உங்கள் மகளின் எதிர்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாப்பாக மாற்ற மத்திய அரசு வழங்கும் ஒரு அற்புதமான திட்டம் தான் இது. அதுதான் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) ஆகும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
செல்வமகள் சேமிப்பு திட்டம் என்றால் என்ன?
சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் அந்த பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் கணக்கை திறக்கலாம். இது அரசாங்கத்தால் வழங்கப்படும் மிகவும் நம்பகமான மற்றும் லாபகரமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.
இதில், பெற்றோர்கள் தங்கள் மகளின் பெயரில் ஒரு கணக்கைத் திறந்து, சிறிது சிறிதாக முதலீடு செய்து, 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய தொகையை உருவாக்கலாம். இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் சந்தையில் உள்ள வழக்கமான வங்கி நிலையான வைப்புத் தொகையை விட அதிகமாகும். மேலும், இதில் முதலீடு செய்வதன் மூலம், உங்களுக்கு வரி இல்லாத வருமானம் கிடைக்கும். செல்வ மகள் சேமிப்புத் திட்டம் தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது மிக உயர்ந்த வட்டி விகிதமாகக் கருதப்படுகிறது. இந்த வட்டி விகிதம் அரசாங்கத்தால் ஒவ்வொரு காலாண்டிலும் தீர்மானிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் திறக்க ரூ.250 மட்டும் போதும். அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்தத் தொகையை ஒரே தொகையாகவோ அல்லது தவணைகளாகவோ செலுத்தலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம்?
இந்தத் திட்டத்தில், கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே வைப்புத்தொகை செலுத்த வேண்டும். உங்கள் மகளுக்கு 21 வயது ஆகும்போது முழு முதிர்வு காலம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் வட்டி தொடர்கிறது. அதாவது 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் டெபாசிட் செய்ய அவசியமில்லை. ஆனாலும், இதற்கு வட்டி வசூலிக்கப்படாது. அது தொடர்ந்து வளரும்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அக்கவுண்ட் தொடங்குவதற்கான தகுதிகள்… பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மட்டுமே, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தையின் பெயரில் அக்கவுண்ட்டை திறக்க முடியும். பெண் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க முடியும். அதேபோல், ஒரு குடும்பத்தில் 3 பெண் குழந்தைகள் இருப்பின், இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அக்கவுண்ட்டை திறக்க முடியும்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்… பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, ஆரம்ப வைப்பு தொகை (ரொக்கம் / காசோலை / டிடி) ஆகவோ செலுத்தலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை…
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், சேமிப்பு கணக்கை திறக்க அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ் அல்லது பொது மற்றும் தனியார் வங்கிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். அங்கு விண்ணப்பப் படிவம் ஒன்று வழங்கப்படும். அதில் கேட்கப்பட்டுள்ள பெண் குழந்தையின் முக்கிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முக்கிய விவரங்களை பிழையில்லாமல் நிரப்ப வேண்டும். மேலும், தேவையான ஆவணங்களை உடன் இணைத்துக் கொள்ளவும்.
இதையடுத்து, அனைத்தையும் வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸில் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து செயல்முறையும் முடிந்த பிறகு உங்களுக்கு ஒரு பாஸ்புக் வழங்கப்படும். இந்த செயல்முறை அனைத்தையும் முடித்தால், உங்களுடைய பெண் குழந்தைக்கான சேமிப்பு திட்ட அக்கவுண்ட் தொடங்கப்பட்டுவிடும். இதை தொடர்ந்து, நீங்கள் அக்கவுண்ட்டில் பணத்தை டெபாசிட் செய்ய தொடங்கலாம்.



