_others/discomPortalLink
ஏதேனும் சந்தேகம் இருந்தால், உதவி மையத்தை இந்த எண்ணில் அழைக்கலாம்: 1800-180-3333
சோலார் பேனல் போடுங்க..
கரன்ட் பில்லை கட் செய்யுங்கோ..