ஏலச் சீட்டு யாருக்கு சாதகம்?
ஏலச் சீட்டு யாருக்கு சாதகம்?
பக்கத்து வீட்டுக்காரருடன் பழகாமல் வாழலாம். ஆனால் சிட்பண்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்பின்றி நடுத்தர மக்கள் வாழ்வது சாத்தியமில்லை. அத்தகையதொரு முக்கிய பங்களிப்பை பெற்றுவிட்டது சிட்பண்ட்ஸ் என்று சொல்லும் ஏலச்சீட்டு பிடிப்பது. திருமணச் செலவு, படிப்புச் செலவு, வியாபார விரிவாக்கம் என ஏதாவது ஒரு தேவையை கருத்தில் கொண்டு சீட்டு கட்டுவோர்கள் உண்டு.
ஒரு டிவி வாங்க வேண்டுமென்றால் தனியார் நிதி நிறுவனங்களில் தவணை முறையில் வாங்கி மாதாமாதம் கட்டுவோம். கட்டாவிட்டால் அபராத கட்டணம் வேறு அழ வேண்டும். உங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டுமென்றால் திட்டமிடுங்கள். உங்கள் ஆசையை ஒரு வருடத்திற்கு தள்ளிப் போடுங்கள். மாதம் ஆயிரம் என சீட்டு போடுங்கள். பனிரெண்டாவது மாதம் உங்கள் கையில் 12 ஆயிரம் ரூபாய் இருக்கும். கையில் பணத்தை வைத்துக் கொண்டு பொருள் வாங்கினால் விலை குறைவாகவும், விருப்பத்திற்கேற்பவும் வாங்கலாம். தவணை முறையில் வாங்குவதைவிட விலை குறைவாகவும் வாங்கலாம்.
மற்றொன்று வட்டிப் பணம் வாங்கி மாதாமாதம் வட்டிக் கட்டிக் கொண்டு அசலை அடைக்க முடியாமல் வாங்கிய பணத்திற்கு மேல் வட்டிக் கட்டுவோர் எண்ணிக்கை அதிகம் உண்டு. இதை தவிர்க்க சிறந்த வழி ஏலச்சீட்டு கட்டி கடனை அடைப்பது. வங்கிக் கடனுடன் ஒப்பிடும் போது வட்டி கணக்கிட்டால் ஏலச்சீட்டு தான் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.
பொருள் வாங்க வேண்டுமென்றால் கடைசி மாதமும், வட்டிக் கடனை அடைக்க என்றால் ஏலத்தை பொறுத்தும் எந்த மாதத்திலும் ஏலம் எடுத்து உங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம். இப்படி பல்வேறு சிறப்புமிக்க ஏலச்சீட்டு குறித்து நீங்கள் சில முன்னெச்சரிக்கை விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது. பத்து மாதம், இருபது மாதம், ஐம்பது மாதம் என பல விதங்களில் ஏலச் சீட்டு உண்டு. பத்தாயிரம் ரூபாய் ஏலச்சீட்டு என்றால் பத்து மாதமும், ஐம்பது மாத ஏலச் சீட்டு என்றால் ஐம்பது மாதமும் என தொகைக்கேற்ப மாதங்கள் நிர்ணயிக்கப்படும். அப்போது தான் கட்டுவதற்கு எளிதாக இருக்கும் என்பதே இதன் கணக்காகும்.
ஏலச் சீட்டில் ஆரம்பத்தில் குறைவான தொகை கட்டவேண்டும். நடுவில் கொஞ்சம் அதிகமாகவும், கடைசி மாதங்களில் கிட்டத்தட்ட முழு தொகையையும் கட்ட வேண்டியிருக்கும். அவசரத் தேவைக்கு வட்டிக்கு கடன் வாங்க நினைப்பவர்கள் சீட்டின் ஆரம்பத்தில் ஏலம் எடுத்தால் வட்டித் தொகை லாபமாகும். சேமிப்பு அடிப்படையில் சீட்டில் சேருபவர்கள் சீட்டின் இறுதி மாதங்களில் எடுக்கும் போது நல்ல லாபம் கிடைக்கும்.
