Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நவீன வர்த்தகத்துடன் கைகோர்க்கும் பாரம்பரிய விவசாயம்:

1

நவீன வர்த்தகத்துடன் கைகோர்க்கும் பாரம்பரிய விவசாயம்:

விவசாய சட்டம் 2020:

4

நாடெங்கும் உள்ள விவசாய அமைப்புகள், கட்சிகள், பாரம்பரிய விவசாயிகள் என பலரும் புதிய விவசாய சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.புதிய சட்டத்தில் எவையெவை சரி, தப்பெது என்ற விவாதம் ஒருபுறம் இருக்க அரசின் விவசாய சட்டங்களை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் விவசாயம் செய்யும் எண்ணத்துடன் புதிதாக களம் இறங்குபவர்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருகின்றன.

3

வெளிநாடுகளில் ஐ.டி. செக்டாரில் ஆட்குறைப்பு அதிகரித்த வேளையில் கையிலிருக்கும் காசை கொண்டு சுயதொழில் தொடங்கியவர்களில் ஒரு சிலர் விவசாயத்தையும் தங்கள் தொழிலாக தேர்வு செய்து இறங்கியவர்களும் உண்டு. கடந்த சில ஆண்டுகளாக விவசாய செய்திகளை மட்டுமே தாங்கி வரும் புத்தகங்களை புரட்டினால் படித்த இளைஞர்கள் விவசாய துறைக்குள் நுழைந்த கதைகள் ஏராளம் உள்ளன. குறிப்பாக இயற்கை விவசாயத்தின் மீதான நாட்டம் அதிகரித்து வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக அது குறித்த புரிதல் ஏற்பட்ட பின்பு இன்று எல்லோரும் இயற்கை விவசாயத்தை பற்றி பேசுவதை பெருமையாகவே நினைக்கத் தொடங்கியுள்ளனர். “செக்கு எண்ணெய் தான் பயன்படுத்துவேன். நாட்டுச் சர்க்கரை தான் எங்கள் வீட்டில்..” என்றெல்லாம் பெருமை பொங்க கூறுகின்றனர். “தரமான உணவு பொருளென்றால் விலை ஒரு பொருட்டல்ல”.. என்ற எண்ணம் நுகர்வோர் மத்தியில் ஏற்பட்ட பின்பு அதன் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கியவர்களில் பலர் விவசாயம் தெரியாமல், கற்றுக் கொண்டு தொழில் செய்பவர்களாக இருக்கிறார்கள்.

இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களுக்கு சந்தையில் ஏற்பட்டு வரும் மவுசு, கிராக்கி, கையில் காசு வைத்துக் கொண்டு “என்ன தொழில் தொடங்கலாம்” என நினைப்பவர்களின் சிந்தையை ஈர்க்கிறது. “நஞ்சில்லா உணவு வேண்டியே நான் உணவு காட்டினை உருவாக்கும் வேளையில் இறங்கினேன். உணவுத் தேவைக்கு தரமான காய்களுடன் கணிசமான வருவாயையும் ஈட்டித் தருகிறது இயற்கை விவசாயம்” என்கிறார் தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியம், ஆவரம்பட்டியில் விவசாயம் செய்து வரும் எல்.சீனிவாசன்.

பூதலூரில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் சீனிவாசன்

பிபிஓக்களில் வேலை பெறுவோர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களுக்கு பணிப் பயிற்சி வழங்கி வருபவர், இன்றளவும் ஆன்லைன் வகுப்பினை நடத்தி அதன் மூலம் வருவாய் ஈட்டி வரும் சீனிவாசன் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர். பல்வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றி வந்தவருக்கு இயற்கை விவசாயத்தின் மீது நாட்டம் அதிகரிக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆவரம்பட்டியில் 5 ஏக்கரில் ஒரு தரிசு நிலத்தை கிரயம் செய்து விவசாய தொழிலை தொடங்கியுள்ளார்.
அடர்ந்து வளர்ந்திருந்த வேலிக்கருவேல மரங்களை அழித்து, மண் பரிசோதனை செய்து, நுண்ணுயிர் பெருக்கத்தின் தேவை உணர்ந்து, இயற்கை எருவின் மூலம் மண்ணை பண்படுத்தி, 2 ஹெச்.பி. மோட்டார் பொருத்தி கிணற்று நீரை கொண்டு, நிலத்தை சுற்றி மரம் நட்டு விவசாய பணியினை தொடங்குகிறார்.

