செய்கூலி சேதாரம் இல்லா தங்கம் சேமிப்பு
நகைக்கடையில் மாதாந்திர நகைச்சீட்டு கட்டும் நபரா நீங்கள். இதை கொஞ்சம் படியுங்கள். நகைச்சீட்டு அல்லது சிறு சேமிப்பின் மூலம் நகை வாங்குவோர், தவணை தொகை முடிந்ததும் வாங்கும் நகைகளுக்காக உங்கள் சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் செய்கூலி, சேதாரம் என கரைந்து விடும். தங்க காயின்களில் முதலீடு செய்யும் போது வங்கியிலோ, நகைக் கடைகளிலோ விற்க முடியாது. காயினுக்கு ஈடாக நகை மட்டுமே வாங்க முடியும். இதற்கு மாற்றாக வந்த முதலீட்டு திட்டங்களே இடிஎப், இ-கோல்டு, ஐகோல்டு எனும் பேப்பர் கோல்டு திட்டமாகும்.
இம்முறையில் தங்கம் வாங்க நீங்கள் டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும். இந்தியன் வங்கி, எஸ்பிஐ மற்றும் ஷேர் புரோக்கிங் அலுவலகத்திலும் உங்கள் பெயரில் டீமேட் கணக்கு ஆரம்பித்துக் கொடுக்கிறார்கள், உங்கள் கணக்கை பராமரிக்க ஆண்டு கட்டணம் என ஒரு சிறிய தொகையை வசூலித்துக் கொள்வார்கள். கோல்டு இடிஎப் முறையில் தங்கம் வாங்க டிரேடிங் கணக்கு தேவை. இதை புரோக்கிங் நிறுவனமே ஆரம்பித்து தருவார்கள்.
டீமேட் அக்கவுண்ட் என்பது பணம் வைத்திருக்கும் லாக்கர் போன்றது. டிரேடிங் அக்கவுண்ட் என்பது தங்கத்தை வாங்க, விற்க பயன்படும் நகைக்கடை போன்றது. இவ்விரண்டும் இருந்தால் தான் பேப்பர் தங்கம் வாங்கலாம்.
ஒரு கிராம் தங்கம் என்பது கோல்டு இடிஎப்பில் ஒரு யூனிட் என கணக்கிடப்படும். நீங்கள் வாங்கிய நாளில் தங்கத்தின் விலை ஒரு யூனிட் ரூ.4,000 ஆக இருந்து சில மாதங்களுக்கு பின் ரூ.5,000 ஆக உயரும் போது, யூனிட்டை நீங்கள் விற்க விரும்பினால், விற்கும் போது வரும் லாப தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். தங்கம் விலை ஏற, ஏற நீங்கள் வாங்கி வைக்கும் யூனிட்டின் மதிப்பும் உயரும். டீமேட் வடிவிலான தங்கத்தை வாங்கி சேமிக்கும் போது தங்கத்தின் ஏற்ற, இறக்கம் எவ்வகையிலும் பாதிக்காது. அவசர தேவையின் போது அன்றைய விலைக்கே விற்று பணமாக்கலாம். திருட்டு போன்ற பாதுகாப்பு விஷயம் குறித்து பயமில்லை.