தேட, தேட புதையலாகும் திருவரங்க ரங்கநாதனின் அருள் கடாட்சம்
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோயில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இந்த கோயில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது. மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளும் மற்றும் ஏறக்குறைய 53 உப சன்னதிகளும் உள்ளன.
காவிரி ஆற்றுக்கு நடுவே: ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாயகர் எனவும் தாயார் ரங்கநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். புராணங்களின் படி ராவணன் வதத்திற்கு பின்பு அயோத்தியின் மன்னனாக ஸ்ரீராமர் முடிசூடும் விழாவிற்கு வருகை தந்த விபீஷணனுக்கு, ஸ்ரீ நாராயணனின் சிறிய சிலையை ராமர் பரிசளித்தார்.
இலங்கையை நோக்கி… அதை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு திரும்பும் வழியில் இறைவழிபாடு செய்ய விரும்பிய விபீஷணன், இடையன் உருவிலிருந்த விநாயகரிடம் நாராயணனனின் சிலையை கொடுத்து, அதை எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக்கூடாது என கூறி காவேரி நதி தீரத்திற்கு சென்றான் விபீஷணன். விபீஷணன் வருவதற்கு நேரம் ஆகியதால் அச்சிலையை கீழே வைத்து சென்று விட்டார் விநாயக பெருமான். பிறகு வந்த விபீஷணன் நாராயணனின் சிலை கீழே வைக்கப்பட்டிருப்தை அறிந்து, அதை அகற்றுவதற்கு முயற்சித்தான். அப்போது நாராயணன் அசரீரியாக தான் இங்கேயே இருக்க விரும்புவதாக விபீஷணனிடம் கூறினார். ஆனால் விபீஷணனுக்கு வாக்களித்தது போலவே அவனது இலங்கை நாடு இருக்கும் தெற்கு திசையை பார்த்தவாறே தான் வீற்றிருப்பதாகவும் கூறினார்.
கிளிச்சோழ மன்னன் : அப்போது இப்பகுதியை ஆண்ட “தர்ம வர்ம சோழன்” ரங்கத்தாருக்கு ஆலயம் எழுப்பினான். சில காலங்களில் அது காவிரி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றுமணலில் முற்றிலும் புதைந்து போனது. பின்னாளில் ஆட்சிக்கு வந்த சோழ மன்னன் ஒருவன், ரங்கநாதரின் கோவில் எங்கிருக்கிறது என்பதை தினந்தோறும் ஆற்றுப்பகுதிக்கு வந்து தேடலானான். அப்படி ஒரு முறை இங்கு வந்த போது ரங்கநாதர் ஆலயம் மணலில் புதைந்து போவதற்கு முன்பு ரங்கநாதருக்கு செய்யப்படும் பூஜையின் போது வேதியர்கள் ஓதிய மந்திரங்களை, அக்கோவில் வளாகத்திலிருந்த மரத்தில் வசித்த கிளி ஒன்று நன்கு கவனித்தபடியால் அம்மந்திரங்களை மீண்டும் மீண்டும் உச்சரித்து கொண்டிருந்தது. இதை வைத்து புதைந்த கோவில் இருக்கும் இடத்தை அந்த மன்னன் கண்டுபிடித்து மீண்டும் சீரமைத்து கட்டியதால் “கிளிச்சோழன்” என அந்த சோழ மன்னன் அழைக்கப்பட்டான்.
இந்திய கோயில்களில் மிகவும் உயரமானது : 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது. “சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள்” என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. 14 ம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது. பரப்பளவில் இந்திய அளவில் மிகப்பெரிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். உங்களவில் இரண்டாவது பெரிய விஷ்ணு கோவில்.
இந்திய கோயில்களிலேயே மிக உயரமானதாக இருக்கும் இக்கோவிலின் கோபுரம் 1987 ஆம் ஆண்டு அனைவரின் முயற்சியாலும் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோவிலில் தான் திருவில்லிபபுத்தூரில் பிறந்து “கோதை” என்றழைக்கப்பட்ட அழ்வார்களில் ஒரே பெண்ணான “ஆண்டாள்” அரங்கனுள் ஐக்கியமானாள். இந்த கோவிலில் ஸ்ரீ ராமானுஜரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சை கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்படுகிறது. இங்கு கம்பராமாயண மண்டபம் இருக்கிறது. இங்கு தான் “கவிச்சக்ரவத்தி கம்பன்” தன் “கம்பராமாயணத்தை” அரங்கேற்றம் செய்து அந்த” நரசிம்ம மூர்த்தியாலேயே” பாராட்டப்பெற்றார்.