மாதாமாதம் ஏலம் மூலம் நடைபெறும் சீட்டு, முன்னரே நிர்ணயிக்கப்பட்ட மாதங்களில் இவர் இவருக்கு சீட்டு என நிர்ணயிக்கப்பட்ட மாதங்களில் சீட்டு பணம் வழங்குவது, குலுக்கல் முறையில் சீட்டுப் பணம் வழங்குவது என பல வகைகளில் சீட்டு பிடிப்போர் உண்டு. பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத ஏலச் சீட்டு நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. பதிவு செய்த நிறுவனங்களில் நீங்கள் சீட்டு போட்டால் ஏலம் எடுக்கும் போது பணத்தை பெற பத்திரம் எழுதித் தருவது, வருமானச் சான்றிதழ் தருவது, ஜாமீன்தாரர் கையொப்பம் என பல்வேறு விஷயங்கள் இருக்கும்.
ஆனால் பதிவு பெறாத ஏலச்சீட்டு நிறுவனம் என்றால் அதிகபட்சமாக ஒரு புரோநோட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டோ அல்லது பூர்த்தி செய்யப்படாத வங்கிக் காசோலை வாங்கிக் கொண்டோ உங்களுக்கு பணத்தை கொடுத்துவிடுவார்கள். எளிமையாக கிடைக்கிறது என்றாலும் இத்தகைய பதிவு செய்யப்படாத ஏலச்சீட்டு நடத்துபவர்களிடம் சீட்டு போடுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.
பதிவு செய்யப்படாத நபரிடம் நீங்கள் சீட்டு போட முடிவெடுத்தால் அவரை பற்றி நீங்கள் அக்கம்பக்கத்தில் விசாரித்து கொள்ளுங்கள். அவர் குறிப்பிட்ட இடத்தில் எத்தனை ஆண்டுகள் தொழில் நடத்துகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது அவர் அந்த தொழிலை செய்கிறார் என்றால் மட்டுமே அவரை நம்பலாம். வீட்டு விலாசத்தை தெரிந்து கொள்வது நல்லது. ஆறு மாதம், ஒரு வருடம் என புதிதாக குடியிருப்பவர்களிடமோ, உங்கள் அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களிடமோ சீட்டு போடாதீர்கள். முக்கியமாக வாடகை வீட்டில் குடியிருப்பவர் என்றால் அவரிடம் சீட்டு போடுவதை தவிர்ப்பது நல்லது.
ஏலச்சீட்டுப் பணத்தை எப்போது எடுக்கிறோம், எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து அது லாபமா, நஷ்டமா என்பது முடிவாகும். சீட்டின் முடிவில் மொத்தமாகப் பணம் பெற்றோம் என்றால் நிச்சயமாக அது லாபம் தான். தொழில் அபிவிருத்திக்கோ, வட்டிக்கடனை அடைப்பதற்கோ சீட்டு எடுத்தாலும் அது லாபம் தான். ஆனால் திட்டமிடல் இன்றி சீட்டு போட்டு, சும்மாவாவது ஏலத்தில் கலந்து கொண்டு சீட்டு எடுத்தால், அது நஷ்டத்தில் கொண்டு போய் சேர்க்கும் அபாயமும் உண்டு.
காரணம் சீட்டு எடுத்தபின் உங்கள் மாதாந்திர வருவாயில் சேதாரம் ஏற்பட்டாலோ, ஒரு விபத்து என்றாலோ சீட்டு கட்ட முடியாமல் திண்டாட வேண்டி வரும். எனவே ஏலச்சீட்டில் சேர்வதென்பது உங்கள் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஏலச் சீட்டு தவறில்லை. வட்டி கட்டுவதைவிட ஏலச்சீட்டு கட்டிவிடலாம் என நீங்கள் நினைப்பது சரி தான். அதே வேளையில் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு நம் பணத்திற்குப் பாதுகாப்பு என்பதையும் மறக்க வேண்டாம்.