PACL வீழ்ந்த வரலாறு…
பணம் திரும்ப கிடைக்குமா.. மினி தொடர்…! – 6
வெட்டவெளிச்சமான பிஏசிஎல் ஊழல்கள்… தற்கொலைக்கு ஆளான முதலீட்டாளர்கள்
பிஏசிஎல் நிறுவனத்தால் ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தர உச்சநீதிமன்றம் நீதிபதி ஆர்.எம்.லோதா (ஓய்வு) தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது பிஏசிஎல்லின் சொத்துக்களை விற்கும் பணியைத் தொடங்கிய போது, முதலீட்டாளர்கள், விரைவில் நமக்கான பணம் திரும்பி விடும் என நம்பினர்.
இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பிஏசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்கத் தொடங்கினர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு பணம் மட்டும் கிடைத்தபாடில்லை.
இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்த நிலையில், முகவர்களில் சிலர், முதலீட்டாளர்களிடம், ”உங்கள் பணம் திரும்பிப் பெற நீங்கள் பணம் கட்டியதற்கான பத்திரத்தை கொடுங்கள்” என கேட்கவே, பணம் வந்து விடும் என நம்பி பலரும் தங்கள் முதலீட்டிற்கான ஆவணங்களை கொடுக்கத் தொடங்கினர்.
முதலீட்டிற்கான ஆவணங்கள் இல்லையென்றால் பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் அற்று நாளை அதுவே பெரும் தலைவலியாகிவிடும் என்பதை அறிந்த செபி முதலீட்டாளர்களிடம் சில விபரங்களை பகிர்ந்து கொள்ளத் தொடங்கியது.
பிஏசிஎல் நிறுவனத்தின் திட்டங்களில் செய்துள்ள முதலீடுகள் தொடர்பான பதிவேடுகளை, ஆவணங்களை பிஏசிஎல் லிமிடெட் நிறுவனத்திடமோ அல்லது குழுவிடமிருந்து மேற்கொண்டு தகவல் கிடைக்கப் பெறும் வரை பிஏசிஎல் லிமிடெட் வேறொரு நபரிடமோ கொடுக்கக் கூடாது மற்றும் அல்லது பகிர்ந்து கொள்ளக் கூடாது.
புதிதாக முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். தவணை எதுவும் செலுத்த வேண்டாம். பிஏசிஎல் லிமிடெட் நிறுவனத்திற்கு அல்லது அதன் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் போன்றோருக்கு பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என
அறிவித்திருந்தனர்.
மேலும் பிஏசிஎல் வாடிக்கையாளர்கள் அசல் ஆவணங்களை தங்களிடம் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என எச்சரிக்கை செய்தது. முதலீட்டுப் பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையின் போது அசல் ஆவணங்களைக் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காவிட்டால் பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்படும்.
செபியின் மூலம் பொது அறிவிப்பு வரும் வரை வாடிக்கையாளர்கள் அனைத்து அசல் ஆவணங்களையும் தங்களிடமே வைத்திருக்க வேண்டும். அதை வேறு நபரிடமோ அல்லது முகவர் போன்றோரிடமோ பகிர்ந்து கொள்ளவோ பரிமாற்றம் செய்யவோ ஒப்படைக்கவோ வேண்டாம்.
பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்வது, போதுமான அளவுக்கு தொகை திரட்டப்பட்ட பிறகு பிஏசிஎல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் அழைக்கப்படும். குழுவால் தீர்மானிக்கப்பட்ட வடிவமைப்பில் முதலீட்டுப் பணத்தை திரும்பப் பெறுவதற்காக விண்ணப்பிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுவிக்கப்படும்.
உங்களுடைய தற்போதைய முதலீடுகளை அவர்களுடைய இதர திட்டங்களுக்கு மாற்றியமைப்பதற்கு அல்லது மாற்றிக் கொள்வதற்கு விடுக்கப்படும் எந்த ஒரு அழுத்தங்களுக்கும் நீங்கள் அடிபணிந்து விட வேண்டாம்.
பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்த பிறகு பிஏசிஎல் லிமிடெட் நிறுவனத்தின் உண்மையான முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுப் பணத்தைத் திருப்பித் தருவதற்கு உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு மாறாக எந்த ஒரு நபரும் மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியும் உச்சநீதிமன்ற ஆணையை மீறுவதாகும் என அறிவித்திருந்தது.
செபியின் மூலம் பணம் பெறுவதில் தாமதமான நிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட PACL முதலீட்டாளர்களால் பல அமைப்புகள் உருவாயின. இந்த அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தின, செபி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக தங்கள் கோபத்தை காட்டினர். புது டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் மிகப்பெரிய ஆரப்பாட்டத்தை நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். முதலீட்டாளர்களின் சில தற்கொலை வழக்குகள் இந்த பிஏசிஎல் நிர்வாகத்தின் ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன.
தொடரும்