Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மாதம் ரூ.20 ஆயிரம் வருமானம் தரும் இயற்கை விவசாயம்!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயியான பட்டதாரிப் பெண்தான் அனுராதா. இவர் தனது திருமணத்திற்காக போடப்பட்ட நகைகளை விற்று நிலம் வாங்கியபோது இதனை உறவினர்கள், நண்பர்கள் பரிகாசம் செய்தனர். ஆனால் இன்று அனுராதாவின் வேளாண் விளைபொருட்களுக்கு வாடிக்கையாளர்களாகி அவரது வெற்றிக்கு இவர்களே சான்றாக நிற்கிறார்கள்.

அனுராதா
அனுராதா

இயற்கை விவசாயம் என்பது நம் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இப்போது டிரெண்டாகி வருகிறது. அந்த டிரெண்டில் இணைந்து கொண்டவர்களில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அனுராதாவும் ஒருவர். பட்டதாரிப் பெண்ணான இவர் இல்லத்தரசியாக வீட்டு நிர்வாகத்தை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தார். அப்படி இருந்த இவர் எப்படி இயற்கை விவசாயியாக மாறினார்? அதனால் ஏற்பட்ட சாதக பாதகங்கள் என்ன? விவசாயத்தில் சாதித்தது என்ன என்பதை அவரே பகிர்ந்துகொண்டதை பார்ப்போம்.

என்னுடைய கணவர் நடராஜன், ஸ்டேஷனரி கடை வைத்துள்ளார். குடும்பத்தலைவியாக இருந்து வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த நான், அவ்வப்போது கணவரின் கடைக்கு செல்வேன். அவர் இல்லாத நேரங்களில் கடையை பார்த்துக்கொள்வேன். இப்படியாகத்தான் என்னுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

போலியானதால் வருந்தினேன்
என்னுடைய ஒரே மகனுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்ற தேடலே என் வாழ்க்கையை மாற்றியது. குழந்தையின் ஆரோக்கியம் கருதி இயற்கை விவசாயப் விளைபொருட்களைத் தேடி வாங்கி வீட்டில் பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால், இயற்கை விவசாயப் விளைபொருட்கள் என்ற பெயரில் கிடைக்கும் பலவும் போலியானவை என்பது எனக்கு அப்போதுதான் தெரியவந்தது. நான் என் குழந்தைக்காக வாங்கிப் பயன்படுத்திய பலவும் போலியானவை என்பதை அறிந்த போது வருந்தினேன்.

“நாமே ஏன் இயற்கை விவசாயம் செய்யக் கூடாது?” என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதனை வீட்டில் சொன்ன போது உறவுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது என்ன பைத்தியக்காரத்தனம்? என்று உறவுகளும், நண்பர்களும் பரிகாசம் செய்தார்கள். ஆனால், நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். இயற்கை விவசாயம் செய்தே தீருவது என்று தீர்மானித்தேன். திருமணத்திற்காக என்னுடைய வீட்டில் எனக்கு போட்டிருந்த நகைகளை விற்று, இயற்கை விவசாயம் செய்ய 4 ஏக்கர் நிலம் வாங்கினேன். எனக்கு ஆதரவாக நின்ற என் தங்கை ஒரு ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயத்திற்காக என்னிடம் அளித்தார்.


5 ஏக்கரில் இயற்கை விவசாயம்
விவசாயத்திற்காக நான் நிலம் வாங்கியதை என் உறவினர்கள் பலரும் எதிர்த்தனர். அதிலும், நகைகளை விற்று விவசாய நிலம் வாங்கியதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “பணத்தை மண்ணில் போட முடிவு செய்தால் வீட்டுமனை வாங்கு? விவசாய நிலம் எதற்கு?” என்பது அவர்களின் அட்வைஸாக இருந்தது. எதிர்ப்புகள், பரிகாசங்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, 2013-ம் ஆண்டு எனக்குச் சொந்தமாகி போன 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் தொடங்கினேன். என்னுடைய முதல் இலக்கு என் குழந்தைக்கு, என் குடும்பத்திற்கு நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது.

முதல் விளைச்சல் சீரக சம்பா
போதிய அனுபவம் இல்லாமல் இயற்கை விவசாயத்தில் இறங்கிய நான் முதலில் சீரக சம்பா நெல்லை விளைவித்தேன். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 மூட்டைகள் வீதம் நெல் கிடைத்தபோது, எனக்கு ஏக்கருக்கு 6 மூட்டைகள் மட்டுமே விளைச்சல் இருந்தது. என் நிலத்தில் விளைந்த சீரக சம்பா நெல்லை நானே அரிசியாக்கி சந்தைப்படுத்த முயன்றேன். சென்னைக்கு நேரில் சென்று, சுயமாக வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டேன். அந்த நேரத்தில், இயற்கை விவசாயத்தில் விளைந்த சீரக சம்பா அரிசியை கிலோ ஒன்றுக்கு 70 ரூபாய்க்கு என்னால் விற்க முடிந்தது.

