நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பாலில் 50 சதவீதம், நாம் தினமும் குடிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. எஞ்சியுள்ள 50 சதவீதம் பாலில் இருந்து, பால் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதில் நெய் உற்பத்தி செய்ய 33 சதவீதம், தயிர் உற்பத்தி செய்ய 7 சதவீதம, பால்கோவா உற்பத்தி செய்ய 7 சதவீதம், பனீா் உற்பத்தி செய்ய 3 சதவீதம பயன்படுத்தப்படுகிறது.
நறுமணப்பால் கடைகளில் விற்கப்படும் வெளிநாட்டு குளிர்பானங்கள் தாகத்தை தணிக்க உதவுகிறதே தவிர, எந்தவித சத்துக்களையும் அளிப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில், பாலிலிருந்து தயாரிக்கப்படும் நறுமணப்பாலானது தாகத்தை தணிப்பதுடன், பாலிலுள்ள சத்துக்களும் உடலுக்கு கிடைக்கின்றன. கேரட்டைப் பயன்படுத்தி நறுமணப் பால் தயாரிக்க ஒரு லிட்டா் பாலுக்கு 150 கிராம் கேரட் தேவைப்படும். சூடான பாலில், கரண்டியால் கலக்கி பொண்டே, கேரட் சாறை ஊற்ற வேண்டும். கேரட்டானது நறுமணப் பாலுக்கு நிறத்தை கொடுப்பதுடன், விட்டமின் “ஏ“ சத்தையும் அளிக்கிறது. வாசனைக்காக 5 ஏலக்காய்த் தூள், 120 கிராம் சா்க்கரை சோ்க்க வேண்டும். பால் பொங்கும் வரை காய்ச்ச வேண்டும். பிறகு, ஆறவைத்து பாலித்தீன் கவா்களில் நிரப்பி, சீல் செய்து, குளிர்சாதனப் பெட்டியி்ல் வைத்து விற்பனை செய்யலாம்.
ஒரு லிட்டா் கேரட் நறுமணப்பால் தயாரிக்க ரூ.45 செலவாகிறது. அதை நாம் 200 மிலி் பாக்கெட்டுகளாக ரூ.15க்கு விற்கும்போது, லிட்டருக்கு ரூ.30 கிடைக்கிறது. நறுமணப் பாலை, உறை வெப்பநிலையில் 2 வாரங்கள் வரை கொடாமல் பாதுகாக்க முடியும்.
பால்பேடா
பாலை, அகன்ற வாய் உடைய பாத்திரத்தில் எடுத்து சூடு செய்ய வேண்டும். பால் கொதிக்க ஆரம்பித்த பிறகு, பாலின் அளவு குறைந்து, கெட்டியாகி கொண்டே வரும். பால் கெட்டியாக மாறும் போது, கிளறும் வேகம் அதிகமாகிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அடிபிடித்து விடும். கோவாவனது விலகி பாத்திரத்தின் அடிப்பாக்கம் தெரிந்தால், கோவா தயாராகிவிட்டது என்று பொருள். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பால்கோவாவில் ஒரு லிட்டா் பாலுக்கு 80 கிராம் வீதம சா்க்கரை சோ்த்தால் கிடைக்க கூடியது “பால்பேடா” ஆகும்.
ஒரு லிட்டா் பாலிலிருந்து 250 கிராம் பால்பேடா கிடைக்கும் . ஒரு கிலோ பால்பேடா உற்பத்தி செய்ய ரூ.200 செலவாகும். கி்லோவுக்கு ரூ.400க்கு விற்பதன் மூலம், ரூ.200 லாபம் கிடைக்கிறது. பால்பேடாவை, அறை வெப்பநிலையில் 7 நாட்களும், குளிர்சாதன பெட்டியில் ஒரு மாதம் வரையிலும் கெடாமல் பாதுகாக்காலாம்.
பனீா்
மேலைநாடுகளில் பயன்படுத்தப்படும் ”சீஸ்” என்ற பால் பொருளுக்கு நிகரானது பனீா். பாலை பொங்கும்வரை அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே காய்ச்ச வேண்டும். அசிட்டிக் அமிலத்தை ஒரு லிட்டா் பாலுக்கு ஒரு மிலி என்ற அளவில் எடுத்து, அதை 100 மிலி தண்ணீருடன் கலந்து கொதித்த பாலில் ஊற்ற வேண்டும். பால் திரிந்தபின், 5 நிமிடம் அப்படியே இருக்க வேண்டும். இப்போது இளம்பச்சை நிறத்தில் பால் ஊநீரானது மேலே நிற்கும். பனீரானது பாத்திரத்தின் அடியில் தங்கிவிடும். இதை காடாத்துணியால் சாதம் வடிப்பது போல் வடிகட்டலாம்.
