1919ம் ஆண்டு செம்மஞ்செட்டியார், அவரது மகன் மாணிக்கம் செட்டியார் பெயரில் தொடங்கப்பட்டது தான் S.மாணிக்கம் செட்டியார் சன்ஸ். இதன் பிரதான வியாபாரம் உளுந்து மற்றும் பாசிப்பருப்பு விற்பனை.
திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே பாய்கடை சந்தில் உள்ளது ஷி.மாணிக்கம் செட்டியார் சன்ஸ். செம்மஞ்செட்டியாருக்குப் பிறகு மாணிக்கம் செட்டியார், தொடர்ந்து அவரது மகன் கிருஷ்ண மூர்த்தியால் நிர்வகிக்கப்பட்ட இந்நிறுவனம் தற்போது ஜெய்சங்கர், ஜெயராமன், வீரப்பன், வெங்கடகிருஷ்ணன், ராஜமாணிக்கம், வைத்தீஸ்வரன், கோபால் ஆகிய 7 அண்ணன், தம்பிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுகள் நூறை தொட்டுள்ள இந்நிறுவனம் இன்றும் உளுந்து, பாசிப்பருப்பு இரண்டையும் மொத்த விற்பனையில் மட்டுமே விற்று வருகிறார்கள்.
ஒருவர் பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபடுவது, ஒருவர் விற்பனையை கவனிப்பது, ஒருவர் மார்க்கெட்டிங் என நிறுவன பணிகளில் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டு அவற்றை திறம்பட கையாள்வதும் நிறுவன வளர்ச்சிக்கு காரணமாகும்.
“உளுந்தம் பருப்பை விவசாயிகளிடம் நேரடியாக சென்று தரத்தை சோதித்து கொள்முதல் செய்வதிலிருந்து தொடங்குகிறது எங்களின் தரத்திற்கான முதல்பணி” என்கின்றனர் சகோதரர்கள் வைத்தீஸ்வரன், கோபால் இருவரும்.
“கொள்முதல் செய்த உளுந்தம் பருப்பை முதலில் நாங்கள் தான் பயன்படுத்தி பார்ப்போம். வீட்டில் உளுந்தம் கஞ்சி வைத்து குடிப்போம். அப்போது அதன் வாசனையை நுகர்வோம். இட்லி வேக வைக்கும் போது வெளிவரும் வாசம், இட்லியின் மென்மை தன்மை ஆகியவற்றின் மூலமும், உளுந்த வடை செய்து பார்த்து ஒரு படிக்கு எத்தனை வடை வருகிறது என்ற எண்ணிக்கை பார்ப்பது என இப்படி உளுந்தின் தர பரிசோதனை நடைபெறும். கொள்முதல் செய்யப்பட்ட உளுந்து, பாசிப்பருப்பினை பரிசோதித்த பிறகே வியாபாரத்திற்கு கொண்டு செல்கிறோம்.
4வது தலைமுறையாக இதே பரிசோதனையை தொடர்ந்தே விற்பனை சந்தையில் நாங்கள் கால் பதிப்பதால் இன்றளவும் எங்கள் பொருட்களின் மீது தரக்குறைபாடு என்ற பேச்சே எழுந்ததில்லை.
திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகள், தஞ்சாவூர், கும்பகோணம், கோவில்பட்டி, தென்காசி மற்றும் வடமாநிலங்களிலிருந்து பொருட்களை கொள்முதல் செய்கிறோம். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பகுதியிலும் உளுந்து விளைச்சல் நன்றாக இருக்கும். அதன் அடிப்படையில் தான் எங்களின் கொள்முதல் அமையும். இயற்கை விவசாயம் குறைந்து உரங்களை நம்பி விவசாயம் நடப்பதால் தரத்தில் பெரும் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
மழை எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு விளைச்சல் அமையும். நிலத்தின் தன்மை, தண்ணீர், பயன்படுத்தும் உரத்தின் தன்மை இவை அனைத்தை பொறுத்தே உளுந்தின் தரம், ருசி அமையும். தலைமுறையான எங்கள் அனுபவம் தான் தரத்தை கண்டறிந்து கொள்முதல் செய்ய முடிகிறது.
உளுந்தினை ஆரம்பத்தில் ஆட்டுக்கல் மூலம் உடைத்து பிரிப்போம். ஏராளமான பெண் தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வந்தனர். பிறகு எங்கள் தந்தையார் இயந்திரத்தின் மூலம் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் அதிகளவில் விற்பனை நடைபெறுகிறது.
கிருஷ்ணா குண்டு உளுந்தம் பருப்பு என்ற பெயரில் விற்பனை செய்கிறோம். மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் எங்கள் டிரேட் மார்க் பெயரைச் சொல்லியே உபயோகிப்போர் வாங்கிச் செல்கிறார்கள்.
இதுவே எங்கள் தரத்திற்கான ஆதாரம். தலைமுறையாக நாங்கள் செய்யும் இந்த வியாபாரத்தில் எங்கள் விற்பனையாளர்களும், உபயோகிப்போருமே தலைமுறையாக உறவினை கொண்டுள்ளனர்” என்றனர் சகோதரர்கள் வைத்தீஸ்வரன், கோபால்.