பிசினசில் முன்னேற சில மார்க்கெட்டிங் மந்திரங்கள்..!
‘சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் தங்கள் பொருட்களைத் தரமான முறையிலும், நல்ல தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும் தயாரித்து வருகின்றனர் ஆனால், அவர்களுக்கு அதனை எப்படி சந்தைப்படுத்துவது பற்றிய விழிப்பு உணர்வு சற்று குறைவாகவே உள்ளது. இந்த விஷயத்தில் இரண்டு விதமான பிரச்னைகளை தொழில்முனைவோர்கள் எதிர்கொள்கின்றனர்.
- முதலாவதாக, புதிய தொழில்முனைவோர்கள் எங்கு தொழில் தொடங்குகிறார்கள்? என்ன பொருளை தயாரிக்கிறார்கள்? அதற்கான மார்க்கெட் அவர்கள் தொழில் செய்யும் பகுதியில் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அடுத்து, யாருக்கு அந்தப் பொருள் அதிகம் தேவைப்படுகிறது என்று பார்க்க வேண்டும். அதற்கேற்றவாறு தங்கள் தொழிலை மார்க்கெட் செய்ய வேண்டும். தொழிலை தொடங்கும் முன் சிலர் சரியான திட்ட அறிக்கை இல்லாமல் ஆரம்பித்து விடுகின்றனர். ஒழுங்காக மார்க்கெட்டை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு பொருட்களைத் தயாரித்து சந்தைப்படுத்த வேண்டும். மார்க்கெட் ஆராய்ச்சி செய்யாமல் தொழிலில் இறங்குபவர்கள் ஆரம்பத்தில் மார்க் கெட்டை தவறவிட் டால் அவர்களுக்கு சந்தைப்படுத்துதல் என்பது சவாலாக மாறிவிடுகிறது.
- இரண்டாவதாக, ஏற்கெனவே தொழில் முனைவோராக இருப்பவர்கள் அவர்கள் செய்யும் பொருட்களை நல்ல முறையிலும், அதிகத் தரத்தோடும் தயாரித்துவிட்டு, அதனை விற்பனை செய்ய சரியான வழி தெரியாமல் தவிக்கின்றனர். பொருட்களை விற்பதற்கான வாய்ப்பு எங்கு இருக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே அவர்களால் சந்தையில் பிரகாசிக்க முடியாமல் போகக் காரணம். சந்தைப்படுத்துதல் குறையும் போது அவர்களால் தங்கள் உற்பத்தி விற்பனை விகிதத்தை சரிவரப் பராமரிக்க முடியாது. அதனைக் கட்டுப்படுத்த சரியான மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் எங்கு விற்பனையாகும், யாருக்கு விற்கலாம் என்பது போன்ற தகவல்களின் அடிப்படையில் உத்திகளைப் பின்பற்றினால் அவர்களால் மார்க்கெட்டில் தங்கள் பொருட்களை விற்க முடியும். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தொழில் துறை மையம் உள்ளது. அதில், எஸ்.எம்.இ.களை மேம்படுத்த மற்றும் அவர்கள் பயன்பெற உதவும் அனைத்துத் திட்டங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டு உதவிகளும் வழங்கப்படுகிறது. இதனை எஸ்.எம்.இ.கள் அவசியம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.