“பொம்மை பிஸ்கெட்ஸ்” குருவி_ரொட்டி_புராணம்
இந்த பிஸ்கெட்டுகள் இப்போது கிடைக்கிறதா என்பது தெரியவில்லை! எனக்குத் தெரிந்து 2010ஆம் ஆண்டு வரை தான்.. அதன் பின் பிஸ்கெட் மீதான என் ஆவல் குறைந்ததாலும், வேறு உணவுகள் மீது காதல் கூடியதாலும் இந்த பிஸ்கெட்டை மதுரையில் நட்ட எய்ம்ஸ் அடிக்கல் போல மறந்துவிட்டேன்! இந்த பிஸ்கெட்டுகளிலும் நம் சமுதாய ஏற்றத்தாழ்வு போல சாதாரண சிற்றுர்களில் பெருநகரங்களில் பல வகைகள் உண்டு!
கிராமங்களில் குருவி ரொட்டி என்ற பெயரில் கிடைக்கும்! நடிகர் இராமராஜன் அணியும் சட்டை நிறங்கள் போல பிங்க், மஞ்சள், அடர் சிவப்பு, ஆரஞ்சு என கண்ணைப் பறிக்கும் நிறங்களில் குருவி உருவ அச்சில் இருக்கும்.
மொறு மொறுன்னு தவிட்டு கோதுமையோடு சர்க்கரை கலந்த ருசி! அன்றைய கிளாஸ்கோ பிஸ்கெட் அளவுக்கு பிரமாதமான ருசியில்லை தான்! ஆனால் சமூகத்தின் கிளாஸ் லோ வான ஏழைகளுக்கு இதுவே கிளாஸான பிஸ்கெட்!
குருவி ரொட்டியின் சிவப்பு, ரோஸ் கலர்கள் ருசிப்பவர்களின் உதட்டுக்கு அந்த நிறத்தை தந்துவிடுவதால் பெண் பிள்ளைகளின் விருப்பம் இதுவாக இருந்தது! இந்த வசதி கிளாஸ்கோவில் கூட இல்லை! இதே ரொட்டி காக்கிக் கலரில் தவிட்டு நிறத்திலேயே கூட கிடைக்கும்! அதுதான் ஆண்பிள்ளைகளுக்கு. முதலில் குருவி அச்சில் குருவியின் சில்லவுட் போல நிழலாக கிடைத்தது. பிறகு குருவி கண் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு துளை வந்தது!
குருவி அப்படியே நம்மை பார்ப்பது போல ஒரு தோற்றம் வரும்! என்னுடன் படித்த காமா என்கிற கண்ணன் கண் வந்த குருவி ஒன்றை வாங்கி அதை சாப்பிடாமல் அதற்கு பிந்துன்னு செல்லப் பேரு வச்சி கண்ணும் கருத்துமாக தன் புத்தகப் பையிலேயே வைத்து வளர்த்து வந்தான். இப்படி அவன் பிந்துவை சிறையிலிட்ட தகவல் மெதுவாக எறும்பு இராணுவத்திற்கு செல்ல அவை அவன் பைக்குள் படையெடுத்து பிந்துவை சிறை மீட்டித் தி(செ)ன்றன!
பெரிய ஊர்களின் பேக்கரிகளில் இந்த பொம்மை பிஸ்கெட் பெரிய கண்ணாடி சீஸாக்களில் வைக்கப்பட்டிருக்கும்! யானை, குதிரை, புலி, மான், சிங்கம், கரடி, வாத்து, முயல், ஆமைன்னு மொத்த காட்டு விலங்குகளும் இந்த பொம்மை பிஸ்கெட்டில் கிடைக்கும். புலியும் மானும் கார்ட்டூன் அவதாரம் எடுத்து பாட்டில்களில் பயமின்றி ஒன்றாக சேர்ந்தே இருக்கும். நாங்களும் பல சிங்கம், புலி, யானைகளை ரசித்து ருசித்து வளர்ந்தோம்!