பொருளாதார ரீதியில் பலனில்லை
இயற்கை விவசாயத்தில் என்னுடைய முதல் அனுபவம் சற்று கடினமான பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டதில், ஆரோக்கியமான உணவுப்பொருளை என் குடும்பத்திற்கும், மக்களுக்குக் கொடுக்கிறேன் என்ற மன திருப்தி இருந்தாலும் பொருளாதார ரீதியில் அது பெரிய அளவில் பலன் தரவில்லை. இயற்கை விவசாயத்தில் சுமார் 4 ஆண்டுகள் அனுபவத்திற்குப் பிறகு நான் அடுத்தக் கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தேன். இயற்கை வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த சான்றிதழ் பெறுவது அவசியம் என்பதை அறிந்து அதற்காக திண்டிவனத்தில் உள்ள வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்குச் சென்றேன். அங்கே திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த ஷீபா, எனக்கு ஆதரவாக இருந்ததோடு நல்ல வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

குழுவாக இணைத்த அதிகாரி
இயற்கை விவசாயத்தில் எனக்கிருந்த ஆர்வத்தையும், என்னுடையே நோக்கத்தையும் வெகுவாக பாராட்டிய அவர், இயற்கை விவசாயத்தில் சிறந்த முன்மாதிரியாக திகழும் நீங்கள் ஏன் மற்ற விவசாயிகளையும் இயற்கை விவசாயத்தின் பால் ஈர்க்கக் கூடாது என்று கூறி என்னுடன் 150 விவசாயிகள் குழுவாக இணைந்து விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் செயல்பட வழிவகை செய்தார். அதில் சிலர் இயற்கை விவசாயம் என்ற பெயரில் ஏமாற்றியதை அறிந்து ஏமாற்றம் அடைந்தேன். இதனால், அந்த முயற்சியைக் கைவிட்டேன்.

கீரை வளர்ப்பை கற்றேன்
இயற்கை விவசாயத்தில் என்னுடைய தொடர்ச்சியாக செயல்பாடுகளால், சென்னையைச் சேர்ந்த ‘நல்லகீரை’ ஜெகன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. உரம், பூச்சிக்கொல்லி இல்லாமல் இயற்கையான முறையில் கீரை வளர்ப்பது குறித்து அவரிடம் கற்றுத் தேர்ந்தேன். இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு வழிகாட்டுதல்களையும் அவர் வழங்கினார். இயற்கை வேளாண் குறித்த பயிற்சிகள், கருத்தரங்குகள் பலவற்றில் முதல் ஆளாக சென்று பங்கேற்று வழிகாட்டுதல்களைப் பெற்று விடுவேன்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு இயற்கை உழவர் குழு
அதன் பின்னரே, காய்கறிகள், கீரைகள் மீது என் கவனத்தை திருப்பினேன். அவற்றை இயற்கை விவசாயத்தில் விளைவித்து சந்தைப்படுத்த தீர்மானித்தேன். இது நல்ல பலனையும் கொடுத்தது. வயலில் விளையும் காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை விற்பதன் மூலம் வாரந்தோறும் பணம் கிடைக்கும் என்பதால் இயற்கை விவசாயத்தில் என்னுடன் பலரும் இணைந்து கொண்டனர்.

அவர்களை இணைத்துக் கொண்டு “ஞாயிறு இயற்கை உழவர் குழு”வை தொடங்கினேன். எங்கள் குழுவில் இன்று ஒருவர் சத்துமாவு தயாரிக்கிறார், மற்றொருவர் சிறுதானியங்களில் இருந்து லட்டு செய்கிறார், இன்னொருவர் அரிசி ஆலை அமைத்திருக்கிறார். அந்த அரிசி ஆலையில் நாங்கள் அனைவருமே நெல்லை அரைத்துக் கொள்கிறோம். இயற்கை விவசாயத்தில் விளைவித்த நெல்லை அரிசியாக்கிக் கொள்கிறோம். நாட்டு மாட்டுப் பசுவின் பாலில் நெய் தயாரிக்கிறோம்.