இந்த கோவிலின் இறைவனான ரங்கன் மீது தீவிர பக்தி கொண்ட டில்லி சுல்தானின் மகள் இக்கோவிலுக்கு வந்து ரங்கனை தரிசித்த போது, அங்கேயே தன் உடலை நீத்து ரங்கனில் ஐக்கியமானாள். எனவே அவள் “துலுக்க நாச்சியார்” என அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறாள். இந்த கோவிலின் இறைவனான ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீதேவியாகிய லட்சுமி மற்றும் ஆண்டாளுடன் காட்சியளிக்கிறார்.
துஷ்ட சக்திகள் ஓட்டும் கருடாழ்வார் : மேலும் நவகிரகங்களில் “சுக்கிரனின்” அம்சம் பொருந்தியவராக இவர் கருதப்படுவதால் “சுக்கிரன் பரிகார தலமாகவும்” இக்கோவில் விளங்குகிறது. இங்கிருக்கும் “சக்ரத்தாழ்வார்” சந்நிதியில் வழிபட்டால் நம்மை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள், துரதிர்ஷ்டங்கள் மற்றும் நோய் நொடிகள் நீங்குவதாக கூறப்படுகிறது.
‘பூலோக வைகுண்டம்’ இது நம்ம திருச்சி திருவரங்கம் தான் எத்தனை ஆச்சரியம், எத்தனை அதிசயம்
- திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ‘பூலோக வைகுண்டம்’ என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில் தலைமைச் செயலகம் போல் செயல்படுகின்றது.
- பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், ‘மங்களாசாசனம்’ பெற்று பாடிய திருத்தலமாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல். இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.
- கோயில், ‘நாழிக்கேட்டான் வாயில்’ வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர்.
- கோயிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், ‘சங்க நிதி’, ‘பதும நிதி’ உருவங்களுடன் இருக்கின்றனர்.
- விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன.
- மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
- மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதில் கோயில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்டதைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது.
- கோயில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.
- இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.
- வருடத்துகொருமுறை,பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
- கோயிலில் உள்ள நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் போய்விட்டது. 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது.
கோயில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார்.
ராமானுஜரது திருமேனி 5-வது ‘திருச்சுற்று’ எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.
சொர்க்கவாசல்
மார்கழியில் வரும் “வைகுண்ட ஏகாதசி” தினத்தில் இக்கோவிலில் “சொர்க்க வாசல்” திறந்து, அதில் பங்கேற்று வழிபட பல லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது சிறப்பு அம்சமாகும். இங்கு நடைபெறும் “பகல் பத்து, ராப்பத்து” விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மிக சிறந்த சிற்பங்களை கொண்ட இக்கோவில் ஐ .நா. சபையின் “யுனெஸ்கோ” அமைப்பால், பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
மதியம் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
ரங்கநாதருக்கு 7 நாச்சியார்கள்
ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரெங்கநாச்சியார். ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. அவை, நாழிகேட்டான் கோபுரம், ஆர்யபடால் கோபுரம், கார்த்திகை கோபுரம், தெற்கு கட்டை, கோபுரம்-, தெற்கு கட்டை கோபுரம், ராஜகோபுரம்.