இந்த பிஸ்கெட் உயர்ந்த ரக கோதுமையில் செய்யப்பட்டது ருசியில் இன்றய பிரிட்டானியா மேரி பிஸ்கெட்டை நினைவு படுத்தும்! கிச்சிப் பாளையத்தில் 25 பைசாவுக்கு ஒரு கை நிறைய அள்ளி பேப்பரில் பொட்டலம் கட்டித்தருவார்கள். தாத்தா கடையில் மட்டும் ஒரு கை நிறைய அள்ளி பொட்டலத்தில் போட்டு கட்டி விட்டு தம்பி உனக்கு பிடிச்ச மிருகம் எதுன்னு கேட்டு அதை நாம் சொன்னதும் அதில் இரண்டை எடுத்து போனஸாக தாத்தா தருவார்!
இந்த பிஸினஸ் டெக்னிக்குகாகவே தாத்தாக் கடை பொம்மை பிஸ்கெட்னு இன்றைய கே.எஃப்.சி போல ஒரு பிராண்ட் எங்களிடையே உருவானது! தாத்தாவின் இந்த டெக்னிக்கை மற்ற கடைகள் ஃபாலோ செய்வதற்குள் தாத்தா அடுத்த வெர்ஷனுக்கு அப்டேட் ஆகி கடைசிவரை கிச்சிப்பாளையத்து பொம்மை பிஸ்கெட் மார்க்கெட்டின் மோனோபோலியாக தொடர்ந்தார்! பன் & பிஸ்கெட் என்றால் என்னால் ஹென்றி உல்சியை மறக்கமுடியாது!
மரணப் படுக்கையில் நான் இருந்தாலும் என் காதில் யாரேனும் ஹென்றி உல்சி என்று உச்சரித்துவிட்டால் 10 விநாடிகளாவது அதிகம் உயிர் வாழ்ந்துவிட்டே இறப்பேன்! ஹென்றி உல்சியின் பொம்மை பிஸ்கெட் ஒரு தனி ருசியோடு நல்ல மணமும் உடையதாக இருக்கும்! டீயோடு ருசித்திட ஒரு அற்புதமான இணை இந்த பிஸ்கெட்! நாங்கள் பிஸ்கெட்டுகளை வாங்கி அதற்கு முத்து காமிக்ஸில் வரும் நாயகர்களின் பெயர் சூட்டி விளையாடுவோம்!
வெற்றி பெற்றால் அந்த பிஸ்கெட்டே பரிசு என்பதால் அந்த ஆடுகளம் ருசியாகவே இருக்கும். கால மாற்றங்களில் இழந்து போன பல வகை உணவுகளில் இதுவும் ஒன்று! எங்கள் காலத்தில் இந்த பிஸ்கெட்டுகள் தான் குழந்தைகளின் கார்ட்டூன் சேனல்! பூந்தளிரில் சுட்டிக் குரங்கு கபீஷ் படக்கதை வந்த பின்பு இதன் மவுசு இன்னும் கூடியது! பீலு, மயூரி, பபூச்சானு அந்த கேரக்டர்களை வைத்து கதை உருவாக்கி எங்கள் வீடுகளில் அதை அரங்கேற்றுவோம்.
இதுபோன்ற பிஸ்கெட்டுகளால் எங்களது க்ரியேட்டிவிட்டி வளர்ந்தது என்பதே உண்மை! இத்தனை சிங்கம், புலிகளை எல்லாம் பிஸ்கெட்டாகவே ருசித்து நான் புலியையே புசித்தேன், சிங்கத்தையே சிதைத்தேன்னு சொல்வதில் எங்களுக்கு இப்போதும் ஒரு கெத்து இருக்கத்தான் செய்கிறது!
— வெங்கடேஷ் ஆறுமுகம்.