PACL வீழ்ந்த வரலாறு..! பணம் திரும்ப கிடைக்குமா.. தொடர்.. 3
மத்திய அரசின் பொதுத் துறை வங்கிகள், “தங்கள் வங்கியில் பணம் டெபாசிட் செய்யுங்கள்” என நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வெளியானாலும் பொது மக்கள் நாடுவது தனியார் நிறுவனங்களைத் தான். காரணம் அதிக வட்டி.
பெரும்பாலும் தனியார் நிதி நிறுவனங்களில் படிப்பறிவற்ற பாமர மக்களும், கிராமப்புற மக்களுமே அதிகமாக தங்களது பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இவர்களை அத்தகைய வலையில் சிக்க வைப்பது நகர்புற வேலைவாய்ப்பற்ற, உழைத்து பணம் சம்பாதிக்க விரும்பாத படித்தவர்களே. இவர்கள் தான் பாமர மக்களிடம் சென்று, “பொதுத் துறை வங்கிகளில் 1 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து வெறும் 50 ஆயிரம் ரூபாய் தான் கிடைக்கும். அதே எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நான்கைந்து லட்சம் கிடைக்கும் என ஆசை வார்த்தையை கூறி வலைவிரிப்பார்கள். அதாவது படிப்பறிவற்ற பாமர மக்கள் ஏமாறுவது படித்த, நகர்புற மக்களால் மட்டுமே சாத்தியமாகின்றது.
பெரும்பாலான நிதிநிறுவனங்கள் தொடக்கத்தில் சரியான பாதைகளில் தான் பயணம் மேற்கொள் கின்றன. ஆனால் எதிர்பாராத வருவாய் அவர்களின் நிர்வாக கட்டமைப்பை நிலைகுலையச் செய்கின்றன. எதிர்பாராத வருவாய் நிரந்தரமில்லை என்பதை உணராமல் பணத்தை தண்ணீராய் வாரி இறைத்து செலவு செய்வது, தவறான இடங்களில் முதலீடு செய்வது, சினிமா தயாரிப்பில் இறங்குவது உள்ளிட்ட இப்படியான சூதாட்ட பாணியிலான தொழில்களில் கால்பதிப்பதே காரணமாக அமைகின்றன. முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக வாக்குறுதி கொடுக்கும் போது அதிக லாபம் கிடைக்கும் இடங்களிலேயே அவர்களின் முதலீடும் அமைந்து விடுகின்றன.
பி.ஏ.சி.எல். றிP7 என்ற பெயரிடப்பட்ட செய்தி சேனலை பல கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கியது. இதன் மூலம் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் முதலீட்டாளர்களை ஈர்த்தது. பிரபல கிரிக்கெட் வீர்ர்கள், சினிமா நட்சத்திரங்கள் றி7 சேனலில் தோன்றியதால் பி.ஏ.சி.எல். மீதான நம்பகத்தன்மை அதிகரித்தது. இதுவே அந்நிறுவனத்திற்கு அதிக முதலீடு சம்பாதிப்பதற்கான ஆதாரமாக இருந்தது. பி.ஏ.சி.எல். வசூலித்த கோடிக்கணக்கான பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ததோடு மட்டுமன்றி ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் பல்வேறு இடங்களிலும் பி.ஏ.சி.எல். பெரும் முதலீடுகளை செய்தது.
முதலீட்டாளர்களிடமிருந்து பி.ஏ.சி.எல். நிறுவனத் தால் திரட்டப்பட்ட பணம் ஆஸ்திரேலியாவில் சில சொத்துக்களை வாங்குவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவில் பி.ஏ.சி.எல்லின் மிக முக்கியமான சொத்து என்பது ‘கோல்ட் கோஸ்ட்டில் உள்ள ஷெரட் டோன் மிரேஜ்’ ஆகும், இது 2013-&ம் ஆண்டில் கிட்டத்தட்ட 170 மில்லியன் டாலர் மதிப்பில் இருந்தது. 6 கோடி முதலீட்டாளர்களால் முதலீடு செய்யப்பட்ட பணம் சரியாக பயன்படுத்தப்படவில்லை, முதலீடு செய்யப்பட்ட பணம் உண்மையில் பி.ஏ.சி.எல். குடும்ப உறுப்பினர்கள், அவர்களது நண்பர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருந்தது. பி.ஏ.சி.எல். நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் அவசர தேவைக்கு பணம் கேட்ட போது கிடைக்கவில்லை என்ற போது தான் பி.ஏ.சி.எல். நிலை குறித்து விவாதம் தொடங்கியது. இது குறித்து பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியாகத் தொடங்கியது.
பி.ஏ.சி.எல். குறித்து எதிர்மறை செய்திகள் வெளியானதும் முதலீட்டாளர்கள் ஏராளமானோர் தங்கள் பணத்தை திரும்பப் பெற அலுவலகத்தை நாடினர். இந்நிலை இந்தியா முழுக்க நீடித்தது. இந்தியாவில் உள்ள அனைத்து பி.ஏ.சி.எல். அலுவலக வாசலிலும் முதலீட்டாளர்கள் குவியத் தொடங்கினர். அலுவலகம் முற்றுகையிடப்பட்டு, “எங்களது டெபாசிட் தொகையை உடனே திரும்ப கொடுங்கள்” என ஒரே நேரத்தில் பல லட்சம் மக்கள் பணம் கேட்டு நிர்வாகத்தை நெருக்கத் தொடங்கினர். பொது மக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து மத்திய நிதித்துறை அமைச்சகம் பி.ஏ.சி.எல். நிறுவன செயல்பாட்டை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது.
சிபிஐ அளவிற்கு கண்காணிப்பு தொடங்கிய பிறகு தான் பி.ஏ.சி.எல்லின் நிலை வெளிஉலகிற்கு அப்பட்டமாக தெரியத் தொடங்கியது. இந்த செய்திகள் பி.ஏ.சி.எல். முதலீட்டாளர்கள் அனைவருக்கும் தெரியத் தொடங்கியதும் முதல் பாதிப்பு முகவர்களுக்கு தான் ஏற்பட்டது. பெரும்பாலான முகவர்கள் நிறுவனத்தை நம்பி, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், உறவுக்காரர்கள் என பலரையும் முதலீட்டாளர்களாக சேர்த்தனர். பி.ஏ.சி.எல். நிறுவனத்திலிருந்து பணம் திரும்பக் கிடைக்காது என்ற தகவல் பரவியதும் எல்லோரும் முதலில் முற்றுகையிட்டது முகவர்களின் வீட்டு வாசலைத் தான். ஏராளமான முகவர்கள் முதலீட்டாளர்களுக்கு பயந்து தலைமறைவான கதையும் நடந்தேறியது. இந்நிலையில் முதலீட்டாளர்களை சமாதானப்படுத்த பல்வேறு கதைகளை அவிழ்த்துவிட்டனர் நிறுவன அதிகாரிகள்.
– & அவை அடுத்த இதழில்…