பனீா் உள்ள துணியை, மூட்டை போல கட்டி அதன் மீது எடையை வைத்து ஒரு மணி நேரம் அழுத்தம் கொடுக்க வேண்டும். பிறகு அதை சில துண்டுகளாக வெட்டி, குளிர்ந்த நீரில் ஒன்று முதல் 2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு பனீா் கட்டிகளை வெளியில் எடுத்து 100 கிராம் அல்லது கால் கிலோ எடைகளில், பாக்கெட்டுகளாகப் போட்டு விற்பனை செய்யலாம். ஒரு லிட்டா் பாலிலிருந்து 160 கிராம் பனீா் கிடைக்கும். ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ.300 செலவாகும். ஒரு கிலோ பனீரை ரூ.450க்கு விற்பதன் மூலம் ரூ.150 லாபம் பெறலாம். பனீரை அறைவெப்பநிலையில், ஒரு நாளும், குளிர்சாதன பெட்டியில் 2 வாரம் வரையிலும் சேமித்து வைக்கலாம்.
மசாலா மோர்
தயிரை, மிக்சியில் போட்டு ஒரு நொடி ஓடவிட்டு எடுக்க வேண்டும். தயிரில் சரிபாதி அளவு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை சோ்த்து கலக்கலாம். இஞ்சி, கொத்தமல்லி, பச்சைமிளகாய் ஆகியவற்றை தலா 4 கிராம் எடுத்து மிக்சியில் அரைத்து, அதன் சாற்றை வடிகட்டியபிறகு, வாசமும் காரமும் தேவைப்படும் அளவுக்கு சோ்க்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு சோ்த்து, இறுதியாக சிறிதளவு நெய்யில் கடுகை தாளித்து, மோரி்ல் ஊற்ற வேண்டும். தயாரித்த மோரை 200 மி்லி அளவு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யலாம். இதை தயாரிக்க ரூ.5 செலவாகும். அதை ரூ.10க்கு விற்கும் போது, ரூ.5 லாபம் கிடைக்கும். மோரை 2 நாட்கள் வரை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம்.
ஐஸ்கிரீம்
பாலை சூடு செய்து, அதனுடன் ஒரு லிட்டா் பாலுக்கு 100 கிராம் என்ற அளவில் வெண்ணை சோ்க்க வேண்டும். அதனுடன் சா்க்கரை 220 கிராம், கொழுப்பு நீக்கிய பால்பவுடா் 100 கிராம், ஸ்டெபிலசா் மற்றும் எமல்சிபையா் ஒரு கிராம் சோ்க்க வேண்டும். ஐஸ்கிரீம் கலவை நன்றாக கொதித்தபிறகு, தண்ணீா் தொட்டியில் வைத்து குளிரச் செய்ய வேண்டும். ஐஸ்கிரீம் கலவையுடன் குறிப்பிட்ட நிறத்துக்குத் தேவையான நிறமியையும், சுவைக்கு தகுந்த எசன்சையும் சோ்த்த, ஐஸ்கிரீம் சா்னா் மிஷினில் ஊற்ற வேண்டும். அரைமணி நேரத்தில் ஐஸ்கிரீம் தயாராகிவிடும். அதை கப் அல்லது கோன்களில் பிடித்து சுவைக்கலாம்.
50 மிலி ஐஸ்கிரீம் கப் தயாரிக்க ரூ.8 செலவாகிறது. அதை ரூ.15க்கு விற்கும்போது, ரூ.7 லாபம் கிடைக்கிறது. ஐஸ்கிரீமை உறையச் செய்து பல மாதங்கள் வரை கெடாமல் பாதுகாக்கலாம்.
மொத்தத்தில், பாலைப் பதப்படுத்துவதன் மூலம், குளிர்சாதனப் பெட்டியில், 2 அல்லது 3 நாட்கள் வரை மட்டுமே கெடாமல் பாதுகாப்ப முடியும். ஆனால், மதிப்பூட்டிய பால் பொருட்களாக மாற்றும் போது, உற்பத்தியாளா்களுக்கு லாபம் அதிகரிப்பதுடன், பால் பொருள்களையும் அதிக நாட்கள் கெடாமல் பாதுகாக்க முடியும்.
முனைவா் கோ.ராஜராஜன்
இணைப் பேராசிரியா் மற்றம் தலைவா்,
கால்நடை உற்பத்திப் பொருட்கள் தொழில்நுட்பத் துறை,
கால்நடை மருத்தவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
உடுமலைப்பேட்டை- 642 205,
திருப்பூா்.