வியாபார சந்தையில் மகளிரின் பங்கு:
அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம் என ‘தினங்கள்’ கடைபிடிக்கப்படும் கலாச்சாரம் மேல்நாட்டு கலாச்சாரமாகவே இருந்தது. வெளிநாடுகளில் கூட்டுக் குடும்ப நடைமுறை இல்லாமல், ‘கிளிக்கு ரெக்கை முளைத்தவுடன் பறந்து போகும் நிலையில்’, தலைமுறைகள் அமைந்ததால், தாய், தந்தை உறவுகள், உணர்வுகள் குறித்த எண்ணங்கள் மழுங்கிப் போனது. தாய், தந்தை, அண்ணன், அக்கா, தங்கை உறவுகள் அற்றுப் போனதால் பாலின கலாச்சார சீர்கேடுகளும் அதிகரிக்கத் தொடங்கியது. எல்லாம் சரி! ஆணுடன் சக மனித பாலினமாக வாழும் பெண்களுக்கு மட்டும் ஏன் மகளிர் தினம்.?
காரணம்.. மகளிர் மீதான அடக்குமுறை, ஒடுக்கு முறை, அடிமைத் தனம். இவற்றை பற்றி விவாதிக்க, வருடத்திற்கு ஒருமுறையாவது நாம் யோசிக்க, அடிமைத்தனத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க உருவானதே மகளிர் தினம் என்பதே சரியான காரணமாக இருக்க முடியும். பெண்ணுக்கு என்னவெல்லாம் நாம் செய்ய வேண்டும் என மகளிர் தினத்தன்று சிந்திப்பது ஒருபுறம் என்றால், அதைத் தாண்டி பெண்கள் இந்த சமுதாயத்திற்கு, சாமானிய மக்களிடம் புழங்கி, வியாபார சந்தையில் என்னவெல்லாம் செய்து வருகிறார்கள் என்பதை பார்ப்போம்..!
புஷ்பராணி : திருச்சி, காஜாமலை காலனி பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 5 ரூபாய்க்கு உணவு விற்பனை செய்து வருகிறார். ஊனமுற்றவர்களுக்கு பாதி விலையிலும், ஆதரவற்றவர்களுக்கு, இலவசமாகவும் உணவு வழங்குகிறார்.
காளான் பிரியாணி, வாழைப்பூ பிரியாணி, நெய் சாதம், புதினா சாதம், கொள்ளு சாதம், புளி சாதம், மிளகு சாதம், பூண்டு சாதம், வெங்காய சாதம் என 30 விதமான சாத வகைகள். தினமும் குறைந்தது 6 வகைகள் விற்கப்படுகிறது. 5 ரூபாய்க்கு எப்படி சாத்தியமாகிறது.?
“காந்தி மார்க்கெட்டில் மொத்த விலையில் காய்கறி, மளிகை சாமான்களை வாங்குகிறோம். ‘5 ரூபாய்க்கு விற்கிறோம்’ எனத் தெரிந்த மொத்த வியாபாரிகள், மற்றவர்களுக்கு வழங்கும் விலையை விட மேலும் குறைவான விலைக்குத் தருகிறார்கள். சமைக்க, குடிக்க தண்ணீரை பொதுக் குழாயில் பிடித்துக் கொள்கிறோம்.
விலைவாசி உயர்ந்தாலும், விலை ஏற்றாமல், தரமும் குறையாமல், வியாபாரத்தை விடாமல் தொடர்ந்து செய்வோம். கல்லா நிறையாவிட்டாலும் மனம் நிறைகிறது. அது போதும் எங்களுக்கு” என்கிறார் புஷ்பராணி
துர்கா : கே.எம்.எஸ். என்ற பெயரில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். பெரும்பாலான ஜூஸ் கடைகளில்கெமிக்கல் கலந்து விற்கிறார்கள். இதனால் உடலில் ஏராள மான பக்க விளைவுகள், நோய்கள் உண்டா கின்றன. ஆனால் துர்கா, ஜூஸ் தயாரிக்க கெமிக்கல் எதுவும் கலப்பதில்லை.
ரோஸ் மில்க் தயாரிக்க பன்னீர் ரோஜா வாங்கி வெயிலில் காய வைத்து பவுடர் செய்தும், பாதாம் பாலுக்கு பாதாம் அரைத்து மஞ்சள் கலருக்காக சிறிதளவு குங்குமப்பூ சேர்த்தும், எலுமிச்சை ஜூஸ்க்கு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை ஜூஸ் போடுவதும், ஃப்ரூட் மிக்ஸர்ருக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சந்தையில் அழுகாத தரமான பழங்களை வாங்கி சுத்தமான முறையில் கலந்து தயார் செய்து கொடுப்பதே இவரின் சிறப்பம்சம்..! ஜுஸ் தயாரித்து விற்பனை செய்வதை, பயிற்சி மூலம் கற்றுத் தேர்ந்து இந்த வியாபாரத்தை செய்து வரும் துர்கா, “வெயில் காலங்களில் விற்று வரும் லாபம் தான், விற்பனை குறைவான மழை, பனி காலங்களை நகர்த்த முடிகிறது. என்றாலும் தரமான பொருளையே மக்களுக்கு தருகிறோம் என்ற மனதிருப்தியே எல்லா காலங்களிலும் மனநிறைவாய் இருக்கச் செய்கிறது” என்கிறார்.
