கோடீஸ்வரர் ஆக இதெல்லாம் இன்றைய டிரெண்டிங் பிசினஸ்கள்!
யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம். ஆனால், அதைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திச் செல்வதுதான் கடினமான விஷயம். தொழில் தொடங்குவதற்குப் பெரிய முதலீடு தேவை. அப்படி பெரிய முதலீடு இல்லாமல் தொழில் தொடங்க முடியுமா? முடியும். அப்படிப்பட்ட தொழில் யோசனைகள் உங்களுக்காக இதோ…
மார்க்கெட்டிங்!
நீங்கள் எந்தத் துறையில் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம். அதற்கு மார்க்கெட்டிங் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மார்க்கெட்டிங் என்பதே மிகச் சிறந்த தொழில்தான். அதில் வெற்றி கண்டவர்கள் ஏராளம். உங்களிடம் ஒரு யோசனை இருந்தால் அதை நீங்கள் எவ்வாறு மார்க்கெட்டிங் செய்கிறீர்கள், எவ்வாறு கஸ்டமரை ஈர்க்கிறீர்கள் என்பதில்தான் விஷயம் உள்ளது. உங்களது ஐடியா மிகச் சிறந்த ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் அதை எவ்வாறு மார்க்கெட்டிங் செய்கிறீர்கள் என்பதில்தான் உள்ளது. கார்டு விளையாட்டை அவ்வாறுதான் மிகச் சாதாரணமாகத் தொடங்கினார்கள். ஆனால் அது இப்போது நல்ல லாபம் தரும் தொழிலாக உள்ளது. எனவே மார்க்கெட்டிங் என்பது மிக முக்கியம்.
கோர்ஸ் பில்டிங்!
வேலை தேடி அலைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப அம்சங்களும் போட்டிகளும் அதிகரித்துவிட்ட சூழலில் திறன்களைப் புதுப்பித்துக்கொள்வதும் புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதும் இப்போதைய காலகட்டத்தில் மிக அவசியமாகும். பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் புதிய புதிய படிப்புகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட கோர்ஸ்களை உருவாக்கி அதன் வாயிலாக நல்ல லாபம் ஈட்டலாம். எதிர்காலத்தில் ஆன்லைன் மூலமான படிப்புகள்தான் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட கோர்ஸ்களைக் கற்றுத்தருவதன் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும்.
ஈவண்ட் பிளானர்!
பார்ட்டி கொண்டாட்டங்கள், அலுவலக நிகழ்ச்சிகள், சுற்றுலா பயணங்கள் போன்றவற்றைத் திட்டமிடுவதும் அவற்றைச் செயல்படுத்துவதும் ஒரு சிறந்த தொழில்தான். இதற்கு பெரிய மூலதனம் எதுவும் தேவையில்லை. வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் அனைவரும் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய மூன்றாம் தரப்பை நாடுகின்றனர். இதற்காக அதிகம் செலவிடவும் செய்கின்றனர். எனவே இத்துறையில் நல்ல வருவாய் ஈட்ட முடியும். முதலில் தொடங்கும்போது வாடிக்கையாளர்களைப் பிடிப்பது கடினமாக இருக்கும். ஆனால் இதில் ஓரளவுக்குப் பெயர் பெற்றுவிட்டால் நல்ல லாபம்தான்.
காஸ்மெட்டிக் பிராண்ட்!
புதிய காஸ்மெட்டிக் பிராண்ட் ஒன்றை அறிமுகம் செய்து அதைப் பிரபலப்படுத்தலாம். தற்போதைய காலத்தில் காஸ்மெட்டிக் பொருட்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இத்துறையில் போட்டிகள் அதிகமாக இருந்தாலும் அதில் நிலைத்துவிட்டால் கோடிகளில் லாபம்தான்.
அதற்கு உதாரணம்தான் ஜெஃப்ரி ஸ்டார். தனது இசை வாழ்க்கையில் தோல்வியடைந்த இவர் ஜெஃப்ரி ஸ்டார் காஸ்மெட்டிக் என்ற பெயரில் புதிய பிராண்டை உருவாக்கி பிரபலப்படுத்தினார். அவர் தனது யூடியூஸ் சேனல் மூலமாக மட்டுமே பில்லியன் டாலர்களில் சம்பாதித்தார். அதிக சம்பளம் பெறும் யூடியூப் ஸ்டார் பட்டியலில் ஃபோர்ப்ஸ் ஊடகம் இவரை ஐந்தாம் இடத்தில் வகைப்படுத்தியது.
சோசியல் மீடியா மேனேஜ்மெண்ட்!
பொருட்களை விற்பனை செய்வதை விட அவற்றை விளம்பரப்படுத்தி விற்பனை செய்வதுதான் பெரிய காரியம். என்னதான் உற்பத்தி செய்யப்பட்ட பொருளில் சரக்கு இருந்தாலும் அதை சரியாக விற்பனை செய்யாவிட்டால் அதில் பயனில்லை. சோசியல் மீடியா என்பது வெறும் புகைப்படங்களை ஷேர் செய்வது மட்டுமில்லை. பிராண்டிங், மார்க்கெட்டிங் போன்றவற்றுக்கும் சோசியல் மீடியாக்கள் முக்கியக் கருவியாகத் திகழ்கின்றன. சோசியல் மீடியா மேலாண்மைக்கு இப்போது ஆள் கிடைப்பதே கடினமாக உள்ளது. அந்த அளவுக்கு இத்துறையில் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே சோசியல் மீடியா மேனேஜ்மெண்ட் மூலமாக நீங்கள் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.