ஸ்கூட்டரிலும் வருகிறது சிஎன்ஜி தேர்வு.. பஜாஜுக்கு போட்டியாக டிவிஎஸ் களமிறக்க போகும் ஸ்கூட்டர் இதுதான்!
பிரபல இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் (Bajaj), உலகின் முதல் சிஎன்ஜி (CNG) பைக் மாடலான ஃப்ரீடம் 125 (Freedom 125)-யை இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. யாருமே எதிர்பார்த்திராத மிக குறைவான விலையிலேயே இந்த பைக்கை பஜாஜ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
ரூ. 95 ஆயிரம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே அந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையிலேயே பஜாஜ் நிறுவனத்திற்கு போட்டியாக மற்றுமொரு இந்திய நிறுவனம் சிஎன்ஜியில் இயங்கும் டூ-வீலரை உற்பத்தி செய்யும் பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தை தாயகமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (TVS Motor Company)யே, பஜாஜ்-க்கு போட்டியாக இந்தியாவில் சிஎன்ஜி டூ-வீலரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஜுபிடர் (Jupiter) ஸ்கூட்டர் மாடலிலேயே சிஎன்ஜி ஆப்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகின்றது.