ஸ்க்ரீன்ஷாட் அனுப்புங்க.. ஏமாறுங்க..! மோசடியில் இது புதுசு..!
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியிருந்த சென்னை, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த லட்சுமி, ஆன்லைனில் வேலை தேடியுள்ளார். அப்போது ஒரு நிறுவனம், யூடியூபில் வீடியோக்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பும் வேலையை வழங்கியுள்ளது. இந்த வேலைக்கு நாளொன்றுக்கு ரூ.1,400 சம்பளம் எனவும், வேலையில் சேர டெபாசிட் தொகையாக ரூ.30,000 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆசை யாரை விட்டது..!
உடனே ரூ.30,000த்தை கட்டி வேலையை தொடங்கினார். ஆரம்பத்தில் அவருக்கு தினமும் ரூ.1,400 வங்கி கணக்கில் வந்துள்ளது. இது குறித்து அவர் தனது நண்பர்களுக்கு தெரிவிக்க அவர்களும் ஆளுக்கு ரூ.30,000 பணம் செலுத்தியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட தொகை வசூலானதும் பார்ட்டி எஸ்கேப்..! வங்கிக் கணக்கில் பணம் வருவது நின்று போனது. இது குறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தொடர்பு எண்ணிற்கு டயல் செய்தால் அது உபயோகத்தில் இல்லை என தெரிய வந்துள்ளது.
அதாவது முதலில் பொது மக்களிடமிருந்து பணத்தை வசூலித்து அந்த பணத்திலிருந்து ரூ.1,400ஐ வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர். நாலு பேருக்கு விஷயம் தெரிந்து நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு பலரும் ரூ.30,000 பணத்தை வாரி இறைக்க, வசூலான பெரும் தொகையுடன் ஓடிவிட்டது மோசடி கும்பல். இது குறித்து சைபர் க்ரைம் போலீசார் மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.