கொரோனா பாதிப்பு காலத்தில் மிக அதிகம் பாதிக்கப்பட்டதில் ஒன்று ஸ்விக்கி. உணவு சேவைகள் செய்து வந்த இந்நிறுவனம் கொரோனா காலத்தில் பெரும் சரிவை சந்தித்தது. ஆனால் ஊரடங்கிற்கு பின்பு உணவு சேவை நிறுவனங்கள் தான் முதலில் மீண்டெழுந்து என்று சொல்லலாம். இழந்த வருவாயை சில இடங்களில் 85 சதவீதமும், சில இடங்களில் 95 சதவீதமும், குறிப்பிட்ட சில இடங்களில் 100 சதவீதத்திற்கும் அதிகமான இலக்கினை மீட்டு விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கள் சேவையில் புதிதாக மாதம் 7000 உணவகங்களை இணைத்துள்ளதாகவும், ஊரடங்குக்கு முன்பு மாதம் 4000 உணவகங்கள் என்றிருந்த எண்ணிக்கை தற்போது 7000-மாக அதிகரித்துள்ளது. இவற்றில் 6000 உணவகங்கள் சிறிய மற்றும் நடுத்தர நிலையில் இருப்பவையாகும். ஸ்விக்கி சேவையில் உயர்தர உணவகங்கள் இணைவது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு ஆரம்பித்த தினத்திலிருந்து தற்போது வரை மொத்தம் 10 கோடி ஆர்டர்களை முடித்திருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.