ராபித் பஸரியா : கடந்த 10 வருடகாலமாக புடவை வியாபாரம் செய்து வருகிறார். சிப்காட், பெங்களூர், கலாசிபாளையம், நிலக்கோட்டையில் உள்ள சின்னாளம்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து துணிகளை மொத்த விலைக்கு தருவித்து விற்பனை செய்து வருகிறார். “கடை என்றால் அட்வான்ஸ், வாடகை, கரண்ட் பில் என்றெல்லாம் செலவுகள் இருக்கும்.
அதனடிப்படையில் விலை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் வீட்டில் விற்கும் போது கொள்முதல் செலவுகள் தாண்டி குறைந்த லாபம் வைத்து விற்றால் விற்பனை அதிகரிக்கும். துணிகள் அநாவசிய மாக தேங்காது. அப்போது தான் புதிய புதிய மாடல் களை நம்மால் தருவித்துத் தர இயலும்” என்கிறார் ராபித் பஸரியா..!
அன்புமாரி : திருச்சி, ஜங்ஷன், ரயில் நிலையம் அருகில் 36 வருடங்களாக செருப்புக் கடை வைத்துள்ளார் அன்புமாரி.
“ஆரம்பத்தில் தோல் செருப்பினை தயாரித்து விற்று வந்தோம். தற்போது தோல் செருப்புகளின் விற்பனை குறைந்து ரெக்ஸின், ஃபேன்ஸி செருப்புகளின் விற்பனை அதிகரித்துள்ளது. தோல் செருப்புகளை விற்று கிடைக்கும் வருவாய் ஃபேன்ஸி செருப்புகளில் கிடைப்பதில்லை. தோல் செருப்புகளில் அதிக டிசைன்ஸ் இருப்பதில்லை.
ஆனால் தோல் செருப்பு தான் உடலுக்கு நல்லது. உடல் வெப்பத்தை அதிகரிக்காது, பித்தவெடிப்பு போன்றவைகள் ஏற்படாது. செருப்பின் தரம் பற்றி தெரியாமல் விலையில் பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் அவர்கள் பெரிய ஷோரூமில் பேரம் பேசுவதில்லை” என்பதே அன்புமாரியின் ஆதங்கம்.
சாந்தி : திருச்சி, புத்தூர், வண்ணாரப்பேட்டையில் மாமனார், மாமியார் செய்து வந்த அயர்ன் தொழிலையே இவரும் தொடர்ந்து செய்து வருகிறார். ஒரு துணிக்கு ரூ.6 முதல் 8 வரையிலும், ஒரு புடவைக்கு ரூ.15 வாங்கினாலும் தொழில் நடப்பதென்னவோ வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் மட்டுமே.
வார வருமானம் ரூ.500ஐ தாண்டாது. இந்நிலையிலும் கிழிந்த துணிகளை கவனிக்காமல் வாங்கி அயர்ன் செய்து திருப்பித் தரும் போது வாடிக்கையாளர்கள் அதைக் கண்டு, இவர்கள் மேல் பழி போட்டு, கிழிந்து போன பழைய துணிக்கு புதுத் துணிக்குரிய காசினை வாங்கிவிடுகிறார்கள். “இந்த மனசாட்சி இல்லாத மனிதர்களுக்கு மத்தியில் 40 வருடமாக அயர்ன் தொழிலை செய்து வருவதன் காரணம் தொழிலை தெய்வமாக மதிப்பதே..!” என்கிறார் சாந்தி.
லாவண்யா : காந்தி மார்க்கெட்டில் பதினைந்து வருடமாக பானை வியாபாரம் செய்து வருகிறார். “சீஸன் வியாபாரம். திருச்சியில் திருவானைக்காவல் மற்றும் தஞ்சாவூர், கும்பகோணம், விருத்தாச்சலம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து பானை வாங்கி வண்ணம் தீட்டி விற்பனை செய்கிறோம்.
முகூர்த்த நாட்கள், தைப்பொங்கல், தீபாவளி, பெரிய கார்த்திகை போன்ற நாட்களில் மட்டுமே வருமானம் இருக்கும். சீசன் வியாபாரம் என்று கூட சொல்லலாம். தற்பொழுது அரசாங்கம், மண், வைக்கோல் அனைத்திற்கும் விலை வைத்து விட்டது. பானை விலை உயர்வுக்கு இதுவே காரணம். பெரிய பானை, சாழ் செய்பவர்கள் 2 நபர்கள் மட்டுமே இருக்கிறார்கள், இவர்களும் இல்லையென்றால் இத்தொழில் நலிவடைந்து விடும்” என்கிறார் லாவண்யா.