வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம் என்ற முழக்கத்துடன், மே-5 வணிகர் தினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக திருச்சியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணியின் மாநில தலைவர் கிண்டி அன்சாரி தலைமையில், திருச்சி ஃபெமினா அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் ஜாஃபர் அலி உஸ்மானி துவக்கவுரை நிகழ்த்தினார். மேலும், இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எம்.ரஃபீக் அகமது, அப்துல் ஹமீது, மாநில செயலாளர் ரத்தினம், வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர்கள் கலீல் ரஹ்மான், பாத்திமா ஸ்டீல் முகைதீன், ஜோதி பேக் அஜ்மல் கான், மாநில பொருளாளர் அன்சர் குரூப் அப்துல் சமத், திருச்சி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக், திருச்சி தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலைவர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், விசிக துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன், மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொக்கையா சேக் முகமது, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி. முத்து ரத்தினம், தொப்பி வாப்பா குழும நிறுவனர் உமர் முக்தார் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் சிறு, குறு தொழில்கள் மத்திய அரசின் தவறான அதிகப்பட்ச வரிவிதிப்புக்கொள்கையால் இந்தத்துறை முழுமையாகவே சீரழிந்துவிட்டது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுகுறு தொழில்களின் வங்கிக் கடன்களை ரத்து செய்வதோடு, அந்த துறையை பாதுகாக்க புதிய வங்கிக் கடன்களை எளிய முறையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.
ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்தி சில்லரை வணிகத்தை பாதுகாக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிக்கப்படும் சில்லரை வணிகர்களை காக்க ஆண்டுக்கு ஒரு கோடிக்கு வணிகம் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
இந்தியாவில் முதலில் 75 மைக்ரான்களுக்கும் பின்னர் 120 மைக்ரான்களுக்கும் குறைவான பிளாஸ்டிக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 100 மைக்ரான்களுக்கும் குறைவாக இருக்கிற பிளாஸ்டிக்கள் அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இப்படி விதிமுறைகளை ஒன்றிய, மாநில அரசுகள் அடிக்கடி மாற்றி அறிவிப்பதால் இதை உற்பத்தி செய்கிற, கொள்முதல் செய்கின்ற வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதிகாரிகளின் ஏதேச்சதிகார போக்கை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகின்றது.
இந்தியாவைப் பொறுத்தவரை அரிசி நுகர்வில் தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாடு அதிக அளவில் அரிசி உணவை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே அரிசியின் மீதான இந்த வரி விதிப்பு தமிழக மக்களின் மீது தொடுக்கப்பட்டிருக்கிற அரசியல் தாக்குதலாகும். ஆகவே, உடனடியாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருக்கிற 5 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.