உழவி ஆர்கானிக்ஸ் இணையதளம்
நாங்கள் விளைவிக்கும் எண்ணெய் வித்துகளை பயன்படுத்தி எண்ணெய் தயாரிக்க எங்கள் குழுவில் உள்ள ஒருவர் ‘செக்கு’ வைக்க முன்வந்திருக்கிறார். எங்கள் குழுவினர் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கும் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்த ‘உழவி ஆர்கானிக்ஸ்’ என்ற பெயரில் தனியே இணையதளமும் தொடங்கியுள்ளோம்.

சீரக சம்பா நெல்லை விதைத்து இயற்கை விவசாயத்தை தொடங்கிய நான் இன்று அதே 5 ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கரில் நெல், மற்ற இடங்களில் கீரைகள், காய்கறிகள், சிறு தானியங்கள் என என்னுடைய விவசாயப் பண்ணையை ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றியுள்ளேன். நிலத்தடி நீரைப் பராமரிக்க வெட்டியுள்ள சிறு குட்டையில் மீன் வளர்க்கிறேன். இதன் மூலம் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது. என்னுடைய நிலத்திற்குள் சுமார் 150 கோழிகள் மற்றும் மாடுகளையும் வளர்க்கிறேன்.

ஒருங்கிணைந்த பண்ணை முறை சிறந்த பலனைத் தருகிறது. இயற்கை விவசாயத்தை லாபகரமாக செய்வது எப்படி என்று நாங்கள் இன்று பயிற்சி அளிக்கிறோம்.

மாதம் ரூ.20 ஆயிரம் ஈட்டலாம்
ஒரு ஏக்கர் நிலத்தில் கணவனும், மனைவியும் மட்டுமே உடல் உழைப்பைச் செலுத்தி இயற்கை விவசாயம் செய்தால் மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாயை எளிதில் ஈட்டிவிட முடியும் என்று எடுத்துச் சொல்கிறோம். விதை முதல் விற்பனை வரை அத்தனையையும் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம்.

சந்தைப்படுத்தவும் வழிவகை
இயற்கை விவசாயத்தை செய்வது குறித்து மட்டுமின்றி, விளைவித்த வேளாண் பொருட்களை அவரவர் உள்ளூரிலேயே சந்தைப்படுத்தவும் வழிவகை செய்து கொடுக்கிறோம். இன்று தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாயிகள் நெட்வொர்க்கும், அதனை சந்தைப்படுத்துவதற்கான வலையமைப்பும் உருவாகி விட்டது. உழவர்கள் தாங்கள் இயற்கையான முறையில் விளைவிக்கும் வேளாண் பொருட்களை உள்ளூரிலும், சுற்றுப்புறங்களிலும் தாங்களே விற்பனை செய்வதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்கே முன்னுரிமை கொடுக்கிறோம்.

வெளிநாடுகளின் ஆர்டர்கள்
எங்கள் குழுவில் உற்பத்தி செய்யும் இயற்கை வேளாண் பொருட்களை சென்னை உள்பட தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்புகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் கூட எங்களுடைய ஆர்கானிக் பொருட்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன. ஆனால், ஏற்றுமதி செய்யும் அளவுக்கு மிகுதியான உற்பத்தி எங்களிடையே இல்லை. நாட்டு மாட்டுப் பசுவில் தயாராகும் நெய்யை அவர்கள் கேட்கும் அளவுக்கு எங்களால் இப்போதைக்கு சப்ளை செய்ய முடியாது.

50 பேர் இயற்கை விவசாயத்திற்கு மாற்றம்
என்னைச் சுற்றிலும் 50 பேரையாவது இயற்கை விவசாயத்திற்கு மாற்றிவிட வேண்டும் என்று எண்ணினேன். என்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டேன். இதேபோல், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தபட்சம் 50 பேர் இயற்கை விவசாயத்திற்கு மாறினால் அது மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும். 50 பேர் என்பது 500 பேர் ஆகலாம். இன்னும் அதிக எண்ணிக்கையைத் தொடலாம்.

இயற்கை விவசாயத்திற்கு மாறும் போது முதல் 3 ஆண்டுகள் சற்று கடினமான இருக்கும். அந்த காலத்தை மட்டும் கடந்துவிட்டால் அதன் பிறகு மண் நாம் சொல்வதைக் கேட்கும். இயற்கை விவசாயம் லாபகரமான ஒன்றாகிவிடும்.

ஒவ்வொரு ஊரிலும் இந்த நிலை உருவாகும் போது அனைவரின் தட்டிலும் ஆரோக்கியமான உணவு போய்ச் சேரும். அதுவே எங்களின் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.