கடந்த வாரம் நடந்த 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில அந்தஸ்து அடிப்படையில் ஓட்டுரிமை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக வரி ஆலோசகர் சங்க தலைவர் ராஜகோபால் கூறியதாவது,
ஜிஎஸ்டி தொடர்பான அமைப்பு பிரதமர் வாஜ்பாய் காலத்தில் உருவாக்கப்பட்டது.
அப்போதைய மேற்கு வங்க மாநிலத்தின் நிதி அமைச்சர் தலைமையில் இதற்கான குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு பல்வேறு கட்டங்களாக மாற்றப்பட்டு நிர்வாகப்பிரதிநிதித்துவம் பற்றி இறுதி செய்த விஷயம் என்னவெனில் மாநிலத்துக்கு ஒரு ஓட்டு அந்தந்த மாநிலங்களின் நிதியமைச்சர்கள் அல்லது துணை முதல்வர்கள் அல்லது பிற அமைச்சர்கள் கவுன்சிலில் இடம்பெற்றுள்ளனர்.
இவ்வாறு கவுன்சிலில் உள்ள 33 உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். குறிப்பாக ஒரு பொருள் மீதான வரியை நீக்குவது, வரிபட்டியலை மாற்றுவது உட்பட பல பிரச்சனைகளில் அதிகப்படியான உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகளே அமல்படுத்தப்படும்.
இதில் பெரிய சிறிய மாநிலங்கள் என்று பாகுபாடு இல்லை. முதல்வர், நிதியமைச்சர் என்ற பதவிகள் எல்லாம் மாநிலத்துக்கு சமமான அந்தஸ்து கொண்டவைகள் தான்.
மக்கள் தொகையின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் என்பது ஜிஎஸ்டி கவுன்சில் சாத்தியம் இல்லாத ஒன்றாகும்.
அப்படிப்பார்த்தால் நம்மை விட மூன்று மடங்கு மக்கள் தொகை கொண்ட உபி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும்.
அப்படி வழங்கும்போது, ஜிஎஸ்டி கவுன்சிலால், எந்த முடிவும் எடுக்க முடியாது.
இது கவுன்சிலின் செயல்பாடுகளை பாதிக்கும். இப்போதிருக்கும் சூழலில் கவுன்சில் 33 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மத்திய அமைச்சர் நிதித்துறை இணை அமைச்சர் என்ற 2 உறுப்பினர்கள் மட்டுமே மத்திய அரசின் உறுப்பினர்கள்.
மாநிலங்கள் என்ற அடிப்படையில் எல்லா மாநிலங்களின் நிதியமைச்சர்களும் ஒரு உறுப்பினர்.
இது ஒரு சிறப்பான கட்டமைப்பு என்று அவர் கூறினார்.