என்று மடியும் இந்த ஏமாற்றுகாரர்களின் தாகம்..! PACL வீழ்ந்த வரலாறு.. தொடர் நிறைவுற்றது
தற்போது வரை ரூ.10,000 மற்றும் அதற்கு கீழான தொகை உள்ள முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அளவிலான பணம் வரவில்லையெனில் “https://www.sebipaclrefund.co.in/Refund/Enquiry” என்ற இணைய பகுதியில் உங்களின் தகவலை பதிவிட்டு, CLAIM Status””ஐ கவனிக்கவும். உங்களின் முதலீட்டு பணம் சம்மந்தமான புகாரை (PACL விஷயத்தில்) nodal officer’க்கு nodalofficerpacl@sebi.gov.in மற்றும் committeepacl@sebi.gov.in என்ற Mail id மூலம் மெயில் பதிவு செய்யவும்” என சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். இந்த கட்டுரையின் நிறைவாக மேலும் சில தகவலையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். ரூ.10,000 வரை கிட்டதட்ட பணம் கொடுத்தாகிவிட்டதாக செபி அறிவித்துள்ளது. என்றாலும் கிடைக்கப் பெறாதவர்கள் அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.
உங்கள் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்காததற்கு பிஏசிஎல் சொன்ன காரணங்கள்
பணம் திரும்பப் பெற நீங்கள் எந்த மொபைல் எண்ணை கொடுத்தீர்களோ அதை மறக்காதீர்கள். மாற்றாதீர்கள். தவறாமல் அந்த நம்பரை ரீசார்ஜ் செய்து பயன்படுத்துங்கள். அந்த மொபைல் நம்பரை வைத்து தான், நீங்கள் ஏதேனும் முன்னர் செய்த பதிவில் தவறு செய்திருந்தால் அவற்றை திருத்த முடியும். பணம் கைக்கு வரும் வரை அந்த மொபைல் நம்பரில் வரும் குறுஞ்செய்தியை (SMS) எதையும் அழிக்க வேண்டாம். உங்கள் மொபைல் எண் மாற்றப்பட்டால் அந்த தகவலை நீங்கள் பதிவேற்றம் செய்யத் தவறாதீர்கள். பணம் திரும்பப் பெற செய்யப்பட்ட பதிவுகளை, ஆவணங்களை மறுமுறை பதிவேற்றவும், திருத்தவும் முற்பட்டால் ஏற்கனவே உங்களுக்கு கிடைத்த குறுஞ்செய்திகளை கொண்டு சரி செய்யவும்.
உங்களது பெயர்களில் உள்ள எழுத்துகளில் ஏதேனும் தவறு இருந் தாலோ வங்கி கணக்கில், நீங்கள் பதிவேற்றம் செய்த அடையாள அட்டையில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தாலோ, பதிவேற்றம் செய்த ஆவணங்கள் தெளிவற்று இருந்தாலோ அவற்றை மீண்டும் திருத்தி பதிவேற்றம் செய்யும் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் பணம் திரும்பக் கிடைக்கும் வரை உங்கள் கைவசம் இருக்கும் ஆவணங்களை எதையும் தொலைத்துவிடலாம் பத்திரப்படுத்தவும்.
மோசடியில் சிக்கியதற்கான காரணம்
பிஏசிஎல் நிறுவனம் 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டு அதன் மீது குற்றச்சாட்டு சுமத்தத் தொடங்கிய (1998) 15 ஆண்டுகளில் சுமார் 5.5 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.49,100 கோடியை சட்டவிரோதமாக திரட்டியது. நிறுவனம் தொடங்கிய 7 ஆண்டுகளில் இந்தியாவில் 3 கோடி ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாக பிஏசிஎல் நிறுவனமே அறிவித்தது. எப்படி இது சாத்தியமானது..?
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே பிஏசிஎல் போன்ற பல்வேறு நிதிநிறுவனங்கள் மூலம் ஏமாந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. கடந்த 2020ம் ஆண்டு, தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) நடத்திய கள ஆய்வு முடிவுகளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. அதில் இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்கள் 77.7 சதவீதம் பேர் உள்ளனர். கல்வியறிவு பெற்றோர்களின் எண்ணிக்கை உயர உயர ஏமாற்றுவோர் மற்றும் ஏமாறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளில் 10 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள், அதாவது 13 இந்தியர்களில் ஒருவர் நிதி மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவு ஒன்று தெரிவிக்கிறது. இப்படி மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு மட்டும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என்கிறது அந்த புள்ளிவிபரம்.
