“இன்கம்டாக்ஸ் ஆபீசிலிருந்து நாங்க பேசுறோம்…” – போனில் இப்படி அழைப்பு
வந்தால் என்ன செய்வது?
இன்றைக்கு பலர் வருமான வரித் துறையிலிருந்து தகவல்கள் கேட்டு எனக்கு கடிதம் வந்துள்ளது, நோட்டீஸ் வந்துள்ளது என்று அடிக்கடி சொல்லிக் கேட்கிறோம். வருமான வரித் துறையில் இருந்து எப்போதும் ஒருவருடைய தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படுவதே இல்லை. உங்களின் வங்கிக் கணக்கு எண் என்ன போன்ற கேள்விகளும் தனிப்பட்ட தகவல்களே.
தனிப்பட்ட ஒருவருடைய வருமானம் தொடர்பான கேள்விகளை மட்டுமே வருமான வரித் துறை கேட்கும். அதுவும் எழுத்துபூர்வமாக மட்டுமே கேட்கும். வருமான வரித் துறையில் இருந்து பேசுகிறோம் என்று தொலைப்பேசி வழியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தனிப்பட்ட தகவல்களே கேட்கப்பட்டால், அதற்கு பதில் அளிக்கவேண்டிய அவசியம் இல்லை, அதனைக் கண்டு கொள்ளவேண்டியத் தேவையும் இல்லை.
குழப்பும் ரீ ஃபண்ட்: பலர் குழப்பமடையும் ஒரு விஷயம், வருமான வரித் துறையில் இந்தாண்டு உங்களுக்கு “ரீ ஃபண்ட்” வந்திருக்கிறது. உங்களுடைய வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுங்கள் என்று வரும் செய்திகளில் குழப்பமடைந்து விடுகிறார்கள். இது குறித்து பல செய்திகள் வந்திருக்கின்றன.
பான் எண்ணை கவனியுங்கள்: வருமான வரித் துறையில் இருந்து கடிதமோ, மின்னஞ்சலோ வந்தால் அவற்றில் மூன்று, நான்கு விஷயங்கள் கட்டாயம் இருக்கும். முதலாவதாக உங்களின் “பான் எண்” அதில் இடம் பெற்றிருக்கும். தகவல் கேட்கப்படுபவரின் “பான் எண்” கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். இரண்டாவதாக மதிப்பீடு ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது எந்த மதிப்பீடு ஆண்டு, நிதியாண்டு கணக்குப் படி ரீ ஃபண்ட் தரப்படுகிறது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யாமல், ரிட்டர்ன்ஸ் வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அலுவலகத்தை நாடுங்கள்: வருமான வரித் துறையில் இருந்து ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் கேட்டு எந்தக் கடிதம், மின்னஞ்சல்களும் அனுப்பப்படுவதில்லை. அப்படி கேட்கப்படும் தகவல்களும் ஒருவரது வருமானம் தொடர்புடையதாக மட்டும் இருக்குமே தவிர, தனிப்பட்ட தகவல்களை விசாரிப்பதாக இருக்காது. இவையெல்லாவற்றையும் மீறி அந்தக் கடிதம் மின்னஞ்சல் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் தைரியமாக வருமான வரித் துறை அலுவலகத்தையோ அல்லது வருமான வரித் துறையில் பணிபுரிபவர்களையோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.