பட்டா மாறுதலில் கட்டாயம்
உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்ய வேண்டிய இனங்களில் சொத்தின் உரிமையாளர்களை தொடர்பு கொள்ளும் போதும், ஆவணப்பதிவின் போதும் ஆவணதாரர்களின் செல்போன் எண்ணை அளிக்காமல் வேறு நபர்களின் செல்போன் எண்ணை அளித்திருப்பதாகவும், ஒரே மொபைல் போன் பல்வேறு ஆவணங்களுக்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்துறை இயக்குனரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தன்னிச்சையாக பட்டா மாற்றம் செய்யப்படும் (உட்பிரிவு செய்யப்படாத இனங்கள்) இனங்களை பொறுத்து ஆதார் எண்ணையும், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணையும், பிற பட்டா மாறுதல் இனங்களைப் இணையதளத்தில் ஆவண விவரங்களை உள்ளீடு செய்யும் போது தங்களின் சரியான செல்போன் எண்ணை பொது மக்கள் அளிக்க சார்பதிவாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.
பொது மக்களின் மொபைல் போன் எண்களை உள்ளீடு செய்யாமல் ஆவண எழுத்தர்கள், தங்களின் செல்போன் எண்ணை ஆவணப்பதிவிற்கு உள்ளீடு செய்து ஆவணப்பதிவிற்கு வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆவண எழுத்தர் விபரத்தை மாவட்டப் பதிவாளர் மற்றும் துணைப்பதிவுத்துறை தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், அதிகமாக பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் ஆவண எழுத்தர் அல்லது அவரின் அலுவலகத்தில் வேலை செய்யும் நபருடையதாக இருப்பின் ஆவண எழுத்தர் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், பொதுமக்கள் பத்திரப்பதிவிற்கு பின்பு இணைய வழியில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து குறுஞ்செய்தி வாயிலாக கிரையம் கொடுப்போர், பெறுபவர் இருவருக்கும் தெரிவிக்கப்படும். உட்பிரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நிலக் கிரையங்களில் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்ட உடனே பட்டா மாற்றம் தானியங்கியாக மேற்கொள்ளப்படும்.
எனவே, கிரையம் பெறுபவர் துரிதமான பட்டா மாறுதல் சேவையினை பெறும் பொருட்டு தமது செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.”. இது பத்திரப்பதிவுத்துறை ஐஜி சிவன் அருள், தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவலாகும்.