பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் உடல் அசைவுகளை கவனியுங்கள்
ஒருவர் பேசும்போது அவருடைய முக பாவனை எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அவர் சிரித்துக்கொண்டு பேசுகிறாரா? கோபத்தில் பேசுகிறாரா? நிதானமாக பேசுகிறாரா? எரிச்சலுடன் பேசுகிறா ரா? அன்புடன் பேசுகிறாரா? என்பதை அவரது முகத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
‘Face is the index of mind’ என்றது ஆங்கிலத்தில் பிரபலமான கருத்தாகும். அதாவது, ‘ஒரு மனிதனின் முகம், அவரது மனதின் பிரதிபலிப்பாக அமைந்துவிடும். இதன்மூலம் நம் மனதின் தன்மையை மற்றவர்கள் எளிதில் அறிந்துகொள்வார்கள்’ என்பது அதன் உட்கருத்தாகும்.
‘அவன் என்னைப் பார்த்து ‘ஏய்’ என்றுதான் சொன்னான். அவன் அந்த வார்த்தையை சொல்லும்போது அவன் முகமே சரியில்லை’ என்று சிலர் வருத்தப்படுவதை இன்றும் காணலாம். இங்கு, வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதில் முக அசைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு விளங்கும். சில நேரங்களில் வார்த்தை களால் விவரிக்க வந்த கருத்தைவிட, ஒருவரது உடல் அசைவுகள் கொடுக்கும் கருத்துக்கள் விரிவான விளக்கம் அதிகமாகவே இருக்கும்.
முக பாவணையைப்போலவே ஒருவர் நிற்கும் விதம், நடக்கும் விதம், வார்த்தைகளை உபயோகிக்கும் முறை, கை, கால், கண் அசைவுகள் ஆகிய உடலிலுள்ள பாகங்களின் அசைவுகளும் தகவல்களுக்கு வெவ்வேறு அர்த்தங்களை தெரிவிக்கின்றன.
எனவே ‘உடல் அசைவுகள்’ பற்றி தெரிந்துகொண்டு, கேட்கும்போதே தகவல்களின் அர்த்தத்ததை புரிந்துகொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வெறும் வார்த்தைகளை மட்டும் கேட்டு அர்த்தம் கொண்டால் முழுமையான அர்தத்தை புரிந்துகொள்ள இயலாது. அதே நேரத்தில் ஒருவரது உடல் அசைவுகளையும், கருத்தில் கொண்டு வார்த்தைகளுக்கு அர்த்தம் கொள்ளும்போது அந்தத் தகவலை முழுமையாக புரிந்துகொள்ள இயலும். சிலவேளைகளில் மவுனங்களே வார்த்தைகளாக மாறி பதில்களைத் தெரிவிக்கும்.
‘நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே நீ சினிமாவுக்கு வருகிறாயா’ என்று கேட்டான் நண்பன். ராஜேஷ் அமைதியாக நின்றான். ‘மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி. ராஜேஷ் ‘எஸ்’ சொல்லிவிட்டான்’ என்று சொன்னான் நண்பன். இப்படி சொல்லாத வார்த்தைகளுக்கு கூட அர்த்தம் கண்டுகொள்பவர்கள் உண்டு. ஒருவர் ஒரு தகவலைத் தரும்போது சுவாரஸ்யம் இல்லாமல் அந்தத் தகவலை கேட்பதை தவிர்க்க வேண்டும். எனவே பெர்சனாலிட்டியை வளர்த்துக்கொள்ள விரும்புவர்கள் உடல் அசைவுகளில் அதிக கவனம் செலுத்தி தகவல்களைப் பெறுவது நல்லது.