சிறந்த தலைமை பண்பு அடையாளம் காட்டும் குணங்கள்
ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு இருக்க வேண்டிய சிறந்த தலைமை பண்புகள் குறித்து சிலவற்றை சென்ற இதழில் பார்த்தோம். மேலும் சில பண்புகள் குறித்து இங்கே தருகிறோம்.
பொது விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்வது
‘எனக்காக இல்லை, மற்றவர்களுக்காகக் கேட்கிறேன்’ என்பது தான் தன்னைத் தாண்டிச் சிந்திப்பது. இப்படிச் சிந்திப்பவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள். அவர்களே மக்கள் தலைவனாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் எடுக்கத் தயங்குகிற விஷயங்களைக் கையில் எடுத்துக் கொள்பவன் தலைவன்.
சம்பந்தப்பட்டவர்களுக்குப் பெருமை செய்யுங்கள்
தலைவன் என்பவன் மற்றவர்கள் புகழை, உழைப்பைத் திருடுபவர்களாக இருக்கக் கூடாது. உடன் பணியாற்றுபவர்கள், குழு உறுப்பினர்கள் என்று அவர்கள் யாராக இருந்தாலும், வேலையில் பங்களிப்பை செய்தவரை கௌரவிக்கும் வகையில் ‘அவர் தான் அந்தப் பணியைச் செய்தார்’ என்று பிறரிடம் அறிமுகம் செய்வது ஓர் பண்பாடு. அது எதிரிகளாலும் மதிக்கப்படும். மற்றவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, பாராட்டு செய்யும் விதமாக நடந்து கொள்பவனே நல்ல தலைவன்.
கவனம் பிசகக் கூடாது
ஏதோ ஒரு தொலைநோக்கைச் சொல்லி, எங்கேயோ தொடங்கி, எப்படியோ போய்த் திசை தடுமாறி பறவைகளாக தலைவனின் செயல் ஆகி விடக்கூடாது. மொழியா, இனமா, தேசமா, பொருளாதார உயர்வா, விரிவாக்கமா, சமுதாய முன்னேற்றமா அது எதுவாகவும் இருக்கலாம். எடுத்த செயலில் முழுக்கவனம் கொள்பவர்கள் தலைவர்கள். தலைவர்களுக்கு வேண்டிய குணம் இது.
மற்றவர்களையும் கலந்து கொள்ளுங்கள்
தலைவனுக்கு பிரச்சனைகள் புரிகின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளும் தெரிகின்றன. உடனே அவற்றை சரி செய்ய களத்தில் இறங்கலாமா என்றால் கூடாது. அவர் தன் திட்டங்களைப் பற்றி உடனிருக்கும் சகாக்களுடன் கலந்தாலோசித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும்
அவசர முடிவுகள் கூடாது
எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பெரிய முடிவுகளை தலைவன் நடைமுறைப்படுத்த முயற்சிக்கக் கூடாது. முதலில் தன் திட்டங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்ய வேண்டும்.
கொள்கைகளால் கவருங்கள்
உருவம் இருக்கட்டும். அவை ஆரம்ப ஈர்ப்புக்கு உதவலாம். ஆனால் கொள்கைகளால் தான் ஒரு தலைவன் நிலைத்து நிற்க முடியும். எவ்வளவோ நபர்கள் அழகாக, கவர்ச்சியாக இருந்தும் கூட, பெரிய கூட்டத்தை தன் வசப்படுத்த முடியாமல் தவற விடுகிறார்கள். காரணம் அவர்களுடைய கொள்கைகள், அணுகுமுறைகள் தான். அதேசமயம் வெளித்தோற்றம் சிறப்பாக இல்லாதவர்கள் கூட தாக்கம் ஏற்படுத்துகிற தலைவர்களாக பரிமளிப்பதைப் பார்க்கிறோம்.
நம்பிக்கை கொள்ள வையுங்கள்
யானையைத் தருகிறேன், பூனையைத் தருகிறேன், என்று யார் வேண்டுமானாலும், சொல்லலாம். கேட்பவர்கள் நம்ப வேண்டுமே. நம்ப வைப்பவன் தான் தலைவன். பலரும் சிறந்த சிந்தனையாளர்களாகவும், தொலைநோக்கு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அப்படி இருப்பவர்கள் அனைவருமே தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எல்லா வெற்றிகரமான தலைவர்களிடமும் ஏதோ ஒரு வழிமுறை, சக்தி, திறன் இருக்கிறது. அவர்கள் சொல்வதை நம்புவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அப்படி மக்களை நம்பிக்கை கொள்ள வைப்பது தலைமையின் குணம்.
விட்டுக் கொடுக்காதிருங்கள்
தலைவன் தனித்திறமையாளன் அல்ல. அப்படியே இருந்தாலும் தன் அணியை அரவணைத்துச் செல்ல வேண்டும். ‘வெற்றிக்கு நானே காரணம். தோல்விக்கு என் குழு தான் காரணம்’ என்று சொல்பவர் தலைவன் இல்லை. குறிப்பிட்ட சம்பவங்கள், நிகழ்ச்சிகளில், நேரங்களில் ஏதோ காரணங்களால் வெற்றி நழுவி விட்டது. நல்ல தலைவனாக இருப்பவன் எந்தக் காரணம் கொண்டும் தன் குழுவை விட்டுக் கொடுக்க மாட்டான். அவர்களுக்காக வாதாடுவான்.
தன்னைத்தாண்டிச் சிந்திப்பது
தலைவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே நினைப்பதில்லை. தான் உண்டு. தன் வேலையுண்டு என்று செல்பவர்கள் தலைவர்களில்லை. தனக்குக் கிடைப்பதை மட்டும் பார்க்காமல், மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தலைமையை நோக்கிச் செல்வதில் மற்றவர்களைவிட இவர்கள் ஒரு படி மேல் தான்.