மதுரையின் தனி சிறப்புகளில் ஒன்றான மதுரை மல்லிக்கு என்று எப்போதும் தனி மவுசு உள்ளது. இதற்கு காரணம் மதுரை மல்லி பூவின் மனம் மற்றும் தன்மை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் வரத்தை பொருத்தும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பொருத்தும் மல்லிகை பூவின் விலை ஏறுவதும், இறங்குவதும் இருக்கும். சத்திரப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் மல்லிப்பூ மதுரை சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இந்நிலையில், மதுரை மற்றும் மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு மற்றும் சாரல் மழை பெய்து வருவதினால் மல்லிகை பூவின் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் 6000 ரூபாய்க்கு கடந்த வாரம் வரைக்கும் விற்பனையான மல்லிகைப்பூ தற்பொழுது ஆயிரம் ரூபாய் குறைந்து 5000 ரூபாய்க்கு 6000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதனை அடுத்து மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் பிச்சி ரூ.1500, முல்லை ரூ.2000, செவ்வந்தி ரூ.80, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.70, கனகாம்பரம் ரூ.1000 , ரோஸ் ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.180, பன்னீர் ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.80, அரளி ரூ.300, மரிக்கொழுந்து ரூ.120, தாமரை (ஒன்றுக்கு) ரூ.15 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை காரணமாக பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. அதாவது அரை டன்னுக்கு குறைவாக மல்லிகை பூ வரத்து உள்ளதால் பூக்களின் விலை 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும் பொங்கலை முன்னிட்டு 7000 ரூபாய் வரை அதிரடியாக உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.