7 முறை தான் வெளியே வருவார்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை மட்டும், தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். அந்த விழாக்கள்., விருப்பன் திருநாள், வசந்த உற்சவம், விஜயதசமி, வேடுபறி, பூபதி திருநாள் பாரிவேட்டை , ஆதி பிரம்மோற்சவம். சந்திர புஷ்கரணியில் ஆறு முறை, கொள்ளிடத்தில் ஒருமுறை என மொத்தம் ஏழு முறை, ஸ்ரீரங்கப் பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார். விருப்பன் திருநாள்-சித்திரை, வசந்த உற்சவம்-வைகாசி, பவித்ரோற்சவம்-ஆவணி, ஊஞ்சல் உற்சவம்- ஐப்பசி, அத்யயன உற்சவம்-மார்கழி, பூபதி திருநாள்-தை, பிரமோற்சவம்-பங்குனி நம்பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை மட்டுமே, திருக்கோவிலை, விட்டு வெளியே எழுந்தருளுவார். சித்திரை, வைகாசி , ஆடி, புரட்டாசி, தை ,மாசி, பங்குனி
7 ஆச்சாரியார்கள்
நம்பெருமாள் கோவிலில் ஏழு ஆச்சாரியார்களுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. அவை, ராமானுஜர், பிள்ளை லோகாச்சாரியார், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வான், வேதாந்த தேசிகர், நாதமுனி
வருஷத்துக்கு ஏழு தடவை ஸ்ரீ ரங்கநாதர் நெல் அளவு கண்டருளும் நிகழ்வுகோடி, கோடியோ கோடி என கூவி, கூவி அளக்கப்படும் நெல்
பகவான் எல்லாருக்கும் படி அளக்கிறான்’ என்று வழக்கில் சொல்வார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே படியளக்கிறார். அதாவது, வருஷத்துக்கு ஏழு தடவை! சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மற்றும் பங்குனி என ஏழு மாதங்களில் நெல் அளவைத் திருநாள் நடைபெற்று வருகிறது. மாதங்களின் பிரம்மோற்சவ காலங்களில் அதன் ஏழாம் திருநாளன்று, நெல் அளவைக் கண்டருளப்படுகிறது.
நெல் அளவைத் திருநாள் அன்று, கருவறையிலிருந்து, ஸ்ரீதேவி – பூதேவி துணைவரக் கிளம்புகிறார் நம்பெருமாள். ஏன்? இந்தப் பட்டத்துக்கு தானிய வரவு எவ்வளவு; செலவு எவ்வளவு மீதி இருப்பு எவ்வளவு. என்று கணக்கிட்டுப் பார்க்க. அதற்கு எதற்கு தேவியரையும் சேர்த்தழைத்துக் கொண்டு போக வேண்டும்?
கணவனின் சரிபங்கான மனைவிக்கு, எல்லா விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். தம்பதிகளிடையே எந்த ஒளிவு மறைவும் கூடாது என்று, நமக்கு உணர்த்துவதற்காக வருகிறார். பெருமாள் பாதம் ஆன சடாரி சாத்தினாலே, அளவைக்காரருக்கு உத்தரவு வந்துவிட்டது என்று பொருள். இதோ, கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரர், பித்தளை மரக்கால் கொண்டு நெல் அளக்கத் தொடங்குகிறார்.
‘திருவரங்கம்’ எனச் சொல்லி, முதல் மரக்கால் நெல்லை அளந்து போடுகிறார். அடுத்து ‘பெரிய கோயில்’ எனக் கூறி, இரண்டாவது மரக்கால் நெல்லை அளக்கிறார்.
அதன் பின்னர் வரிசையாக மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என அளக்கப்படுகிறது. ஒன்பது என அளக்கும்போது எங்கிருந்தோ அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது, ‘நிரவி விட்டு அள’ என்று. ஸ்தானி கர்தான் குரல் கொடுக்கிறார். ‘சரியாக அளந்து போடு’ என்று பெருமாளே கட்டளையிடுவதாக ஐதீகம்.
“அந்தக் காலத்திலிருந்து எல்லாமே எம்பெருமாளின் நேரடிப் பார்வையில் நடைபெற்று வந்துள்ளதாக நம்பிக்கை.
தெய்வ காரியங்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் திருக்கொட்டாரத்திலிருந்துதான் எடுத்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் திருக் கொட்டாரம் ஒரு பொக்கிஷம். அங்கு ஆறு தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைந்துள்ளன. நாடு செழிக்கவும், மக்கள் ஆரோக்கியத்துக்கும் தானிய உற்பத்தியும் சேமிப்பும் மிக மிக முக்கியம். தற்போதும் அதை வலியுறுத்தி வருகிறது ஸ்ரீரங்கம் கோயிலின் நெல் அளவைத் திருநாள்!”
உலகம் யாவுக்கும் படியளப்பவர் பெருமாள். ஒவ்வொன்றாக எண்ணிப் போட்டால் எந்தக் காலத்தில் எண்ணி முடிவது? அதனால், அதன் பின்னர் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், பத்து லட்சம், கோடி, கோடியோ கோடி. எனக் கூவிக் கூவி அளந்து போடப்படுகிறது. தன் நேரடிப் பார்வையில் ‘நெல் அளவை’ கண்ட நம்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் இணைந்து, பூந்தேரில் எழுந்தருளி வீதியுலா வருகிறார், படியளக்கும் பெருமாள்!” என்கிறார் கார் அளப்பான் எனப்படும் அளவைக்காரன். சரணம் சரணம் ஸ்ரீரங்கா ! திருவடி சரணம் ஸ்ரீரங்கா !
