ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக சிறப்பு நடமாடும் மார்பக பரிசோதனை வாகனம்
ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிறப்பு நடமாடும் மார்பக பரிசோதனை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம், உலகெங்கிலும் மார்பக புற்றுநோய் மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, இந்த மாதம் முழுவதும் பொது மக்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரச்சார வாகனம் ஒன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனம், அக்டோபர் மாதம் முழுவதும் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று மார்பக புற்றுநோய் பற்றிய விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும்.
இந்த வாகனத்தில் பெண்மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு பயணம் செய்து, கல்லூரிகள், பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் ஆகிய பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, விருப்பமுள்ள பெண்களுக்கு, அந்த நடமாடும் வாகனத்திலேயே இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனையை மேற்கொள்ளும்.
மேலும், தேவைப்படும் பெண்களுக்கு, குறைந்த கட்டணத்தில் தெர்மோகிராம் ஸ்கேனிங் பரிசோதனையும் அந்த வாகனத்தில் செய்யப்படும்.
தெர்மோகிராம் பரிசோதனை என்பது, அகச்சிவப்பு கதிர்கள் கொண்ட கருவி மூலம் மார்பக பகுதியினை ஸ்கேன் செய்து, புற்று நோய் கட்டிகளை, அவை நம் கைகளுக்கு தெண்படுவதற்கு முன்னதாகவே கண்டு பிடிக்கும் முறையாகும்.
இந்த தெர்மோகிராம் பரிசோதனை வலியற்றது. மார்பகத்தை தொட வேண்டிய அவசியம் கிடையாது. பக்க விளைவுகள் அற்றது. ரூ. 3160 மதிப்புள்ள இந்த பரிசோதனை, இந்த பிரச்சார வாகனத்தில் ரூபாய் 500 க்கு செய்யபடுகிறது.
இந்த பிரச்சார வாகனத்தை திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா புற்று நோய் மருத்துவமனையில் அக்டோபர் 1ந்தேதி காலை 10 மணிக்கு, நாகமங்கலம் பஞ்சாயத்து தலைவர் வெள்ளைச்சாமி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை பிரச்சார வாகன துவக்க விழாவில், ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் இயக்குனர், புற்று நோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர்.சசிப்பிரியா, மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.