பழைய டூவீலர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியது…
- வண்டியின் பளபளப்பை பொறுத்தே விலை நிர்ணயிக்கப்படுகிறது. என்றாலும் பளபளப்பை பார்த்த உடன் வண்டி வாங்கக் கூடாது. எவ்வளவு கி.மீ. ஓடியிருக்கிறது என மீட்டரை பார்ப்பது சரியாக இருக்காது. காரணம் மீட்டரை ரீசெட் செய்திருப்பார்கள்.
- முதலில் பார்க்க வேண்டியது இன்ஜின் நிலை. வண்டியை சராசரியாக ஒரு கி.மீ. வரை ஓட்டிப் பார்க்க வேண்டும். இன்ஜின் சத்தம் எப்படி இருக்கிறது என்பதன் மூலம் இன்ஜின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.
- டெஸ்ட் டிரைவ் பார்த்த பின் வண்டியிலிருந்து இன்ஜின் ஆயில் லீக் ஆகியிருக்கிறதா, சைலன்ஸரிலிருந்து வரும் புகை (வெள்ளையாக, கருமையாக) வருகிறதா எனவும் பார்க்க வேண்டும்.
- சைலன்ஸரின் புகை வரும் பகுதியில் விரல் விட்டுப் பார்த்தால் கரும் புகை அல்லது பிசுபிசுப்பான ஆயில் படிந்திருக்கும். அத்தகைய வாகனங்களின் இன்ஜின் கண்டிஷன் சரியில்லை என புரிந்து கொள்ளலாம். போர்க் ஆயில் லீக் ஆகினால் சாக் அப்ஸர் சரியில்லை என அறிந்து கொள்ளலாம்.
- அடுத்து டயர் தேய்மானத்தை பார்க்க வேண்டும். ட்யூப்லெஸ் டயர் என்றால் 20,000 கி.மீட்டர் ஓடும். ட்யூப் டயர் 30,000 கி.மீ. வரை ஓடும்.
- வண்டியை செல்ப் ஸ்டார்ட் செய்து பார்க்கும் போது ஸ்டார்ட் ஆக திணறினால் பேட்டரி நிலை சரியில்லை என அர்த்தம். சாவி போட்டு ஹாரன் மற்றும் இன்டிகேட்டரை இயக்கி பார்க்கும் போதும் பேட்டரியின் நிலை தெரிந்து விடும். புதிய பேட்டரி வாங்கும் நிலை இருக்கும் பட்சத்தில் அதை கணித்து விலையை குறைத்து பேசி வாங்கலாம்
- வீல் துருபிடித்திருக்கிறதா, அலைன்மெண்ட் சரியாக இருக்கிறதா, பெண்ட் இருக்கிறதா என ஓட்டும் போது கவனமாக பாருங்கள்.
- வாகனத்தின் பாகங்களில் எங்கெல்லாம் துருப்பிடித்திருக்கிறது, அவற்றை மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை கணித்தும் விலையை நிர்ணயிக்கலாம்.
- வாகனத்தின் சேஸில் பழுது ஏதும் இருக்கிறதாக என பார்க்க வேண்டும். டெஸ்ட் டிரைவில் ப்ரேக் அடித்து பார்க்கும் போது க்ரீச் சத்தம் வந்தாலோ, விட்டுவிட்டு பிடித்தாலோ ப்ரேக் ஷூ தேய்ந்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம்.
- பெட்ரோல் டேங்க் அதிகம் துருப்பிடித்திருந்தாலோ பெட்ரோல் உறிஞ்சப்பட்டு மைலேஜ் குறையும். டேங்க் சொட்டையாக இருந்தால் ஓட்டை எதுவும் இருக்கிறதா என ஆராயவும். ஒரு துளி ஓட்டையும் பெட்ரோல் ஆவியாகி விரைந்து தீர்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.
- இன்ஜின் ஆயில் லீக், போர்க் ஆயில் லீக், ஹெட் லைட் பல்ப் பிரச்சனை, பேட்டரி குறைபாடு, க்ளட்ச், பிரேக் தேய்மானம், பிரேக் கேபிள் என ஒரு வண்டியில் உள்ள குறைபாடுகளை கணித்து அதற்கேற்ப நீங்கள் விலையை குறைத்து கேட்டு வாங்கலாம். டூவீலர் வாங்கும் போது உங்களுக்கு அந்த பணம் மிச்சம் என நினைக்காதீர்கள். அத்தகைய வண்டியை வாங்கிய பின் உடனடியாக அவற்றை மாற்றினால் மட்டுமே நிம்மதியான சவாரியை மேற்கொள்ள முடியும்.
- இன்சூரன்ஸ் முடிந்த வாகனம் என்றால் தவறாமல் இன்சூரன்ஸ் செய்துவிடுங்கள்.
- பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கும் போது பாரம் 29, 30 என இரண்டு பாரம்களிலும் விற்பவரிடம் கையெழுத்து வாங்கி 10-&-15 நாட்களுக்குள் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்து விடவேண்டும். அதுவே விற்பவர், வாங்குபவர் என இருவருக்குமே நல்லது.
எந்தெந்த வண்டியை வாங்குவதை தவிர்க்கலாம்..!
- இரண்டு ஓனருக்கும் மேலான வண்டியை வாங்குவதை கூடியவரை தவிர்ப்பது நல்லது.
- 10 ஆண்டுகளுக்கு மேற் பட்ட வண்டியை வாங்குவதை தவிர்க்கலாம். (குறிப்பு பழைய யமஹா 100, போன்ற வாகனங்களை பெருமையாக வாங்குபவர்கள் உண்டு. அது இருசக்கர வாகன காதலர்களின் விருப்பம். எனவே இவர்களுக்கு வருடம் பொருட்டல்ல..!)
- ஆர்.சி. புக்கில் உள்ள சேஸ் நம்பர், வண்டி சேஸில் உள்ள நம்பருடன் ஒத்துப் போகாவிட்டால் அப்படியான வண்டியை வாங்குவதை தவிர்க்கவும்.
- தவணை முறையில் வாங்கிய வாகனம் என்றால் ஆர்.சி. புத்தகத்தில் என்.ஓ.சி. செய்தி ருந்தால் மட்டுமே வாங்கவும். தவணை பாக்கி வைத்திருக்கும் வண்டியை வாங்காதீர்கள்.
- வெளிமாநில வண்டி வாங்குவதை கூடியவரை தவிர்க்கலாம். காரணம் வெளிமாநில வண்டி என்றால் சாலையில் போலீஸாரின் சோதனை அதிகமாக இருக்கும்.