இதற்குள் ஒராண்டு முடிந்துவிட்டது. மின் கட்டணமோ மாதத்திற்கு 3000த்தை தொடுகிறது. தற்சார்பு விவசாயியான சீனிவாசன் வேளாண்மை பொறியியல் துறையை நாடுகிறார். இதன் தொடர்ச்சியாக அரசு வழங்கிய 80 சதவீத மானியத்துடன் சோலார் தகடு அமைத்து மின்உற்பத்தி செய்து நீர் மோட்டாரை இயக்குகிறார். மேலும் அரசு மானியத்துடன் சொட்டுநீர் பாசன கட்டமைப்பையும் உருவாக்குகிறார். குஜராத், ராஜஸ்தான் பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்ட நான்கு மாடுகளில் மூலம் கிடைக்கும் சாணத்தின் மூலம் பஞ்சகாவியம், ஜீவாமிர்தம் தயாரித்து தெளிக்கிறார்.

2

சாணத்தை வயல்களில் மண்ணுடன் கலந்து மக்கச் செய்து எருவாக்குகிறார். அத்துடன் ஒருபுறம் மண்புழு பெருக்கத் தொட்டி. விவசாயிகளை, விவசாய நண்பர்களை சந்திக்கிறார். விவசாயம் பேசுகிறார். தெளிவு பெற்ற பின்பு நடை முறைப்படுத்துகிறார். 5 ஆண்டுகள் கடந்தது. தற்போது 70 தென்னை மரம், 150 கொய்யா மரம், 80 மாமரம், நெல்லி மரம், அத்திமரம், மாதுளை என நிலமெங்கும் பசுமை. அத்துடன் அஷ்வகந்தா, கருந்துளசி, செம்பருத்தி, அமுக்கரா கிழங்கு, ஜலபிரம்மி, வல்லாரை, சீந்தல், நுணாம்பழம், நருவள்ளி மரம், தவசி முருங்கை என மூலிகை பயிர்கள். வெண்டைகாய், முருங்கை, பரங்கிக்காய், கீரை வகைகள் என அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் மறுபுறம். ஊடுபயிராக செம்மண் துவரை.
வானம் பார்த்த பூமி. ஒற்றை பயிர் சாகுபடி கைகொடுக்காது.

எனவே காலசூழலிற்கேற்ப நிலமெங்கும் பல்வகை பயிர் சாகுபடி. பங்குச் சந்தையில் ஒரே நிறுவனத்தில் முதலீட்டை முடக்காமல் பல நிறுவனங்களில் பிரித்து முதலீடு செய்யும் பாடம் கைகொடுக்கிறது. ஒன்று கைவிட்டாலும் மற்றொன்று கைகொடுக்கும். “நாம் இங்கே விவசாய விளை பொருட்களை விற்பதில் கவனம் செலுத்துகிறோம். அதே வேளையில் விவசாயத்திற்கான விதை, “ஒரு ஆயுதம்” என்பதையும் உணர வேண்டும். சிறகு அவரை. தமிழகத்தில் சாகுபடி செய்வதில்லை. விவசாய கண்காட்சி ஒன்றில் 10 விதை ரூ.169-திற்கு வாங்கினேன். கொத்து கொத்தாய் வளரும் இந்த சிறகு அவரையின் விதை மட்டுமே நம்மை கோடீஸ்வரர் ஆக்கும்.

நுணாம்பழத்தின் சாறு மருந்தாகிறது. அது தனியாக வருவாய் அளிக்கிறது. (10 ஆண்டுகளுக்கு முன்பு நோனி சிரப் ஒன்றை எம்.எல்.எம். மூலம் விற்றதை பலர் பார்த்திருக்கலாம்.) என் தேவைக்கு போக காய், பழங்களை சந்தையில் விற்கிறேன். கிடைக்கும் வருவாயை மேலும் மேலும் விவசாய பெருக்கத்திற்கு பயன்படுத்தி வருகிறேன். குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு அது நிரந்தர வருவாயை தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் சீனிவாசன்.

