வேலை செய்ய பிடிக்கவில்லை; அதனால் பிஸினஸ் செய்யப் போகிறேன்’ என்று சொல்லி தொழிலில் இறங்குகிறவர்கள், வெற்றி பெறுவது கடினம்தான். அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை இல்லாமல் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் தோல்வி நிச்சயம்தான்.
தொழில் கடன் கேட்டு வங்கியை அணுகுகிறவர்களை வங்கி மேலாளர் முதலில் சோதிப்பது அவர்களின் நம்பிக்கையைத்தான். தொழில் முனைவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வங்கி தரப்பில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். சிலசமயம் வங்கி மேலாளர் தொழில்முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்யலாம்.
நீங்கள் சொல்கிற பிஸினஸை எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் செய்தார். அதில் அவருக்கு கிடைத்தது பலத்த நஷ்டம். வேறு ஏதாவது பிஸினஸுக்கான ஐடியா உங்களிடம் இருக்கிறதா?’ என வங்கி மேனேஜர் கேட்பதாக வைத்துக் கொள் வோம்.
இதற்கு தொழில் முனைவரின் பதில் என்னவாக இருக்கும்..?
உடனே பதற்றமடையும் பலர், ‘சார், என்கிட்ட இன்னொரு பிஸினஸுக்கான ஐடியாவும் இருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். இந்த ஒரு வரி பதில் போதும், உங்கள் தொழில் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இல்லை என்று சொல்ல.
ஆனால், இத்தகைய பதில்களால் மட்டுமே ‘கடன் கிடைக்காது’ என்று சொல்லிவிட முடியாது.
ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்யப் போகிற தொழில் மீது உங்களுக்கு இருக்கும் உறுதியைக் காட்டிவிடும். எனவே தெளிவான பார்வை, உறுதியான திட்டம் தேவை.