சீட்டு திட்டங்களில் ஏமாற்றத்தைத் தவிர்க்க…
சீட்டுத் திட்டத்தில் ஏமாறாமல் இருக்க ‘சிட் ஃபண்ட்ஸ் ஆக்ட் 1982’-ன்படி செயல்படும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சேர வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சீட்டு நிறுவனம் ஒன்று, ஒரு குறிப்பிட்ட தொகைக்குப் புதிய சீட்டுத் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்துவிட்டால், அந்தச் சீட்டு மூலம் ஒரு மாதம் பெறப்படும் மொத்தத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்து அதற்கான ஆவணத்தைச் சீட்டு நடத்தும் பகுதியில் உள்ள மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
அதன்பிறகு, மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலிருந்து சீட்டுக்கான எண், உறுப்பினர்களுக்கான எண் தருவார்கள். இந்த விவரங்களை சீட்டு நடத்தும் நிறுவனம் சீட்டுத் திட்டத்தில் சேர்பவர்களுக்குத் தரும் பில்லில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். சீட்டு நிறுவனம் சீட்டு சம்பந்தமான ஒவ்வொரு தகவலையும் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
சீட்டுத் திட்டத்தின் ஆரம்பக் காலத்திலேயே தனக்கு அந்த மாதத்தின் சீட்டு வேண்டும் என்று சொல்லி பணம் எடுப்பவர்கள், அடுத்தடுத்த மாதங்களில் பணம் கட்டுவதை உறுதி செய்வதற்காக, அந்தப் பணத்துக்குத் தகுந்த சொத்து மதிப்பு ஆவணங்களை சீட்டு நிறுவனங்கள் வாங்கி வைத்துக்கொள்வது வழக்கம். அதனால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்.
நீங்கள் ஒரு சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து உங்கள் பணத்தைக் கொடுக்கும்முன், அந்த நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமா என்பதை அவர்களின் இணைய பக்கத்தில் செக் செய்ய வேண்டும். சீட்டு எண், உறுப்பினர் விவரங்கள் அனைத்தும், அவர்களின் இணைய பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள்.
அரசால் அங்கீகரிப்பட்ட நிறுவனத்தின் பெயர்களில் ‘சிட்’ என்ற வார்த்தை அவசியம் இருக்க வேண்டும். அதன் மூலமும் நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தெரிந்துகொள்ளலாம். சீட்டு நடத்தும் நிறுவனங்கள் 40 சதவிகிதத்துக்கு அதிகமான தொகையைக் கழிவு செய்யக் கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. அதிகமான தொகையைக் கழிவு செய்கிறார்கள் எனில், நீங்கள் அதை ஆட்சேபிக்கலாம் அல்லது மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் புகார் தரலாம்.
சீட்டு நிறுவனங்கள் உரிய நேரத்தில் பணம் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள் எனில், உடனே அருகில் இருக்கும் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் புகார் தெரிவியுங்கள். முக்கியமாக, அரசிடம் பதிவு செய்யப்படாத சீட்டுத் திட்டங்களில் சேர்வதைக் கூடுமானவரை தவிர்ப்பது சிறப்பான முடிவாக இருக்கும்.