நிதிநிறுவனங்களின் மோசடிகள் குறித்து செய்திகளை வாசித்த வண்ணமே உள்ளது . என்றாலும் வரும் நாட்களிலும், “ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஓராண்டில் ஐம்பதாயிரம் தருகிறோம்” என்ற விளம்பரத்தை கண்ட மறுநாளே நீண்டதொரு வரிசை அந்த அலுவலகத்தின் முன்பு அணிவகுக்கும். அந்த வரிசையில் மேற்கண்ட கல்வியறிவு பெற்றோர் சதவீதத்தினரும் இடம்பெறுகிறார்கள் என்பதே வருத்தத்திற்குறிய விஷயமாக உள்ளது.
பெரும்பாலும் 2ம், 3ம் நிலை நகரங்களில் தான் சிட்ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பணத்தை இரட்டிப்பாக்கி, மும்மடங்காக்கித் தருவதாகக் கூறி மக்களைத் தங்களது வலையில் விழ்த்துகின்றன. சில நிறுவனங்கள் நேர்மையாகவே தொடங்கப்பட்டாலும், வரவிற்கு மீறிய செலவு மற்றும் ஆடம்பரம் இவைகளினால் நஷ்டத்தை சந்தித்து முதலீட்டாளர்களை ஏமாற்றிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறது. சில. திட்டமிட்டு செய்யப்படும் மோசடிகளாகவே உள்ளது. இங்கே இரண்டாம் நிலையினரிடம் தான் பலரும் சிக்குகின்றனர். வெளிச்சத்தை பார்த்து சிக்கும் விட்டில் பூச்சிகளைப் போல் கவர்ச்சிகரமான விளம்பரங்களினாலும், அதீத எதிர்பார்ப்பினாலும் (ஆசையினாலும்..!) சிக்கி ஏமாந்துவிடுகிறார்கள் அப்பாவி பொது மக்கள்.
மோசடி நிறுவனம் வளர ஆட்சியாளர்கள் தொடர்பு….
பிஏசிஎல் போன்ற நிறுவனங்கள் செய்யும் மோசடிகளுக்கு நமது ஆட்சியாளர்களும் காரணமாக அமைந்துவிடுகிறார்கள். ஏமாறுவோர் புகார் தரும் வரை ஏமாற்றுவோர்களை யாரும் கண்காணிப்பதில்லை. விசாரிப்பதில்லை என்பதாகவே உள்ளது நமது அரசாட்சியின், சட்டத்தின் நிலை.
ஒரு நிதிநிறுவனத்தின் மீது ஒருவர் புகார் கொடுத்தால் அவர் குறித்த புகாரின் அடிப்படையில் மட்டுமே விசாரணை நடத்தப்படுகிறது. இப்படி ஒரு புகார் பொது வெளியில் வந்த உடன் பொருளாதார குற்றப்பிரிவினர் ஏன் தானாக முன்வந்து விசாரணையில் இறங்குவதில்லை என்பதை நாம் இங்கே கேட்க முடிவதில்லை. 2001ல் நாம் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அந்த ஒரு லட்சம் திரும்பினால் போதும் என்ற நிலைக்கு தற்போது நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதே வேளையில் 20 ஆண்டுகளாக அந்த ஒரு லட்சம் பணம் பிஏசிஎல் நிறுவன உரிமையாளரை எவ்வளவு சந்தோஷப்படுத்தியிருக்கும். 2001ல் அவர் உங்களிடம் ஒரு லட்சத்தை பெறவில்லை. உங்கள் சந்தோஷத்தை தான் பறித்திருக்கிறார். இழந்த சந்தோஷத்தை இருபதாண்டுகள் கடந்த பின்னரும் உங்களால் மீட்க முடியவில்லை. நான் இழந்த ஒரு லட்சம் எனக்கு ஒரு பொருட்டல்ல என்பவரை விட்டுவிடுங்கள். இதனால் உறவை, நட்பை ஏன் உயிரை இழந்தோரும் உண்டு. அவர்களின் நிலை என்ன..?
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் ஏராளமான முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. அவை உங்களுக்கு அதீதமான லாபத்தை திருப்பித்தரப் போவதில்லை. ஆனால் நிச்சயமான வருமானத்தை கட்டாயம் திரும்பித் தரும். அவற்றை பயன்படுத்துங்கள். நாம் வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணம் நமது பேராசையால் மற்றவர்களுக்கு சாதமாகிவிடக் கூடாது.
இந்தியாவில் ஏமாற்றுவோர்கள் குறித்து ஏராளமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. போதும், நாம் இது வரை ஏமாந்தது. இனியும் கூடுதல் லாபத்திற்கு ஆசைப்பட்டு உங்கள் சந்தோஷத்தை இழக்காதீர்கள்.