முகமூடி அணிந்து வ.உ.சிதம்பரனார் வரலாற்றை எடுத்துரைத்த திருச்சி மாணவர்கள்
முகமூடி அணிந்து வ.உ.சிதம்பரனார் வரலாற்றை எடுத்துரைத்த திருச்சி மாணவர்கள்
திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி, புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை
முன்னிட்டு பள்ளி மாணவர்கள்.வ.உ.சி. சிதம்பரனார் முகமூடி அணிந்து வரலாற்றை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித்தார். புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் நூலகர் புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை முக்கியமானவர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை பட்டப்படிப்பையும், சட்டப் படிப்பையும் படித்துத் தேர்ந்தார். மிகச்சிறந்த வழக்கறிஞராக உருவெடுத்த அவர், ஏழைகளுக்காக இலவசமாக வாதிட்டவர். இளம் வயதிலேயே விடுதலை இயக்கத்தில் தம்மை அவர் ஈடுபடுத்திக் கொண்டார். தென் மாவட்டங்களில் மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியாகதிகழ்ந்தவர். ஆங்கிலேயர்களுக்கு எதிரானப் போரில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர். வணிகம் செய்வதாகக் கூறி இந்தியாவுக்குள் வந்தவர்களை, வணிகம் மூலமாகவே வீழ்த்தி நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடியவர் வ.உ.சி ஆவார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியும், அவரது ஆதரவுடன் நடைபெற்ற தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தப் போராட்டத்தின் வெற்றியும் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்தது.அதனால் வ.உ.சி கடுமையான அடக்குமுறைகளுக்கும் கொடுமைக்கும் ஆளானார். கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் செக்கு இழுத்த கொடுமையினை அனுபவித்துள்ளார் என பள்ளி மாணவர்கள் வ.உ.சிதம்பரனார் வரலாற்றை எடுத்துரைத்தனர்.