இயற்கை விவசாயம்… நவீன வர்த்தகம்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவரம்பூர் பகுதியில் உள்ளது சிட்கோ தொழிற்பேட்டை. பெல் தொழிற்சாலையை நம்பி தொடங்கப்பட்ட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு போதுமான ஆர்டர் கிடைக்காததால் அதை நம்பியிருந்த பல சிறு, குறு உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டன. மூடப்படாமல் சொற்ப ஆர்டர்களை கொண்டு இயங்கி வந்த ஒரு சில நிறுவனங்களில் ஒன்று ராமன் ஸ்டரக்சுரல்ஸ் அண்ட் அலைடு இன்டஸ்ட்ரிஸ். இதன் பங்குதாரரான எஸ்.சுப்ரமணியம், கடந்த 2016ம் ஆண்டு, திருச்சி, வேங்கூர் பகுதியில் 2 ஏக்கரில் இயற்கை விவசாயத்தில் தடம் பதிக்கிறார்.

தொழிற்சாலையை மூலிகை தோட்டமாக மாற்றிய சுப்ரமணியம்

இவரின் விவசாயம் தஞ்சை, சீனிவாசனை போன்றதென்றாலும் வர்த்தகம் நவீனம்.
அறுவடையான விளைபொருட்களை செல்போனில் புகைப்படம் எடுத்து தனது நண்பர்கள் கொண்ட வாட்ஸ்அப் குழுவில் பதிவிடுகிறார். இவரே விலையும் நிர்ணயிக்கிறார். 5 கி.மி. சுற்றளவிற்குள் உள்ளவர்களை மட்டுமே அந்த குழுவில் வைத்து கொண்டு வியாபாரம் செய்கிறார். வீடுகளுக்கே சென்று நேரடி விநியோகம் செய்கிறார். இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்படுவதால் இவர் கொடுக்கும் காய்கறிகளுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு அதிகம்.

தற்போது 5 குழுக்களில் 1200 வாடிக்கையாளர்கள். “இயற்கை முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய், பனைவெல்லாம் போன்றவைகளை நீங்களே தருவித்து கொடுங்கள் என வாடிக்கையாளர்கள் கேட்கத் தொடங்கினர். இதையடுத்து செக்கு எண்ணெய், தென்காசியிலிருந்து பனைவெல்லம் என ரசாயன கலப்பற்ற பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை தருவித்து எனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறேன். என் நிலத்தில் நாட்டுக்கோழி வளர்த்து, முட்டை மற்றும் கறிக் கோழியும் விற்கிறேன். மளிகைப் பொருட்களுடன் தரமாக சுத்தமாக கிடைக்கும் அனைத்து பொருட்களையும் என் வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு விற்று வருகிறேன்.

கொரோனா காலத்தில் கல்லூரி இளைஞர்கள் மீன் மற்றும் இறைச்சி வியாபாரம் செய்ய விரும்பி என்னிடம் உதவி கேட்டார்கள். லாபநோக்கின்றி புதிதாக ஒரு வாட்ஸ்அப் குழுவினை உருவாக்கி அவர்களின் விற்பனைக்கு உதவுகிறேன். ஒரு பெண்மணி வீட்டில் தயாரித்த பெங்காளி ஸ்வீட்டை விற்கச் சொன்னார். அதையும் குழு மூலம் விற்றேன். கைவினைப் பொருட்களும் விற்கிறோம். எனது வாடிக்கையாளர்களுக்கு எது கொடுத்தாலும் தரமாக கொடுக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகிறேன்” என்கிறார் சுப்ரமணியம்.

தொழிற்சாலை தற்போது பலசரக்கு கடை போல மாறியுள்ளது. தொழிற்சாலையின் பாதி இடம் உதிரி பாகங்கள் தயாரிக்க மீதி மூலிகை மற்றும் கீரைத் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய விவசாயம் நவீன வர்த்தகத்துடன் கைகோர்க்க, விவசாயம் இனி விவசாய உற்பத்தி தொழிற்சாலையாகப் போகிறது என்பதற்கான அடையாளம் தெரிகிறது. பத்தாண்டுகளுக்குப் பின்பு விவசாயிகள் கோடீஸ்வரர்களாக இருக்க வேண்டும். அதற்கு வர்த்தகமும் கார்ப்பரேட் ஆதிக்கமின்றி விவசாயிகள் கையில் இருக்க வேண்டும்

5

Leave A Reply

Your email address will not be published.