லாக்கர் வேணுமா சாமி..லாக்கர்… கூவி கூவி அழைக்கும் வங்கிகள்..
அரசியல்வாதிகளின் வீடுகளில் அடிக்கடி ரெய்டு நடப்பதும் அவர்கள் வங்கி கணக்குகள் முடக்கப் படுவதும் குறித்து நாம் செய்திகளை படித்து வருகிறோம்.
அவ்வாறான செய்திகளில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் வங்கி லாக்கரிலிருந்து ஏராளமான பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்ற தகவலும் உபரியாக வரும்.
வங்கி லாக்கர் என்றால் என்ன…. அதற்கு எவ்வளவு கட்டணம் தெரிந்து கொள்ள விருப்பமா….
சொத்து ஆவணங்கள், நகைகள், கடன் ஆவணங்கள், சேமிப்புப் பத்திரங்கள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பிற முக்கிய ரகசிய பொருட்களை சேமித்து வைக்க மக்கள் பேங்க் லாக்கர்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் துணை சேவைகளில் இதுவும் ஒன்றாகும்.
எல்லா வங்கிகளிலும் இந்த பாதுகாப்பு வசதி கிடைக்காது. உயர் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வலுவான அறைகள் கொண்ட கிளைகளில் லாக்கர்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சேவைக்கு லாக்கரின் அளவைப் பொறுத்து வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.
வங்கி லாக்கர் கட்டணம் லாக்கரின் அளவு, நகர்ப்புறம், கிராமம் அல்லது மெட்ரோ ஆகிய இடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
இதில்,
ICICI வங்கியின் லாக்கர் கட்டணங்கள் : இந்த வங்கி சிறிய அளவிலான லாக்கருக்கு கட்டணமாக ஆண்டுக்கு ரூ.1,200 முதல் ரூ.5,000 வரை வசூலிக்கிறது. அதே நேரம் மீடியம் சைஸ் லாக்கர்களுக்கு ரூ.2,500 – ரூ.9,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரிய சைஸ் லாக்கருக்கு ரூ.4,000 – ரூ.15,000 கட்டணமும், எக்ஸ்ட்ரா-லார்ஜ் சைஸ் லாக்கருக்கு ரூ.10,000- ரூ.22,000 வரையில் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்துடன் GST-யும் வசூலிக்கப்படலாம்.
ஆண்டுதோறும் முன்கூட்டியே லாக்கர் வாடகை வசூலிக்கப்படும். லாக்கர்களுடன் தொடர்புடைய அனைத்து பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் லாக்கர் அக்ரிமென்ட் மூலம் தெரிவிக்கப்படும் .
பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாக்கர் கட்டணங்கள் : கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் வருடாந்த லாக்கர் வாடகையாக ரூ.1,250-க்கு மேல் செலுத்துகிறார்கள். நகர்ப்புறம் மற்றும் மெட்ரோ பகுதிகளில் இந்த வங்கியின் லாக்கர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வருடாந்திர லாக்கர் கட்டணமாக ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை செலுத்தி வருகிறார்கள்.
எஸ்பிஐ வங்கியின் லாக்கர் கட்டணங்கள் : எஸ்பிஐ வங்கி மெட்ரோ மற்றும் மெட்ரோ பாலிட்டன் நகரங்களில் சிறிய, நடுத்தர, லார்ஜ் மற்றும் எக்ஸ்ட்ரா லார்ஜ் அளவிலான லாக்கர்களுக்கு முறையே ரூ.2,000, ரூ.4,000, ரூ.8,000 மற்றும் ரூ.12,000 என வங்கி லாக்கர் கட்டணம் வசூலிக்கிறது. செமி-அர்பன் மற்றும் ரூரல் லொக்கேஷன்களில் எஸ்பிஐ வங்கி சிறிய, நடுத்தர, லார்ஜ் மற்றும் எக்ஸ்ட்ரா லார்ஜ் அளவிலான லாக்கர்களுக்கு முறையே ரூ.1,500, ரூ.3,000, ரூ.6,000 மற்றும் ரூ.9,000 என கட்டணம் வசூலிக்கிறது.
எச்டிஎஃப்சி வங்கியின் லாக்கர் கட்டணங்கள் : இந்த வங்கி ஆண்டுக்கு ரூ.550 – ரூ.20,000 வரை லாக்கர் வாடகையாக வசூலிக்கிறது. கிராமப்புறங்களில் எக்ஸ்ட்ரா ஸ்மால் லாக்கருக்கு ரூ.550, மெட்ரோ நகரங்களில் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கருக்கு ரூ.20,000 வசூலிக்கப்படுகிறது. ஒரே இடத்தில் உள்ள கிளைகளுக்கு இடையே லாக்கருக்கான வாடகைகள் மாறுபடலாம். லாக்கர்களின் வாடகைகள் லாக்கரின் அளவு மற்றும் கிளை இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடும் .
லாக்கர்கள் பொதுவாக தனிநபர்கள், வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள், அசோஸியேஷன்ஸ் மற்றும் ட்ரஸ்ட்களுக்கு வாடகைக்கு விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.