இறந்த அடுத்த நாளே உயிருடன் எழுந்த ராமானுஜர்
மனிதனாக பிறந்த ஒவ்வொருவர்குள்ளும் இறைசக்தி உள்ளது. அது எல்லோருக்கும் வெளிப்படுவது இல்லை என்றாலும், ஒரு சிலருக்கு அவ்வப்போது இந்த பூமியில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதையும் மறுக்க முடியாது. அந்த வகையில், ஸ்ரீராமானுஜர் இவ்வுலகில் செய்த மிகப் பெரும் தியாகம் என்ன தெரியுமா?
கோடிக்கணக்கான மனிதர்களில் ஒரு சிலர் மட்டுமே தெய்வமாகவே போற்றப்படுகிறார்கள். அந்த வரிசையில் ஸ்ரீராமானுஜர் 1017ம் ஆண்டு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவராவார். வளர்பிறை பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த இவர் தனது 120 வது வயதில் உயிர் நீத்தார். எனினும் மறுநாளே அவ்வுடல் மேலெழுந்து வந்தது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
தியானத்தில் அமர்ந்த அவருடைய திருமேனிக்கு சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்டு செய்யப்பட்ட தைலம் பூசப்படுகிறது. ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் இவருக்கு முதல் வழிபாடு நடந்த பிறகே ரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ராமானுஜர் பக்தர்கள் வேண்டிய வரங்களை வாரி வழங்க கூடியவராக இருக்கிறார்.
இவ்வுலகம் பயனடைய வேண்டி தான் தன்னால் கருதாது தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை என்று அந்த மந்திரத்தை பக்தர்கள் அனைவருக்கும் தன்னுடைய உரத்த குரலில் பகிரங்கப்படுத்தினார். அது என்ன மந்திரம் தெரியுமா?
இவ்வுலகில் சக்தி வாய்ந்த மந்திரங்களில் ஒன்றான எட்டெழுத்து மந்திரம் ஆக இருக்கும், ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் திருமாலின் ஷக்தி மந்திரம் ஆகும். ‘ஓம் நமோ நாராயணாய’ என்று எவர் ஒருவர் உச்சரித்தாலும் அவருக்கு வரும் இன்னல்கள் யாவும் மலை போல் வந்தாலும் பனி போல் விலகும் என்பது நம்பிக்கை.
இம்மந்திரத்தை பக்தர்களுக்கு தன் குருவையும் மீறி வெளி உலகிற்கு கூறியதால் அவர் நரகம் செல்வார் என்று சாபங்கள் உண்டானது. எனினும் அவர் தன் கடைசி காலம் வரை வைணவ குலத்திற்கு தொண்டுகள் செய்தே மோட்சம் பெற்றார். ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகளை களைய மேலக்கோட்டை திருநாராயணபுரத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழைய புரட்சி செய்தார். ஹரியும், சிவனும் ஒன்று என்பதை இவ்வுலகிற்கு அறிவுறுத்தினார். இவரின் பெருமைகளை சொல்லும் பொழுதே நமக்கு மெய் சிலிர்க்கும்.
ஸ்ரீ ராமானுஜருக்கு பெருமாளே சீடனாக பணிபுரிந்த காலங்களும் உண்டு. இதனை மெய்ப்பிக்கும் வண்ணம் திருக்குருங்குடி அழகிய நம்பி பெருமாள் கோயிலில் காதுகளில் பூவும், நெற்றியில் திருநாமம் அணிந்து பக்தர்களுக்கு இன்றும் அருள் பாலிக்கின்றார். இக்கோவிலில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பரிவட்டப்பாறை அமைந்து இருக்கும். திருவனந்தபுரம் கோவிலிலிருந்து கருடன் இப்பாறையில் ராமானுஜரை கொண்டு வந்து கிடத்தியதாக புராணங்கள் கூறுகிறது.
குரு சிஷ்யனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி அன்று அவரை வழிபடுபவர்களுக்கு சிறந்த குருமார்களை அமைவார்கள். வாழ்க்கையில் சிறந்த கல்வி பெற்று அறிவாற்றலுடன் திகழ ஸ்ரீ ராமானுஜரையும், ரங்கநாதப் பெருமாளையும் தவறாமல் வழிபடுங்கள்.