திடீர் செலவுகள் எப்போது வேண்டு மானாலும் வரலாம். அப்படி வரும்போது, இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் கடன் வாங்கித்தான் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவசர காலத்தில் எந்தக் கடனை வாங்கினால் நல்லது என்று முடிவெடுக்க முடியாமல் எங்கேயோ கடன் வாங்கி, அதிக அளவில் வட்டி கட்டி பெரும் இழப்பினைச் சந்திக்கிறோம்.
நகைக் கடன் :
நகைக் கடனை சுமார் 30 நிமிடங்களில் பெறலாம்; சராசரியான வட்டி விகிதம்; வருடத்திற்கு ஒருமுறை வட்டி கட்டினால் போதுமானது; அடமானக் கடன் என்பதால் சிபில் குறித்த கவலை அதிகம் தேவையில்லை. ஆனால், வாங்கிய கடனை, குறித்த காலத்தில் சரியாக திரும்பத் தராமல் போனால் அந்த நகையை இழக்கவேண்டிய நிலை ஏற்படலாம்.
காப்பீட்டுக் கடன்:
வட்டி விகிதம் குறைவு; எளிதில் கிடைக்கும்; குறைவான ஆவணங்கள் சமர்ப்பித்தால் போதும். பாலிசிகள் அடமானத்தில் இருக்கும்போது, பாலிசிதாரருக்கு அசம்பா விதம் ஏற்பட்டால், நாமினிக்கு நேரடியாகப் பணம் போகாது. கடன் தொகைபோக, மீதமுள்ள பணமே நாமினிக்குக் கிடைக்கும். வட்டியைச் சரியாக கட்டாதபோது, பாலிசியை இழக்க நேரிடும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வாங்கும் கடன்: நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் பெறுவதில் இருக்கும் சௌகர்யம், எந்தப் பொருளையும் அடமானமாகத் தராமல், உடனே கடன் கிடைக்கும் என்பது தான். தவிர, கடனாக வாங்கும் பணத்துக்கு பெரும்பாலும், வட்டி எதுவும் தரவேண்டிய தேவை இருக்காது. வாங்கிய கடனைத் திரும்பத் தரமுடியாத நிலை ஏற்பட்டால், உறவுக்குள் மனக்கசப்புகளை ஏற்படுத்தும்.
கிரெடிட் கார்டு கடன் :
கிரெடிட் கார்டுமூலம் எந்த நேரத்திலும் கடன் கிடைக்கும் என்றாலும், இந்த வகை கடனுக்கு வட்டி விகிதம் மிக மிக அதிகம். மறைமுகக் கட்டணங்கள் அதிகம்; கடனை சரியாகக் கட்டவிட்டால் சிபில் ஸ்கோர் பாதிக்கும்.
பங்கு, ஃபண்ட் அடமானக் கடன்:
மற்ற கடன்களைப்போல வட்டியுடன் சேர்த்து அசலையும் கட்டத் தேவையில்லை. வட்டி மட்டும் கட்டினால் போது மானது; எளிதாகப் பெற முடியும்; மற்ற கடன்களைவிட வட்டி விகிதம் குறைவு. வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல்போனால், அடமானமாக உள்ள பங்குகளை விற்று கடனுக்கு ஈடாக அந்த பணத்தை வங்கி எடுத்துக்கொள்ளும்.
திடீரென்று பங்குகளின் விலை இறக்கத்தைச் சந்தித்தால், மீதி பணத்தை வங்கிகள் உடனே கட்டச் சொல்லி வற்புறுத்த வாய்ப்பு உண்டு. எல்லா விதமான கடனிலும் ஏதோ ஒரு சிக்கல் உள்ளது. ஆகையால் முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரத் தேவைகளுக்கென தனியாக மாதம் மாதம் பணத்தை சேமித்து வைப்பது நல்லது.