தொழில் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதியினை கட்சிகள் பெற தேர்தல் பத்திரம் எஸ்.பி.ஐ. வங்கியில் விநியோகம்..
தொழில் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதியினை கட்சிகள் பெற
தேர்தல் பத்திரம் எஸ்.பி.ஐ. வங்கியில் விநியோகம்..
தேர்தல் காலத்தில் பெரிய கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து கட்சி நிதி பெற்று வந்தது. ஆரம்ப காலங்களில், கட்சிக்கான நிதியுதவியை நிறுவனங்கள் கணக்கில் வராத பணத்திலிருந்தே கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் இந்த நடைமுறை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக உருவாகவே, அவர்களின் பிரச்சனையை போக்க மத்திய அரசு (ஆளுங்கட்சி), ஒரு சட்டம் இயற்றியது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், தொழில் நிறுவனங்களிலிருந்து, கட்சி நிதியினை வங்கி பத்திரம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என ஒரு திட்டத்தை அறிவித்தது.
தேர்தல் பத்திர திட்டத்தின் கீழ், தனிப்பட்ட இந்தியாவின் குடிமகனோ, குடிமகனாக அறிவிக்கப் பட்டவரோ தேர்தல் பத்திரங்களைத் வாங்கிக் கொள்ளலாம். இந்தப் பத்திரங்களைத் தனியாகவோ, கூட்டாகவோ பெற்றுக் கொள்ளலாம். இந்திய அரசின் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (1951) 29ஏ பிரிவின்கீழ், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அந்தக் கட்சி மக்களவைத் தேர்தலிலோ சட்டப்பேரவைத் தேர்தலிலோ ஒரு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அக்கட்சிகளே தேர்தல் பத்திரங்களைப் பெறுவதற்குத் தகுதியுடையவை.
இந்தப் பத்திரங்களை வாங்கும் தகுதியான அரசியல் கட்சி, அதை மாற்றும் போது, வங்கிக்கணக்கு மூலமே நிதியைப் பெற முடியும். அதிகாரம் பெற்ற கிளைகளில் மட்டுமே கொடுத்து நிதியைப் பெற இயலும். இந்தப் பத்திரங்களை வழங்கவும், அவற்றைத் திருப்பித் தருவோருக்கு உரிய தொகையை அளிப்பதற்கும் எஸ்.பி.ஐ.யின் குறிப்பிட்ட கிளைகளுக்கு மட்டும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை, சென்னை பாரிமுனையில் தம்பு செட்டி தெருவில் இருக்கும் சென்னை தலைமைக் கிளைக்கு இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் 10 வரை பாரத ஸ்டேட் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட 29 கிளைகளால் இவை விநியோகம் செய்யப்படும்.